Skip to main content

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

கட்டுரை - சாக்லா

 

 

Sakla unmasks Na. Muthukumar's  Pookal Pookkum Tharunam


தசாப்தங்களைக் கடந்தாலும் நம்மை நொடி பொழுதில் கரைய வைக்கும் ஆற்றலும் அலாதியும் பாடல்களுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல. பாடல்கள் என்றாலே ஓர் பரவசம்தான். அதில், மூழ்கித் திளைத்து முத்துக்களை எடுக்கிறோமோ இல்லையோ, மூச்சுத் திணறும்படியான நினைவுகளையும், உணர்ச்சிப் பெருக்குகளையும் அள்ளிச்சென்று வருகிறோம். கவிதை என்பது குடிக்கக் குடிக்க அதன் போதையில் தள்ளாட முடியும். அந்த துணிகரமான அனுபவம் வாய்க்க வரம் பெற்றவர்களே நாம். ஆனால், பாடலும் இசையும் சுண்டி இழுக்கும் ஐந்து நிமிட போதை. அப்படியே, ஆயிரம் முறை கேட்டாலும் அதே சுவை, அதே காதல், அதே சுகம், அதே இன்பம், அதே போதை என கொஞ்சம் கூட உருமாறாமல் நம்மை தொந்தரவு செய்யும் பாடல் நா. முத்துக்குமாரின் ‘பூக்கள் பூக்கும் தருணம்...’ பாடல். 

 

அதிகாலை நேரங்களில் பக்திப் பாடல்களைவிட இன்று காதல் பாடல்கள் புலறாத வீடுகள் இல்லை. அந்த விடியலை இந்த நூற்றாண்டுகளில் நா முத்துக்குமார்,


“பூக்கள் பூக்கும் தருணம் 

ஆருயிரே 

பார்த்தது யாரும் இல்லையே”


என்று பூக்கள் பூக்கும் தருணத்தை, அந்தக் கணத்தைப் பார்க்கச் சொல்லிவிடுகிறார். பூக்கள் என்றாலே ஓர் அழகுதான். அழகு என்ற சொல்லே பூக்களில் இருந்துதான் உருவானது என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்லிச் சொல்லி சிலாகிக்க வைத்துள்ளார். ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பே பூ பூத்துவிடுகிறது. ஒரு மனிதன் இறந்த பின்பும் பூ அவன் மேல் பூத்துவிடுகிறது. பூக்கள் மட்டுமே மனிதர்களுக்கு எல்லா நேரங்களிலும் அழகு சேர்க்கிறது. அந்த பூ பூக்கும் நேரத்தை யார்தான் பார்திருக்கிறார்கள் என்றால், அதன் மர்மத்தை நா. முத்துக்குமார் பாடலில் முடிச்சவிழ்க்கிறார். இயற்கையின் மர்மங்களை தேடிச் செல்வது ஆத்மார்த்த அழகல்லவா! 

 

Sakla unmasks Na. Muthukumar's  Pookal Pookkum Tharunam

 

“இரவும் விடியவில்லையே 

அது முடிந்தால் 

பகலும் முடியவில்லையே 

பூந்தளிரே!!!”


என்று இசையின் ஆரோகணத்தில் சொல்லிச் செல்லும் முத்துக்குமார், எத்தனை எத்தனை மேலதிக சிந்தனைக்கு இட்டுச் செல்கிறார். ஒரு பூ பூக்கும் நேரம் என்பது இரவு பகலைப் பிரசவிக்கும் நேரம். நிலவு சூரியனுக்கு வாசல் திறந்துகொண்டிருக்கும் நேரம். அப்படியென்றால் அது இரவா? பகலா? ஆனால், இந்த வரிகளில் பகலும் முடியவில்லை, இரவும் விடியவில்லை, ஆனால் பூக்கள் புன்னகைத்துவிட்டதே அவர் சொல்லியது போலவே! என்ன புதுமை. 

 

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. வார்த்தைகள் இல்லாத ஒரு மொழியைப் பாருங்கள்,


“வார்த்தை தேவையில்லை

வாழும் காலம்வரை

பாவை பார்வை மொழி

பேசுமே...

