சென்ற வருடம் செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து, பல பெண்கள் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், சில பக்தர்களும், இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்காமல் போராட்டங்களை நடத்திகொண்டே வந்தனர். சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை யார் எதிர்த்தாலும், அம்மாநில அரசு ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் விடியற்காலையில் இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் போலிஸ் பாதுகாப்புடன் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வை அடுத்து, கோவிலின் நடை சாத்தப்பட்டது. பின்னர், கோவில் நம்புதிரிகள் பரிகாரம் செய்து கோவில் நடையை திறந்து வைத்தனர். இந்த சம்பவங்கள் நடைபெற்றதற்கு முந்தைய நாள் கேரளாவிலுள்ள இடதுசாரி கட்சி, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று 620 கிலோ மீட்டர் தூரம், காசர் கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில் அணிவகுத்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் பேர். இதில் பல இடங்களில் இரட்டை வரிசையாக வேறு நின்றிருக்கிறார்கள். இது போன்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற அடுத்த நாள் காலையே இரு பெண்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வை அடுத்து பல இந்து அமைப்புகளும், பாஜகவை சேர்ந்த பெண்களும் போராட்டங்களில் ஈடுபட்டும், இன்று கேரள மாநிலத்தில் இதனை கண்டித்து பந்தும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சபரிமலையில் நடந்த கலவரத்தின்போது, போலிஸார் ஒருவர் காலால் இறுமுடி கட்டியுள்ள சாமியை எட்டு மிதிப்பது போன்று போட்டோஷாப் செய்து சமூக வலைதளத்தில் கேரள காவல்துறை மீது அவதூறு பரப்பிய ராஜேஷ் என்பவர் தற்போது இந்த நிகழ்வை கண்டித்து பாதி மீசை எடுத்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக போலிஸ் மீது அவதூறு பரப்பியதற்காக இவர் மீது வழக்கு தொடரப்படு, தற்போது பெயிலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை கோவிலுக்குள் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா என்ற இருவருக்கும் காவலர்கள் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும், தரிசனம் செய்தவர்களில் ஒரு பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று தவறான செய்திகளை பரப்பிவருகின்றனர். இன்று கேரளா முழுவதும் பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததை அடுத்து, முழு கடையடைப்பு நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறையால் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெண்கள் இருவர் தரிசனம் செய்ததை அடுத்து நடக்கும் வன்முறைகள் குறித்து பேசியுள்ளார். 'சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த அரசியலமைப்பு பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. சபரிமலையை ஒரு கலவர களமாக மாற்ற சங் பரிவார் அமைப்புகள் முயல்கின்றன. மேலும் நேற்று நடந்த கலவரத்தில் 7 காவல்துறை வாகனங்கள், 79 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 39 காவலர்கள் இப்போது வரை தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். மேலும் பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்' என கூறியுள்ளார்.