.jpg)
1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது.
இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்தது. நாடாளுமன்றத்திற்கு 18 இடங்களில் அது வேட்பாளர்களை நிறுத்தியது.
இவர்கள் தவிர, சட்டமன்றத்திற்கு 3 ஆதரவாளர்களையும், நாடாளுமன்றத்திற்கு 2 ஆதரவாளர்களையும் ஆதரிக்க முடிவு செய்தது.
திமுக போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸை எதிர்க்கும் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது.
1957 தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக உறுப்பினர்களையும் தோற்கடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. பஸ் முதலாளிகள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள், பெருமுதலாளிகள் என்று வேட்பாளர்களை காமராஜ் அறிவித்தார்.
திமுகவுக்கு பெரியாரின் எதிர்ப்பு வலுவாக இருந்தது. பத்திரிகைகள் அனைத்தும் காங்கிரஸையே ஆதரித்தன. முதல்முறையாக காங்கிரஸ் அரசு தனது சாதனைகளை விளக்கும் வகையில் பிரச்சாரப் படம் ஒன்றையும் எடுத்து மாநிலம் முழுவதும் திரையிட்டுக் காட்டியது.
இதையெல்லாம் மீறித்தான் திமுக தான் போட்டியிட்ட 142 தொகுதிகளில் 50 தொகுதிகளை தனித்தே கைப்பற்றியது. சுதந்திரா கட்சி 94 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 68 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களையும் பெற்றன.

இந்த மூன்று கட்சிகளில் திமுக 27.10 சதவீதமும், சுதந்திரா கட்சி 7.82 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7.72 சதவீதமும் வாக்குகளைப் பெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சி 46.14 சதவீதம் வாக்குகளை பெற்றது. மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் காங்கிரஸை 1962லேயே தோற்கடித்திருக்கலாம் என்பதே எத்ராத்தமான உண்மையாக இருந்தது.
மக்களைப் பாதிக்கும் அரசாங்கத்தை விரட்டி அடிப்பதைக் காட்டிலும் சொந்த பலன்களே முக்கியமாக கம்யூனிஸ்ட்டுகள் அப்போதே கருதியிருக்கிறார்கள்.
போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக வேட்பாளர்களில் கலைஞர் கருணாநிதி மட்டுமே இரண்டாவது முறை வெற்றிபெற்றார். அதேசமயம், முதல் தேர்தலில் தோல்வியடைந்த நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வெற்றிபெற்றனர்.
இந்தத் தேர்தலில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸும் பெரியாரும் பொன்முத்துராமலிங்கத் தேவரும் கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள். முத்துராமலிங்கத் தேவர் கடுமையான சொற்களால் திட்டி பிரச்சாரம் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக வாக்கிற்கு பணம் கொடுக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அண்ணாவின் தோல்வி அறிவிக்கப்பட்டவுடன் திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தேர்தல் முடிவுகளை அறிவதில்கூட ஆர்வம் காட்டுவதை தவிர்த்துவிட்டனர்.
இந்நிலையில்தான் திமுக 50 தொகுதிகளில் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 18 திமுக வேட்பாளர்களில் 7 பேர் வெற்றிபெற்றனர்.
அண்ணா தனது தோல்வியால் கழகத்தினர் யாரும் வருத்தப்படத் தேவையில்லை என்று நீண்ட அறிக்கை வெளியிட்டார். முன்பைவிட சட்டமன்றத்தில் திமுகவின் பணி செம்மையாக நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
திமுக சார்பில் சென்னையில் நடந்த வெற்றிவிழாவில் அண்ணா இப்படி பேசினார்…
“நான் வெளியே நிற்கிறேன். என் அணிவகுப்பு உள்ளே செல்கிறது. தலைவன் இல்லாமல் அணிவகுப்பு அமைக்க முடியும். அணிவகுப்பு இல்லாத தலைவனை அமைக்க முடியாது.”
இதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்றக் கட்சிக்கு நாவலர் நெடுஞ்செழியன் தலைவராகவும், கலைஞர் கருணாநிதி துணைத் தலைவராகவும், கே.ஏ.மதியழகன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை குழுத் தலைவராக நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்தவுடன் சட்டமன்ற மேலவைக்கும் மாநிலங்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அண்ணாவும் திமுக தயவில் சுதந்திரா கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும் வெற்றிபெற்றனர்.
