Skip to main content

கிரிவலப்பாதையில் சாமியார்களுடன் சாமியாராக சில நாட்கள்...

Published on 23/08/2018 | Edited on 23/08/2018

எத்தனை எத்தனை மாற்றங்கள் அத்தனையும் வியாபாரங்கள். இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது திருவண்ணாமலை கிரிவலப்பாதையைப்பற்றி. திருவண்ணாமலை மலையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளது என்கிறது புராணம். அது உண்மையோ பொய்யோ. அடிக்கு ஒரு சாதுவும், சாமியாரும் உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை. இதில் வசதியுள்ளவர்கள் ஆஸ்ரமம் அமைத்து தங்கியுள்ளார்கள். அது இல்லாதவர்கள் நடைபாதையில் படுத்துக்கிடக்கின்றனர். ஆஸ்ரமம் வைத்துள்ளவர்கள் நோக்கம் பணம். சாலையில் படுத்துள்ளவர்களின் நோக்கம் ???



 

girivalam


 

அருணகிரிநாதர், சேஷாத்திரிசுவாமிகள் பிறந்த மண்ணில், ரமணர், விசிறி சாமியார் போன்றோர் வந்து ஆன்மீகம் வளர தொண்டு செய்து அண்ணாமலையாரின் புகழை வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பரவ செய்தார்கள். ஆனால் இன்று ஆஸ்ரமம் என்ற பெயரில் போலி சாமியார்கள் நிறையப்பேர் கிரிவலப்பாதையில் இருந்தபடி தவறு செய்கிறார்கள் என்றார்கள். அது உண்மையா என அறிய நக்கீரன் நிருபர் என காட்டிக்கொள்ளாமல் காவி வேட்டி, நெற்றியில் விபூதி என கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள சாதுக்களுடன் ஒரு வாரம் பழகினோம். தற்போதைய நிலையில் கிரிவலப்பாதை மற்றும் மலையில் சாதுக்கள், சாமியார்கள் என சுமார் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 14 கி.மீ சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் 10 கி.மீ தூரத்துக்கு கீற்றில் கட்டப்பட்ட கோயில்கள் முதல் கான்கீரிட் கோயில்கள் வரையுள்ளன. எல்லாமே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டவை. 90 சதவிதம் தனிநபர்கள் நடத்துவது. 
 

 

 

திருநேர் அண்ணாமலை பகுதியில் இருந்த சாதுக்களுடன் அவர்களுடனே படுப்பது, சாப்பிடுவது என இரண்டு நாள் இருந்தோம். காலையில் எழுந்து அருகில் உள்ள குளம் அல்லது குடிநீர் டேங்கில் வரும் தண்ணீரை பிடித்து குளித்துவிட்டு நெற்றி, கை, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொள்கிறார்கள். பக்தியாக அருகில் உள்ள கோயில்களில் உள்ள சாமியையும், மலையையும் வணங்கிவிட்டு சிலர் காலை உணவை முடித்துவிட்டு பக்தர்கள் கிரிவலம் வர அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் நடைபாதையில் 10மணிக்கெல்லாம் படுத்துக்கொண்டு கதைப்பேச தொடங்கிவிடுகிறார்கள். அப்படி ‘ஆனந்தமாக’ இருந்த சில சாதுக்களிடம் சிநேகம் பிடித்தோம், அவர்கள் நம்மிடம், இங்க மட்டும் 200 பேர்க்கு மேல இருக்கு சாமி. ரொம்ப வயதானவங்க மட்டும் பயணிங்க விடுதியில அதுக்கு பின்னாடியிருக்கற கூரையில படுத்துக்கிடக்கறாங்க. மத்தவங்கயெல்லாம் இதே நம்மள மாதிரி இப்படி நடைபாதையில தான் படுத்துக்கிடக்கனும். ராத்திரி – பகல்ன்னு இங்கயே தான். மழை வந்தா மட்டும் ஆஞ்சநேயர் கோயில், ராஜராஜேஸ்வரிகோயில், திருநேர்அண்ணாமலை கோயில்ன்னு எங்கயாவது ஒதுங்கி படுத்துக்க வேண்டியது தான் என்றார் செங்கம் பகுதியை சேர்ந்த 27 வயதான குட்டி என்ற சாது. 


