ஆர்டர்லி முறை ஒழிப்பில் கடும் எச்சரிக்கையை உயர்நீதிமன்றம் முன்னமே விடுத்திருந்த வேளையில், அதனை பொருட்படுத்தாது தனது முகாம் அலுவலக காவலர்கள் மூவரை ஆர்டர்லியாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி, அவர்களை கொண்டே ஏராளமான கோழிகளை மேய்க்கப் பயன்படுத்திவருகின்றார் டி.எஸ்.பி.ஒருவர். இதற்காகவே, தனது முகாம் அலுவலக வாசல் கதவினை எந்நேரமும் பூட்டி வைத்திருப்பது தான் தற்பொழுது சர்ச்சையினை உருவாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், ஆழ்வார்குறிச்சி, கடையம், மாஞ்சோலை (மணிமுத்தாறு) காவல் நிலையங்களோடு மற்றும் அம்பாசமுத்திரம் மகளிர் காவல்நிலையத்தையும் உள்ளடக்கியது அம்பாசமுத்திரம் துணைச்சரகம். அம்பை- முக்கூடல் சாலையிலுள்ள இந்த அலுவலகத்தில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றும் ஜாஹீர் ஹுசைனுக்கு உதவியாக டிரைவர், எழுத்தர், புகார்களை வாங்கும் காவலர், சி.சி.டி.என் காவலர் மற்றும் மைக் வெயிட்டிங் காவலர்கள் என மொத்தம் 12 நபர்கள் உண்டு. எனினும், சமீபகாலமாக இந்த அலுவலகம் பூட்டியே கிடப்பது தான் சர்ச்சைக்கு காரணம்.
இதுப்பற்றி கருத்துக்கூறிய அம்பாசமுத்திரம் துணைச்சரகப் போலீசாரோ., " இந்த கேம்ப் ஆபிஸிற்கு டி.எஸ்.பி. வந்ததலிருந்தே காடை, கௌதாரியை தவிர, வான்கோழி, கிண்ணிக்கோழி, சண்டை சேவல், நாட்டுக்கோழிகள் என அனைத்தையும் இங்கேயே வளர்க்க ஆரம்பிச்சுட்டார். பறவை மேல் உள்ள மோகத்தால் இப்படி செய்யுறாருன்னு இருந்தோம். நாளடைவில், "என்ன கோழிகளுக்கு தீவனம் போடலையா.?" என்பதில் ஆரம்பித்து தீவனம் வாங்கி வரக்கூறுவது மட்டுமில்லாமல், கோழிகளுக்கு ஊசி போட்டு கூட்டிட்டு வருவது வரை எங்க வேலைதான். சமீபத்தில், கோழிகளை கண்ணும் கருத்துமாக மேய்த்துக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ஐ. ரேங்கில் இருந்த அதிகாரியும் ஓய்வுப் பெற்று விட்டார். இப்ப இருக்கின்ற மொத்த ஆட்களில் ஒருவர் மாற்றி ஒருவர் என மூன்று பேர் தினசரி கோழிகளை மேய்ப்பது தான் எங்கள் வேலையே..! இதனால் தான் மெயின் கேட்டை மூடியுள்ளோம். இந்தக் கொடுமையை அப்படியே புகாராக எழுதி மாவட்ட எஸ்.பி.க்கும், டி.ஜி.பி.அலுவலகத்திற்கும் அனுப்பியிருக்கின்றோம்" என்றார்கள் அவர்கள். இதுக்குறித்து கருத்தறிய டி.எஸ்.பி.ஜாஹீர் ஹீசனைத் தொடர்புக் கொண்டோம். பதிலில்லை. இது வாட்ஸ் அப்களில் வைரலாக பரவ, மீண்டும் ஆர்டலி முறையா..? கோழி மேய்ப்பதற்கு அரசு சம்பளமா..? என கேள்விகள் எழுந்து காவல்துறை மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.