சட்டமன்ற மேலவைக்கு திமுக சார்பில் எம்ஜியாரும், திமுக ஆதரவுடன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் வஹாபும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திராவிடநாடு கோரிக்கையை மக்களவையில் பேசிய பிரதமர் நேரு கடுமையாக விமர்சித்தார். திமுகவை பிரிவினைவாத கட்சி என்றும், அந்தக் கோரிக்கையை ஒடுக்க ஒரு யுத்தத்தை வேண்டுமானாலும் நடத்தத் தயார் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
அந்தப் பேச்சின் விவரத்தை பெற்ற அண்ணா மாநிலங்களவையில் நேருவுக்கு பதில் அளித்து பேசினார்…
“இதனால் ஒரு போரே என்றாலும் அந்தப் போர் வரட்டும் என்று நேரு கூறியிருக்கிறார். இது மிகவும் அவசரமான, தெளிவற்ற பேச்சாகும், இத்தகைய கொடூரமான திசையில் நேருவின் சிந்தனை ஏன் திரும்பியது என்று தெரியவில்லை. இதுதான் கடைசி வார்த்தை. இதோடு இந்த விவகாரம் முடிந்துவிடும் என்று நேரு கருதுகிறாரா?
இந்தப் போர் முரசங்களைக் கேட்டு திமுக ஏமாந்துவிடாது. போர் என்பதே தேவையற்ற, அறவே வேண்டப்படாத இடத்தில் போரைப் பற்றி பேசுகிறார் நேரு. ஆனால், வெளிநாட்டுப் படை முற்றுகையிட்டு முன்னேறும்போது, சமாதானவாதியாக காட்சி அளிக்கிறார். எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்ற சக்திக்கு மீறிய வகையில் முயல்வதால் ஏற்படும் குழப்பம் மிக்க சிந்தனையின் அறிகுறியே இது…”
அண்ணாவின் இந்த தெளிவான பேச்சு நேருவின் பேச்சை கிழித்தெறிந்தது… நேரு அதிர்ச்சியடைந்தார்…
அவர் மட்டுமல்ல காமராஜரும் திமுகவின் வளர்ச்சியைப் பார்த்து அதிர்ச்சியில்தான் இருந்தார். காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியில் இருந்தாலும் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதியில் ஆளும் அரசாங்கத்தின் அத்தனை அதிகாரத்தையும் மீறி பேராசிரியர் அன்பழகன் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சியின் 16 ஆவது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில்கூட காமராஜரால் ஜெயிக்க முடியவில்லை. திமுக தனியாகவே ஒரு சாமானியரை நிறுத்தி வெற்றிபெற்றது.
திமுகவின் வெற்றிகள் காமராஜரை கலங்கடித்தது. அந்த கலக்கத்தில் திமுகவை ஒடுக்கிவிட தவறான முடிவுகளை எடுத்தார்.
மூன்றாவது முறையாக முதல்வரான காமராஜர் வந்தவுடன் செய்த முதல்காரியம் கைத்தறி நூலின் விலையை அதிகரித்ததுதான். ஏழைக் கைத்தறித் தொழிலாளரின் வயிற்றில் அடிக்கும் இந்த முடிவை திரும்பப்பெறும்படி திமுக வலியுறுத்தியது.
அரசின் முடிவைக் கண்டித்து கோட்டை முன் 30 ஆயிரம் பேர் கொண்ட பேரணியை திமுக நடத்தியது.
அடுத்ததாக விலைவாசி உயர்வு பற்றி சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பினார்கள். ஆனால் காமராஜ் அரசாங்கம் திமுக உறுப்பினர்களின் வேண்டுகோள்களை கண்டுகொள்ளளே இல்லை.
விலைவாசி உயர்வு நியாயமானதுதான் என்றும் அரசு விளக்கம் அளித்தது. விலைவாசி உயர்வை தடுக்க குழு ஒன்றை அமைக்க திமுக விடுத்த வேண்டுகோளையும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்று கூறிவிட்டது.
இதையடுத்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அதன்பிறகும் காமராஜ் அரசு கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து 1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் ஒருநாள் அடையாள மறியல் நடத்துவது என்று திமுக முடிவெடுத்தது.
