கரோனா வைரசால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில்,சில தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை,சில மணி நேரங்களில் அவசரம் அவசரமாக ரத்து செய்யப்பட்டது.இந்த விவகாரம்,நேற்று இரவு ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் பின்னணிகளை விசாரித்த போது,எடப்பாடியிடம் அமைச்சர்கள் கொந்தளித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாது.
இது குறித்து கோட்டையிலுள்ள உயரதிகாரிகளிடம் விசாரித்த போது, "கரோனா விவகாரத்தைக் கவனிக்க தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இந்தக் குழுவில் மூத்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் இருக்கின்றனர்.இவர்கள் தான் ,கரோனா வைரஸால் உருவாகியுள்ள அனைத்து பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றனர்.
டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட உத்தரவால், கரோனா விவகாரத்தில் அமைச்சர்களின் பங்களிப்பை நிறுத்திவிட்டு அணைத்து பொறுப்புகளையும் அதிகாரிகளிடமே கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி. ஆக, கரோனா விசயத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அனைவருமே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கட்டுமான நிறுவனங்கள் உட்பட சில தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழந்திருப்பதாகவும் அதனால் எங்கள் நிறுவனங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனவும் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் விவாதித்துள்ளார் சண்முகம்.அவரும் ஒப்புதல் தர, இதனையடுத்து ,சுத்திகரிப்பு தொழிற்சாலைகள்,இரும்பு, சிமெண்ட், உரம் தொழிற்சாலைகள், ஜவுளி ஆலைகள் ,தோல் தொழிற்சாலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 13 தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதியளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க தொழில் துறை செயலாளருக்கு உத்தரவிடகிறார் தலைமைச் செயலாளர் சண்முகம்.
மேலும், இந்த அரசாணையை அனைத்து துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவிடப்படுகிறது. அதன்படி நேற்று மாலையில் (7.4.2020) அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், திறக்கப்படும் தொழிற்சாலைகளில் குறைந்த அளவில் தொழிலாளர்களைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அரசாணையை அறிந்து அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். மேலும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.இதனையடுத்த சில மணி நேரங்களில் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது " என்கிறார்கள்.
அரசாணை போடப்பட்டதன் நோக்கம் என்ன? பிறகு ஏன் ரத்து செய்ய வேண்டும்? என்பது குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, " சில பல காரணங்களுக்காகத்தான் இந்த அரசாணை போடப்பட்டது. குறிப்பிட்ட தொழிற்சாலைகள் திறக்கப்படுவதில் அரசுக்கு லாபம் இருக்கிறது.அதனால்தான் அப்படி ஒரு அரசாணை.ஆனால்,கரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கும் நிலையில் இப்படி ஒரு அரசாணை தேவையா? என மூத்த அமைச்சர்கள் சிலர் அதிருப்தியடைந்திருக்கிறார்கள்.
முதல்வர் எடப்பாடிக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது என யோசித்த சீனியர்கள் எடப்பாடியிடம், 'ஊரடங்கும் 144 தடையும் அமலில் இருக்கிறது.வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஏகப்பட்ட நிபந்தனைகளை மக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முடக்கி வைத்திருக்கிறோம்.கரோனா வைரஸ் சமூகத் தொற்றாகப் பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர் தங்களைப் பற்றி கவலைப்படாமல் போராடி வருகின்றனர்.அப்படியிருக்கையில், தொழிற்சாலைகளை திறப்பதும் ,தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் போராடும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிரானது.
இதனால்,கரோனா பரவல் அதிகமானால் யார் பொறுப்பேற்பது? நாடே நெருக்கடியாகியிருக்கும் முக்கியப் பிரச்சனையில் அமைச்சர்கள் பணி செய்ய முடியவில்லை.ஒட்டு மொத்த அதிகாரமும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள் ' எனக் கொந்தளித்ததுடன், 'அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பும் இல்லை ' என்றெல்லாம் கோபம் காட்டியிருக்கிறார்கள். இந்தச் சூழலில்,முதல்வர் எடப்பாடியைத் தொடர்புகொண்டு,இந்த அரசாணைக்கு எதிராக சில பிரச்சனைகளைத் தெரிவித்திருக்கிறார்கள் தொழிலாளர் நலத்துறையின் அதிகாரிகள். இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட்டார் எடப்பாடி " என விவரிக்கிறார்கள்.