ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க அரசியல் களம் அனலாய் மாறியுள்ளது.
தி.மு.க. அணியில் வாக்கு கேட்க செல்ல ஒரு வீதிக்கு 200 பேர் என்ற அளவில் ஒரு வார்டுக்கு ஏறக்குறைய 1000 பேர், ஒருவருக்கு 500 ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது. திரும்பத் திரும்ப ஒருவரையே வைத்துக்கொள்ளாமல் சுழற்சி முறையில் அதே வார்டிலுள்ள மற்றவர்களையும் தி.மு.க. அணி பயன்படுத்திவருகிறது. இதே பார்முலாவை கடைப்பிடித்துள்ள அ.தி.மு.க. ரூபாய் 500-க்கு பதிலாக 700 ரூபாய் வழங்கிவருகிறது. இதோடு சிக்கன் பிரியாணியும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர் சப்ளையும் நடக்கிறது.
இதனால் அ.தி.மு.க. தரப்பு சற்று உற்சாகத்தோடு வீதிகளில் வருகிறது. தி.மு.க. அணியில் சில பகுதிகளில் பணம் மட்டும்தான் தருகிறார்கள். டீ, காபி, சாப்பாடு தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் வருகிறது.
அ.தி.மு.க. வலுவாகக் காணப்படும் வீரப்பன்சத்திரம் பகுதிதான் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீதிகள்கொண்ட அந்த பகுதியில் முழுக்க விசைத்தறி தினசரி கூலித் தொழிலாளர்கள் அதிகம். இங்கு காலை ஆறு மணி முதலே வாக்கு கேட்கச் சென்றுவிடுகிறார் செந்தில்பாலாஜி. ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள பெண்களுக்கு புதிய புடவைகள், பரிசுப் பொருட்கள் தாராளமாக வழங்கப்படுகிறது. ஏறக்குறைய 20 ஆயிரம் வாக்குகள் கொண்ட அந்த பகுதியை முழுக்க கவர்செய்ய அமைச்சர்கள் தொடர்ந்து வேகம்காட்டுகிறார்கள்.
அ.தி.மு.க. தரப்பில் முதலில் பத்து மாஜிக்கள் தலா ரூ10 கோடி என 100 கோடியும் எடப்பாடி தனியாக நூறு கோடி என 200 கோடி ரூபாய் த.மா.க. இளைஞரணித் தலைவர் யுவராஜின் வில்லரசம்பட்டியிலுள்ள அவரது கெஸ்ட் ஹவுஸில் வைக்கப்பட்டு அங்கிருந்து பண விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது. 200 கோடி போதாது என்ற தகவல் எடப்பாடிக்கு எட்ட 12-ஆம் தேதி மாலை ஈரோடு வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்னும் எத்தனை நூறு கோடி செலவானாலும் பரவாயில்லை. நாம் இங்கு ஏற்கனவே வாங்கிய வாக்குகள் 56 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறவேண்டும். வெற்றி தோல்வியைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை என அ.தி.மு.க. மாஜிக்களிடம் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் பிரச்சாரத்தில் பா.ஜ.க. அண்ணாமலையோடு சேர்ந்து ஒரு இடத்திலும் நான் பிரச்சாரம் செய்யமாட்டேன் என எடப்பாடி அறிவித்திருக்கிறார். அண்ணாமலையோடு ஓ.பி.எஸ். அணி பிரச்சாரம் செய்வதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்தத் தொகுதியிலுள்ள 238 வாக்குச்சாவடிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்டவை பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் இவற்றில் மத்திய போலீஸ் படையின் கவனம் அழுந்தப்பதிந்துள்ளது.
குக்கர் சின்னம் சுயேட்சை வேட்பாளர் ராஜா என்பவருக்கும், டார்ச் லைட் சின்னம் வேலுமணி என்பவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இருவரும் தங்களுக்கு எப்படியும் 10 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் விழும் என எதிர்பார்க்கிறார்கள். தே.மு.தி.க. பிரச்சாரத்திற்கு பிரேமலதாவும், விஜயகாந்தின் மகனும் இறங்குகிறார்கள். அதேபோல் நாம் தமிழர் சீமான் தொடர்ந்து ஒரு வாரம் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
தி.மு.க. கூட்டணிக்கு வலிமைசேர்க்கும் விதமாக மூன்று நாட்கள் நடிகர் கமலஹாசன் பிரச்சாரத்தில் இறங்குகிறார். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, முதல்வர் மு.க. ஸ்டாலின் என ஈரோட்டின் அரசியல் மேடை தமிழகத்தின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துவருகிறது.
இந்த வரிசையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நேரடியாகக் களமிறங்கி இருக்கிறார். கடந்த பிப்ரவரி 9, 10 இரண்டு நாட்கள் ஈரோட்டில் முகாமிட்ட அவர், 20-க்கும் மேற்பட்ட அமைப்பினரை அழைத்து அவர்களின் தேவைகளை, அரசு செய்யவேண்டியதைக் கேட்டறிந்து நிச்சயமாக அதை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளார். சபரீசனின் இரண்டு நாள் பயணம் தி.மு.க. அணிக்கு மேலும் பலம்சேர்த்திருக்கிறது.
ஈரோடு கிழக்குக் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்காக பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பேனர் வைத்தனர். அன்று மாலையே தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என நான்காவது ஆக ப்ளக்சை மாற்றினார்கள். இந்த நான்கு பேனர்களிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய படங்களும், கூட்டணிக் கட்சி என்ற முறையில் ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் 5-வது முறையாக புதிதாக பிளக்ஸ் மாற்றிவைத்துள்ளனர். அதில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சியின் வெற்றி வேட்பாளர் என பிரதமர் மோடியின் பெரிய படமும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சிறிய படமும் இணைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்துவிட்டு, ஆறாவதாக என்ன மாற்றம் செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை என ர.ர.க்களே கிண்டல் செய்கிறார்கள்.