இந்த மறியல் போராட்டத்தை ஒடுக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அடக்குமுறை தர்பார் திமுக மீதான மக்கள் அனுதாபத்தை அதிகரிக்கவே உதவியது. மறியலில் ஈடுபட்டோரை அணி அணியாக கைது செய்து சிறையில் அடைத்தது. சென்னை மத்திய சிறையில் 2500 பேரை மட்டும் அடைக்க முடியும். ஆனால், ஆறாயிரம் திமுகவினரை சிறைக்குள் திணித்து காமராஜ் அரசு பழிவாங்கியது.
தமிழகம் முழுவதுமே இதே நிலைதான் நீடித்தது. வேலூரில் அண்ணா தலைமையில் மறியலில் ஈடுபட்டோரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது. தஞ்சையில் கலைஞர் தலைமையில் மறியலில் ஈடுபட்டோரை திருச்சி சிறையில் அடைத்தது.
சென்னையில் திமுகவுக்கு ஆதரவான கடற்கரையோர குடிசைவாசிகள் மீது கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு, அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கும் மறியலில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மற்றோருக்கும் 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அண்ணாவும் முக்கியத் தலைவர்களும் சிறையில் இருந்த நிலையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற தொகுதி ஆகும். அங்கு வெற்றிபெற்ற டாக்டர் சுப்பாராயன் மகாராஸ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற்றது.
1962 ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செங்கோடக் கவுண்டரும், திமுக சார்பில் செ.கந்தப்பனும் போட்டியிட்டனர். நேரடிப்போட்டியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரஜா சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், ஜனசங்கம், தமிழ்தேசிய கட்சி, சோசலி்ஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவாக வேலை செய்தன. திமுகவை ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆதரித்தது.
பணபலம், படைபலம், அமைச்சர்களின் தீவிரப் பிரச்சாரம் எல்லாம் காங்கிரஸுக்கு இருந்தது. திமுக வேட்பாளருக்கு திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களின் பிரச்சாரம் மட்டுமே இருந்தது. என்றாலும் திமுக வேட்பாளர் கந்தப்பன் வெற்றிபெற்றார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்றது முதல்தடவை என்ற வரலாறு தொடங்கியது.
அந்த தேர்தல் முடிந்த கையோடு அதே ஆகஸ்ட் மாதம் இறுதியில் சித்தூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் விஸ்வநாத ரெட்டியும், சுதந்திரா கட்சி சார்பில் என்.ஜி.ரெங்காவும் போட்டியிட்டனர். சுதந்திராக்கட்சி வேட்பாளரை திமுக ஆதரித்தது. இதிலும் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் கைதான தலைவர்கள் அனைவரும் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி விடுதலை பெற்றார். அவரைத் தொடர்ந்து மற்ற தோழர்களும் அடுத்தடுத்து விடுதலை பெற்றனர். அண்ணா வேலூரில் விடுதலை பெற்று அங்கு தொண்டர்களின் வரவேற்பை ஏற்றார். பிறகு சென்னையில் விடுதலை அடைந்தோருடன் இணைந்து பொதுமக்களின் வரவேற்பை ஏற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் அங்கிருந்து திருச்சி வந்து கலைஞரையும் அவருடன் கைதாகி விடுதலை பெற்ற டி.கே.சீனிவாசன், ஏ.கே.வேலன் உள்ளிட்ட தலைவர்களையும் வரவேற்க சிறைவாசலுக்கே அண்ணா சென்றார். அன்று மாலை திருச்சியில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அண்ணா, கலைஞர், ஏ.கே.வேலன் உள்ளிட்டோரை பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
இது ஒருபக்கம் நடைபெறும் வேளையில், இந்திய எல்லைப் பகுதியில் சீனா ராணுவம் யுத்தத்தை தொடங்கியது.

இந்தியாவில் தலாய்லாமா
இந்தியா சீனா இடையே எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், வேறு சில காரணங்களும் இருந்தன. 1959ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க தலாய் லாமா மறுத்தார். அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இது சீனாவுக்கு கடுப்பேற்றியது.
1962 அக்டோபர் 20ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து தாக்குதலை நடத்தியது. சீன படைகள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினர். மேற்கு பகுதியில் சுசுல் பள்ளத்தாக்கிலுள்ள ரிசாங் லா கணவாயை கைப்பற்றினார்கள், மேலும் கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைப்பற்றினார்கள். எனினும் சர்வதேச தலையீடுகள் காரணமாக 1962, நவம்பர் 20ல் சீனா போர்நிறுத்தம் அறிவித்தது. போர் முடிவுக்கு வந்தது. சிக்கலுக்குரிய கைப்பற்றிய பகுதிகளில் இருந்து சீனா பழைய நிலைக்கு திரும்பியது.
