Skip to main content

தண்டனை அல்ல... சுத்திகரிப்பு நடவடிக்கை!

Published on 12/12/2017 | Edited on 12/12/2017
தண்டனை அல்ல... சுத்திகரிப்பு நடவடிக்கை! 

தூக்குத் தண்டனையை எதிர்ப்பதாக சொன்ன நீ, இப்போது சங்கர் கொலையில் கவுசல்யாவின் தந்தைக்கும் வேறு ஆறு பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆதரிக்கிறாயே அது எப்படி சரியாகும்? என்று கேட்கிறார்கள்.

நான் தூக்குத்தண்டனையை எதிர்ப்பவன்தான். ஆனால், இப்போது விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனை என்பது ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கை. சமூக அவலத்துக்கு காரணமான கொடூரமான ஜந்துக்களை அழித்து சமூகத்தை சுத்திகரிக்கும் நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன்.



இந்த விஷயத்தில் நான் சகோதரி கவுசல்யாவின் மனநிலையில் இருந்துதான் பார்க்கிறேன். ஆம், அந்தச் சகோதரி சங்கரை எவ்வளவு நேசித்திருப்பார்? சங்கரும் கவுசல்யாவை எந்த அளவுக்கு நேசித்திருப்பார்?

இருவரும் எவ்வளவு கனவுகளை வளர்த்திருப்பார்கள்? அந்த கனவுகளை கலைத்தார்கள். அவர்களுடைய நேசத்தை நாசம் செய்தார்கள். அதுவும் பட்டப்பகலில் பலர் கூடிய தெருவில் கொஞ்சம்கூட ஈவிரக்கமின்றி, சங்கரை வெட்டிச் சாய்த்தார்கள். கவுசல்யாவை காயப்படுத்தினார்கள். வெறும் சாதிவெறி மட்டுமே அவர்கள் வாழ்க்கையை சூறையாடியது.

இரண்டு உயிர்கள் இணைந்து வாழப் பொறுக்காமல் நடுரோடில் வெட்டிச் சாய்த்தவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது எப்படி தவறாகும்?

அப்படியானால், இப்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் உயிர்கள்தானே. உயிருக்கு உயிர் பலி என்பது எப்படி நாகரிக சமுதாயத்தில் ஏற்புடையதாக இருக்கும்?

நாகரிக சமுதாயத்தை உருவாக்கவே இந்த தண்டனை உதவும் என்று நம்புவதால் இதை ஆதரிக்கிறேன். கவுசல்யாவின் நிலையிலிருந்து, சங்கரின் பெற்றோரின் நிலையிலிருந்து இந்தத் தண்டனையை ஆதரிக்கிறேன்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தாய் விடுதலை செய்யப்பட்டதைக் கூட ஏற்க முடியும். சங்கரைக் கொலைசெய்ய திட்டம் தீட்டிய அவருடைய தாய்மாமன் விடுதலை செய்யப்பட்டது நெருடலாய் இருக்கிறது. நீதிமன்ற வளாகத்திலேயே இந்தத் தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்த சாதிவெறிபிடித்த நபரை போலீஸார் தப்பவிட்டதும் வருத்தமாக இருக்கிறது.

கொங்கு மண்டலத்தின் சாதிவெறி ரொம்பவே பாப்புலர் ஆனதுதான். ஆனால், இந்த தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் இனியாவது ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டப்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இடஒதுக்கீடு பெற்று சமூகத்தில் முன்னேற சாதியை பயன்படுத்தலாம். ஆனால், வெற்றுப் பெருமைக்காக சாதியைத் தூக்கிச் சுமக்காதீர்கள் என்பதே பகுத்தறிவு போதிக்கும் உண்மை.

- ஆதனூர் சோழன் 

சார்ந்த செய்திகள்