Skip to main content

தமிழகம் இந்தியாவுக்கு தொடர்ந்து பாடம் எடுத்து வருகிறது - மருத்துவர் எழிலன்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

jk


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மருத்துவர் எழிலன், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

 

அவரின் கருத்துக்கள் வருமாறு, "இந்த உலகத்தில் அடிப்படை வாதத்தை ரொம்ப எளிதாக மக்களிடம் புகுத்த முடியும். ஒரு அடிப்படை வாதம் மற்றொரு அடிப்படை வாதம் அமைவதற்குக் களம் அமைக்கும். ரொம்ப எளிதாக, சுலபமாக செய்துவிடலாம். நம்முடைய எதிர் சித்தாந்தங்களை உடையவர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். ‘நான் அடிப்படைவாதிதான், நீங்களும் அப்படி மாறுங்கள், அந்த அடிப்படை வாதத்தை வைத்து நான் வளர்ந்து கொள்கிறேன்’ என்று கூறி, இந்த தேர்தல் ஜனநாயகத்தை வென்று பாராளுமன்றத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்; நீதித்துறையைக் கைப்பற்றி இருக்கிறார்கள்; அரசாங்க துறையை கைப்பற்றி இருக்கிறார்கள். அடிப்படைவாதத்துக்கு மாற்று மனிதநேயம்தான் என்று பாடம் நடத்த வேண்டும். நாம் அனைவரும் மனிதநேயவாதிதான். அது பெரியாரிய கொள்கையாக, அம்பேத்கரிய கொள்கையாக நம்மிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. நம்மைப் பிரிப்பதற்கான சக்திகள் காலம் காலமாக தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. அதில் தற்போது சிலர் வெற்றிபெற்றதாக நினைக்க கூடும். அது ஒருபோதும் நிலைக்காது. 

நம்மைப் பிரிக்கும் சூழ்ச்சிகள் தமிழகத்தில் காலூன்ற தொடங்கி உள்ளது. அந்த சூழ்ச்சிகளை இங்கே மேடையில் இருக்கும் அனைவரும் தொடர்ந்து முறியடித்துக்கொண்டே இருக்கிறோம். ‘நாங்கள் அனைவரும் மாமன், மச்சான்தான். நீங்கள் யாரு நடுவுல?’ என்ற கேள்வி அவர்களுக்கு உரைக்கும் விதத்தில் நாம் எழுப்ப வேண்டும்; எழுப்பிக்கொண்டே இருக்கிறோம். மதத்தின் பெயரால் நாங்கள் யாரையும் வித்தியாசம் செய்வதில்லை. பிரித்துப் பார்ப்பது இல்லை, ஆனால் இந்த நிலை வர வேண்டும் என்று சிலர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். மக்கள் நலம், மனித நலம் இங்கே அடிப்படை கூறாக இருந்து வருகிறது. இதை சிதைக்க சிலர் முயல்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. இது திராவிட சிந்தாந்தத்தில் வந்தது. திருமூலர், திருக்குறளில் இருந்து தொடர்கிறது. எனவே அவர்களின் எண்ணம் தமிழகத்தில் ஒருபோதும் நிறைவேறாது.

 

நீங்கள் யாரு நடுவில் ரோடு போட என்று கேட்கிறேன், இதைத்தான் தமிழகம் தொடர்ந்து இந்தியாவுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் பாடத்தின் வெளிப்பாடாகத்தான் இந்த மேடையும் இருக்கிறது. தற்போது கரோனாவுக்கு வருவோம். தமிழகத்தில் கரோனா அதிகரித்து வந்துகொண்டிருந்தது. மருத்துவர்களுக்கே அது புதுநோய். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புது பாடத்தை கற்றுக்கொண்டு வந்தா்கள். இறப்பு சதவீதத்தை எப்படி குறைப்பது, என்ன மருந்துகளை கொடுப்பது என்று அந்த காலங்கள் ஒரு புது அனுபவமாக இருந்தது. யார் யாரை தீவிர சிகிச்சையில் அனுமதிக்க வேண்டும், யாரை சாதாரண வார்டில் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு குழப்பங்கள் அப்போது நடைபெற்றது. அதைப் புரிந்துகொள்ளவே சில காலம் தேவைப்பட்டது. யாருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும், யாருக்கு அது தேவைப்படாது என்பதை உடனடியாக புரிந்துகொள்ள வேண்டும். அதை மருத்துவர்கள் வெற்றிகரமாக தற்போது வரை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பேசினார் எழிலன்.