இந்தப் போர் சமயத்தில் திமுக மத்திய அரசுக்கு ஆதரவாக தனது நிலையை அறிவித்தது. நாட்டுக்கு ஒரு ஆபத்து எனும்போது கட்சி வேறுபாடுகளை மறந்து கைகோர்ப்போம் என்று அண்ணா அறிவித்தார். பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதாகவும் அறிவித்தார். அதேசமயம் பிரிவினை கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாகவும் அண்ணா தெரிவித்தார்.
ராணுவ வீரர்களுக்கு ஏராளமான ரத்தம் தேவைப்படும் என்றும், திமுகவினர் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். யுத்தநிதி வசூலித்து முதல்வர் காமரஜரிடம் கொடுக்கச் செய்தார்.
பிரிவினை கோரும் கட்சிகளைத் தடைசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டதால்தான் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டதாக விமர்சனம் எழுந்தது. அதாவது, இந்தியா மீது அன்னிய நாடு போர் தொடுப்பதை எதிர்த்து இந்திய அரசுடன் இணைந்து போராட திமுக முன்வந்த நல்ல முடிவையும் சிலர் கொச்சைப்படுத்தினர்.
அதைப் பற்றியெல்லாம் அண்ணா கவலைப்படவில்லை. திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலேயே அவர் உறுதியான முடிவை எடுத்தார்.
இந்தியா மீது சீனா போர்தொடுத்த சமயத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருபிரிவினர் சீனா ஆதரவு நிலைப்பாடை எடுத்தனர். இன்னொரு பகுதியினர் சோவியத் ஆதரவு நிலைப்பாடை எடுத்தனர்.
இந்தியா மீது சீனா போர்தொடுத்த அதேசமயத்தில்தான், கியூபாவுக்கு சோவியத் யூனியன் ஏவுகணை வழங்கியது தொடர்பாக அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
சீனா ஆதரவு, சோவியத் ஆதரவு என்ற இரு குழுக்களாக பிரிந்த கம்யூனிஸ்ட்டுகள் கட்சிக்குள் தொடர் விவாதங்களில் ஈடுபட்டனர். சீன ஆதரவு நிலையை எடுத்த நூற்றுக்கணக்கான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.
சோவியத் ஆதரவு நிலை எடுத்த தலைவர்கள் காங்கிரஸ் அரசின் ஆதரவோடு கட்சியில் அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகவே 1964 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரிகள் என்றும் வலதுசாரிகள் என்றும் இரண்டாக பிளவுபட்டது.
டாங்கே தலைமையிலான வலதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்களை எதிர்த்து 32 முக்கிய தலைவர்கள் வெளியேறி தனியாக மாநாடு நடத்தினர். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்களுக்கு தலைமை வகித்தார்.
1964 அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இடதுசாரிகளின் மாநாட்டில் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள கட்சியின் பெயரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று பிரகடனம் செய்தனர்.
கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழுவில் பி. சுந்தரய்யா பொதுச் செயலாளராகவும், பி.டி. ரணதேவ், பிரமோத் தாஸ்குப்தா, ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட், எம். பசவபுன்னையா, ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், பி. ராமமூர்த்தி, ஏ. கே. கோபாலன், ஜோதி பாசு ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்தியா – சீனா யுத்தம் முடிந்த கையோடு, 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திருத்தத்தில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்று குறிப்பிடப்பட்டது. அந்தத் திருத்தத்தை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா மாற்றவேண்டும் என்று கோரினார். அதாவது, ஆங்கில் இந்தியுடன் தொடரும் என்று உறுதிபட இருக்க வேண்டும் என்று அண்ணா வலியுறுத்தினார்.
ஆனால், அந்தத் திருத்தத்தை ஏற்காமலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம் தொடங்கியது.
1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை திமுக நடத்தியது. அந்த மாநாட்டில் அரசியல் சட்டத்தின் 17 ஆவது பகுதியை அண்ணாவும் அவருடன் 500 பேரும் எரித்து கைதாகினர்.
நிலைமை உக்கிரமடைந்தது.
(காமராஜர் பதவி விலகல், நேரு மறைவு, திமுக ஆட்சியமைப்பு குறித்து வியாழக்கிழமை பார்க்கலாம்)
-ஆதனூர் சோழன்
முந்தைய பகுதிகள் :