நேற்று இரவு கோவையிலிருந்து தேனிக்கு வாக்குப்பதிவு பெட்டிகள் வந்திறங்கின. இதைப்பார்த்த எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர். அந்த வாக்குப்பெட்டிகளை கொண்டுவரப்பட்டதில் சந்தேகம் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விளக்கமும் தெளிவாக இல்லை எனக்கூறி திமுக புகார் மனு அளித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்த கருத்து.
பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓர் இடத்தில் இருந்து, தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறைதான். தேவை கருதியே அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மற்றும் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து தேனிக்கும், 20 விவிபாட் இயந்திரங்கள் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளன. ஒருவேளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் அப்போது தேவைப்படும் அதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது.
பூந்தமல்லியில் ஒரு வாக்குச்சாவடி, கடலூரில் ஒரு வாக்குச்சாவடி, பாப்பிரெட்டிபட்டியில் 8 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ள சூழல் நிலவுகிறது. மேலும் சில வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.
ஒருவேளை அப்படி கூடுதலாக சில வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் இயந்திரங்கள் தேவைப்படும். அதனால்தான், தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மற்றும் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதைத்தான் செய்கிறோம். இதில் எந்த தவறும் இல்லை. எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பது இதுவரை எங்களுக்கு தெரியாது” என்றார்.
இதன்மூலம் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.