கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி வந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் அதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று சொல்லி அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டதாக ஒரு அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென வெளியிட்டார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இருக்கும்போது, அதன் முதலமைச்சருக்கான அதிகாரத்தில் குறுக்கிட்டு ஆளுநர் அமைச்சர்கள் விவகாரத்தில் தலையிடுவதா? என பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆளுநரின் அறிவிப்பு வெளியானதும், அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று உடனடியாக அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் நீதித்துறையை சேர்ந்தவர்களும் ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
ஆளுநரின் அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஆலோசனை செய்ததாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தை ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து விட்டு பிறகு முடிவெடுத்துக் கொள்ளாலாம் என்று அறிவுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தொடர்ந்து வரும் மோதல் போக்கு மேலும் அதிகரித்துள்ள நிலையில், உண்மையில் முதல்வர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன? மாநில அரசின் அல்லது முதல்வரின் அதிகார வரம்பிற்குள் ஆளுநர் தலையிட முடியுமா போன்ற விவாதங்கள் எழும்பத் தொடங்கி இருக்கிறது. முதல்வர் மற்றும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அதிகாரங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொண்டால் தான் மேற்கண்ட விவாதங்களுக்கு நமக்கு விடை கிடைக்கும்.
மாநிலத்தில் நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் கண்காணிப்பில் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். எனவே, ஆளுநர் பெயரளவிலான தலைவராக மட்டுமே செயல்படுவார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 'பிரிவு 164' மாநில அமைச்சர்களின் நியமனம் குறித்துக் குறிப்பிடுகிறது. அதன்படி, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிப்பார். மற்ற அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமிப்பார்.
அரசு அலுவல் விதியின் கீழ், முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களின் இலாகாக்களை முதலமைச்சரே மாற்ற முடியும். அதேபோல, குறிப்பிட்ட நபரை துறை இல்லாத அமைச்சராகத் தொடர வைக்கவும் முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது. இலாகா ஒதுக்குவதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கத் தான் முடியும், நிராகரிக்க முடியாது. முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் 2-ஆவது முறையாக நிராகரித்தால் மாநில அரசே அரசாணை வெளியிட்டு இலாகாக்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். முதலமைச்சர் ஒரு அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லலாம். சட்டப்பேரவையை கலைக்க முதலமைச்சர் எந்த நேரத்திலும் ஆளுநருக்கு பரிந்துரைக்க முடியும்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே சட்டமாகும். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். சட்டமன்றக் கூட்டத்தொடர் இல்லாத நேரத்தில், அரசின் பரிந்துரையின் பேரில் அவசரச் சட்டங்கள் இயற்றவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
முதலமைச்சர் மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநில ஆளுநரிடம் விசாரணை அமைப்புகள் அனுமதி பெறுவது அவசியம். ஆனால், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் எதையும் ஆளுநர் மீது அவர் பதவியில் இருக்கும் காலத்தில் யாரும் தொடர முடியாது என்பதுதான் முதல்வர் மற்றும் ஆளுநருக்கான அதிகார வரம்பாக அரசியல் சாசனம் சொல்லி இருக்கிறது. எனவே, மேற்கண்ட விதிகளின்படி பார்த்தால் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் சட்டப்படி தவறானது என்பதாலேயே ஆளுநர் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆளுநர் தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டாலும் தமிழ்நாடு அரசில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆளுநரின் திட்டம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. எனவே, ஆளுநரின் இந்த மோதல் போக்கை திமுக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.
- எஸ்.செந்தில்குமார்