நேற்று தேவையில்லை 

நாளை தேவையில்லை 

இன்று

இந்த நொடி போதுமே”

 

Sakla unmasks Na. Muthukumar's 'Pookal Pookkum Tharunam...' song

 

 

பெண் என்பவள் பேசினாள்தான் மொழி விளங்குமா? பெண்களின் வசீகரத்தை, அழகியலை பல்வேறு  கோணங்களில் ரசித்திருந்தாலும், பேசவே வேண்டாம் என்பதும், அதைக் காலத்தோடு ஒப்பிட்டு நொடிகளின் விளிம்பில் கசியும் கால இறப்பின் ஏக்கத்தை எவ்வளவு ஆத்மார்த்தமாய் ‘இந்த நொடி போதுமே’ என்றாலும் கேட்க கேட்க போதை போதவில்லையே. பார்வையின் மொழியை, மொழியின் அகழ்வாய்வை கவிஞர்கள் ஆராய்ச்சி செய்வது நாகரிகம் பிறந்த காலத்தைவிட நம்மை பின்னோக்கி கூட்டிச் சென்றுவிடுவர். 

 

மேகம் என்பது ஒரு நிலையாமை. மனித வாழ்வே நிலையாமைதான். ஆனாலும், ஏதோ ஒரு நிலையான உறவு வேண்டும் என்ற மனிதனின் பயணம் முடிவதில்லை. அதற்காக மனிதன் படும் பாடு பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே மேற்கொள்ளும் மூர்ச்சைகொண்டிருக்கும் தவம் என்பதே எதார்த்தம். அப்படியே, நீளும் ஒரு உறவை முத்துக்குமார் 


“எந்த மேகம் இது

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈரமழை தூவுதே

எந்த உறவு இது

எதுவும் புரியவில்லை

என்ற போதும் இது நீளுதே...” 

 


கேட்கும்போது நீண்டுகொண்டுதானல்லவா இருக்கிறது. 


“பாதை முடிந்த பிறகும் 

இந்த உலகில்

பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே

பறவை மறைந்த பிறகும்

இலை தொடங்கும் நடனம்

முடிவதில்லையே”

 

Sakla unmasks Na. Muthukumar's 'Pookal Pookkum Tharunam...' song

 

ஒரு ஜென் தத்துவ பார்வையை விதைத்துச் சென்றுள்ளார். பாதை, பயணம் இரண்டிற்கும் இடையே உள்ளே உறவு என்பது பூக்களுக்கும் கொடிகளுக்கும் இடையே உள்ள தொடர்பாகவே கருதுகிறேன். ஒரு கொடியில் பூ பூத்து உதிர்ந்தாலும் கொடிகள் பூப்பதை நிறுத்திக்கொள்வதில்லை. பயணமும் அப்படியே...  


காற்றில் பறக்கும் இலையை நடனம் என்பவர், அது சருகுகளான பின்பும் காற்றில் சலங்கை கட்டி ஆடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. வாழ்வில் உயிர் ஆடும் ஆட்டம் ஒருநாள் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. இலைகளின் நடனத்திற்கு மரணம் உண்டா?


“மரணத்தில் அழுகிறீர்கள்.

பூக்களை மட்டும் 

ஏன் 

புன்னகையுடன் சூட்டுகிறீர்கள்.” 


என்று எனது ‘உயிராடல்’ கவிதைத் தொகுப்பில் சொன்னதும், நா. முத்துக்குமார் மரணத்தில் தமிழ் உலகம் அழுதாலும், அவர் சொல்லிச் சென்ற பூக்கள் பூக்கும் தருணத்தை நாம் புன்னகையுடன் சூட்டிக்கொண்டுதானே இருக்கிறோம்.

 

 

 

 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

“கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Poet statue for Tamiloil says CM M.K.Stalin

 

கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். விசயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர் ஆகும். பாரதியாரின் வழித்தோன்றலாகவும்,பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.

 

தமிழ்ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

 

இந்நிலையில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்திருந்தனர். இதனையடுத்து கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டினை முன்னிட்டு கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 50 இலட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.