 

girivalam




முதல் நாள் மதியம் நமக்கு பசி வயிற்றை கிள்ள அப்போது தான் நமக்கு நினைவு வந்தது. படுக்க பாதையிருக்கிறது. உணவு?. அங்கிருந்த ஒரு சாதுவிடம் கேட்டபோது, அவர் சொன்னது பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு இளைஞனுக்கு தூக்கு சட்டியை கையில் தந்து பாடம் நடத்தியது போல் நமக்கு இவர் வகுப்பு எடுத்தார். இங்க மட்டும் வயித்துக்கு எப்பவும்மே பஞ்சமில்ல ‘சாமி’. காலையில பாபு சாமி ஆஸ்ரமம், மதியம் ரமணாஸ்ரமம், விசிறி சாமியார் ஆஸ்ரமம், சாயந்தரத்தல திருநேர் அண்ணாமலை சந்நிதானம், வெள்ளிக்கிழமையான மசூதியில பிரியாணி போடறாங்க. பௌர்ணமி தோறும் அன்னதானம் நடக்குது. இல்லன்னா தினமும் யாராவது ஒருத்தவர் வந்து பாக்கெட் சாதம் வாங்கி தந்துடுவாங்க. அதனால அண்ணாமலையார் புண்ணியத்துல இங்க சாப்பாடு பிரச்சனையில்ல. சாப்பிடத்தான் வயிறு கொள்ளாது அந்தளவுக்கு மூனு வேலையும் சாப்பாடு கிடைக்கும் கவலைப்படாதிங்க என்றார். பலர் ரமணாஸ்ரமத்துக்கும், சிலர் சேஷாத்திரி, நித்தியானந்தா ஆஸ்ரமத்துக்கும் தூக்கு சட்டியை எடுத்துக்கொண்டு சென்றனர். நடக்க முடியாத, கண் தெரியாத, நோய்வாய் பட்ட சாதுக்களுக்கு உடன் உள்ள சாதுக்கள் சிலர் உணவு வாங்கி வந்தனர்.

 

 


இப்படி ஒரு புறத்தை கண்ட நமக்கு மாலை மங்கிய இரவு தொடங்கியதும் இந்த சாதுக்களின் மற்றொரு புறம் நமக்கு வெளிச்சமிட்டு காட்டியது. இங்குள்ள சில,பல சாமியார்களுக்கும், சாதுக்களுக்கும் அதீத கெட்டப்பழக்கங்கள் உள்ளன என்பதை மாலை மங்கிய நேரங்களில் அறிய முடிந்தது. முலைப்பால் தீர்த்தம், திருநேர் அண்ணாமலை பகுதியில் உள்ள பல சாமியார்கள், கஞ்சா புகையை இழுத்தபடி இருந்தார்கள். சிலர் எங்கோ சென்று சாராயம் குடித்துவிட்டு வந்தார்கள். எங்கசாமி சாராயம் கிடைக்குது என ஒரு சாதுவிடம் விசாரித்தபோது, சின்ன வயசுல ஏன் சாமி அதைப்போய் கேட்டுக்கிட்டு, கெட்டுப்போயிடாதிங்க என்றார். அருகிலிருந்த மற்றொரு சாது, இளம் வயசுயில்ல அதான் அதுயெல்லாம் கேட்குது என்றவர் நகரத்தில் சில இடத்தில் விக்கறாங்க. மழை சீசன் தொடங்கிடுச்சி, இனிமே அதிகமா விப்பாங்க என்றார். பாக்கெட் சாராயம் கூட இருக்கு வாங்கிக்கிட்டு அப்படியே மாட்டுக்கறி சிப்ஸ் வாங்கிக்கிட்டு வந்து ரம்மியமா சாப்பிடலாம் என்றார் ஒரு சாமி. 


முலைப்பால் தீர்த்தம்மருகே உள்ள சாமியார்கள், இரவு நேரத்தில் பீடி, சுருட்டில் கஞ்சா வைத்து இழுத்தார்கள். இங்கயே சிலபேர் எடுத்துக்கிட்டு வருவாங்க. பாக்கெட் 50 ரூபா. வேணும்கிறவங்க 4 பாக்கெட், 5 பாக்கெட் வாங்கி வச்சிக்குவாங்க, சில ஆட்டோக்கார பசங்க, சும்மா சுத்திக்கிட்டு இருக்கற பசங்க மலைக்கு வருவானுங்க. அவனுங்களுக்கிட்ட காசு தந்தா வாங்கி வந்து தருவானுங்க என்றார்கள். என்ன அவனுங்களுக்கும் தரனும். தராம விட்டா அடிப்பானுங்க ஜாக்கிரதையா இருங்க என்றார்கள். இங்க வந்தும் ஆசைய விட முடியாமல் அப்பப்ப அந்த மாதிரி பெண்கள்கிட்ட போய், வருபவர்களும் இருப்பதாக கூறினர். செக்ஸ்க்கு அடிக்டான இரண்டு சாதுக்கள மலையில கொன்னுட்டாங்க. அதனால உஷாராயிருங்க என்றார் முலைப்பால் தீர்த்தம்மருகே உள்ள ஒரு வயதான சாது. 


