"அந்த ஒன்பது எம்.எல்.ஏ. தொகுதிகளையும் ஜெயித்திருந்தா இப்ப எடப்பாடி இருக்குற இடத்துல தளபதி ஸ்டாலின் இருந்திருப்பார். ஆனா எல்லாம் போச்சே'’என இப்போதுவரை உ.பி.க்கள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பரமக்குடி, மானாமதுரை, சாத்தூர், விளாத்திகுளம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, சூலூர், சோளிங்கர், நிலக்கோட்டை ஆகிய இந்த ஒன்பது தொகுதிகளைத்தான் இடைத் தேர்தலில் பறி கொடுத்தது தி.மு.க.
இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராயவும் விசாரிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது கட்சித் தலைமை. இந்தக் குழுவில் விளாத்திகுளம் தொகுதி தோல்வி குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் பரந்தாமனும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பாவும் கடந்த 26-ஆம் தேதி விளாத்திகுளம் வந்திறங்கினர்.
தூத்துக்குடி வடக்கு மா.செ. கீதாஜீவன், வேட்பாளர் ஜெயக்குமார், நான்கு செயற்குழு உறுப்பினர்கள், ஆறு ஒ.செ.க்கள், எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் ந.செ.க்கள் என தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்கம்மாள் மண்டபத்தில் விசாரணைக் கூட்டம் ஆரம்பமானது. அனைவரையும் ஒன்றாக அமர வைத்து விசாரணையை ஆரம்பித்தனர் பரந்தாமனும் ஈஸ்வரப்பாவும்.
"கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை சரியான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் இல்லை. மா.செ. கீதாஜீவனும் மேம்போக்காகத்தான் நடந்துகொண்டார். சில ஏரியாக்களில் ஒருசார்பு நிலை எடுத்தார்' என கீதாஜீவன் மீது ஓப்பனாகவே குற்றம்சாட்டினார்கள்.
அதன்பின் மறுநாள் அதே மண்டபத்தில் இருந்த தனி அறைக்கு ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியே அழைத்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
""நான்குமுனைப் போட்டி இருக்கு. அ.ம.மு.க.வும் சுயேட்சையும் ஓட்டைப் பிரிப்பதால் நாம ஈஸியா ஜெயிச்சுரலாம்னு எல்லோரும் மிதப்புல இருந்துட்டோம். அந்த மிதப்பு அதிகமா போனதாலதான் பணப்பட்டுவாடாவும் சரியா நடக்கலை. இந்தத் தொகுதியில் மெஜாரிட்டியாக இருக்கும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருத்தர் விளாத்திகுளம் வந்தபோது, அமைச்சர் கடம்பூர் ராஜு, அவரைச் சந்தித்து கரெக்ட் பண்ணிட்டார். நம்ம நிர்வாகிகள் கோட்டை விட்டுட்டாங்க''’என குமுறியிருக்கிறார்கள் நிர்வாகிகள். அதன்பின் மா.செ. கீதா ஜீவனிடமும் வேட்பாளர் ஜெயக்குமாரிடமும் தனித்தனியே விசாரித்துவிட்டுக் கிளம்பிவிட்டது விசாரணைக் குழு.
இதற்கிடையே திருச்சி மா.செ. கே.என்.நேரு, கடந்த 29-ஆம் தேதி விளாத்திகுளம் அம்பாள் நகருக்கு வந்தார். அவரை வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார், விளாத்திகுளம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ.வான மார்க்கண்டேயன். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்திருப்பதால், விரைவில் தி.மு.க.வில் மார்க்கண்டேயன் இணையலாம் என்கிறார்கள் உ.பி.க்கள்.