தூத்துக்குடியில் இயங்கிவந்த தனியார் காப்பர் ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகிறது என கூறி, அந்த ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது போலீஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அந்த ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த ஆலையை நிரந்தமாக மூட கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசியுள்ள அந்நிறுவனத்தின் நிறுவனர் அணில் அகர்வால், "ஸ்டெர்லைட் ஆலை ஒரு வருடம் மூடிக்கிடந்ததால் வேதாந்தா நிறுவனத்திற்கு ரூ.1,400 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூலம் 20,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். தற்போது அனைவரும் வேலையை இழந்துள்ளதால், அவர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் காப்பரை நம்பியிருக்கும் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது ஏற்பட்ட இழப்புகள் நிச்சயம் வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் தற்போது ஆலை மூடப்பட்டு இருப்பதாலும் அதே அளவிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் மொத்த காப்பர் தேவையில் 33 சதவீத பங்களிப்பை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கி வந்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால், அவ்வளவு காப்பரும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது" என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான அச்சாரமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.