
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது முட்டுக்காடு ஊராட்சி. இங்குள்ள வேங்கைவயல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி மனித கழிவு மிதந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.03.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி முகமது சாபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி ஆஜராகி வாதிடுகையில், “வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 26.12.2022 அன்று இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரணையில் முழு திருப்தி இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதே சமயம் இந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு இறுதி விசாரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கடந்த 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கில் பட்டியலின மக்களையே குற்றவாளிகளாகவே கருதிக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடிக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்துக் குற்றப்பத்திரிக்கையில் பொய்யான தகவல் கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “மனுதாரர் தரப்பில் சிபிசிஐடி போலீசார் மீது மனுதாரர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். எனவே தமிழக அரசு விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். ஏப்ரல் 21ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.