இதுக்கெல்லாம் காசு ?. 


பௌர்ணமியப்ப கிரிவலப்பாதையில துண்ட விரிச்சிட்டு  உட்கார்ந்தாபோதும் போறவங்க போட்டுட்டு போவாங்க. சில சாதுங்க அதை டீ, காபி குடிக்க வச்சிக்குவாங்க. மத்தவங்க இந்த மாதிரியான விஷயத்துக்கு பயன்படுத்துவாங்க என்றார். நாம் girivalamகண்ட வரையில் பல சாதுக்கள், சாமியார்களிடம் செல்போன் இருந்தன. சிலர் எந்நேரமும் பிஸியாகவே இருந்தார்கள். செல்போன் வைத்திருந்த ஒரு சாமி, கோயிலில் உள்ள ஒரு குருக்களை தொடர்பு கொண்டு ஐதராபாத்லயிருந்து நமக்கு வேண்டப்பட்டவங்க வர்றாங்க. அவுங்களுக்கு கோயில்ல சிறப்பான மரியாதை செய்யனும் என டீலிங் நடத்தினார். 


கிரிவலப்பாதை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள சாதுக்களுக்காக அமைப்பு உள்ளது. அதில், 1200க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். இதில் 80 சதவிதம் பேர் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவங்க, பக்தியா வந்தவங்க, சிலர் ஜோசியம் சொல்றன்னு இருக்காங்க. இதல 10 சதவிதமான ஆட்கள் காவியுடை தரிச்ச குற்றவாளிகள் என்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு சாதுக்கள் கஞ்சா அடிக்கறாங்க, சாராயம் குடிக்கறாங்க. ஜோசியம் சொல்றன்னு சொல்லிக்கிட்டு திரிவதை காண முடிந்தது. சாதுக்களுக்கு அன்னதானம் செய்றோம்ன்னு பக்தர்கள்க்கிட்ட நன்கொடை வாங்கி ஏமாற்றுவதையும் அறிய முடிந்தது. 

 

 


கிரிவலப்பாதையில் 100க்கும் மேற்பட்ட ஆஸ்ரமங்கள் உள்ளன. ஒரு ஆஸ்ரம கேட் அருகே சென்றபோதே ஏய் இங்கயெல்லாம் வராதே போ, போ என நாயை விரட்டியதுப்போல் விரட்டினார் ஒருவர். ரமணாஸ்ரமம், சேஷாத்திரி, விசிறி சாமியர் என சில ஆஸ்ரமங்களை தவிர மற்றவை எல்லாம் எதுக்கு இருக்கு, என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. காவி யோகா, தியானம், தீட்சை தர்றோம்ன்னு ஆஸ்ரம தரப்புல சொல்கின்றனர். வெளிமாநில, வெளிநாட்டை சார்ந்தவங்களை தவிர வேறு யாரையும் உள்ள விடுவதில்லை. இதை எதையும் காவல்துறை கண்டுக்கொள்வதில்லை. கிரிவலப்பாதையில் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்புயில்லை என்கிற சர்ச்சையால் போலிஸ் ரோந்து செல்கிறது. 


2004ல் உச்சநீதிமன்றம் கிரிவலப்பாதை மேம்பாட்டு கமிட்டி தலைவராக ஜஸ்டீஸ் வெங்கடசாமி நியமிக்கப்பட்டார். அவர் இறந்து 9 ஆண்டுகளாகிவிட்டது. அதன்பின் அந்த கமிட்டி தலைவராக யாரையும் இதுவரை நியமிக்கவில்லை. இதனால் கிரிவலப்பாதையில், மலையில் ஆக்கிரமிப்பு அதிகமாகி தப்பு நடக்கும் பகுதியா மாறிக்கிட்டுயிருக்கு. கடவுளை காட்டி பக்தர்கள்கிட்ட கொள்ளையடிப்பது அதிகாரித்துள்ளது என்பது நிஜமாகவுள்ளது. 


அவர்களுடனான 3 நாள் வாழ்வு பல வித்தியாசமான அனுபவங்களை வழங்கியது...