குட்டி காஷ்மீர் என்றழைக்கப்படுகிற குளிர் பிரதேசமான மாஞ்சோலை உள்ளிட்ட நான்கு எஸ்டேட் மலைப் பிரதேசங்கள், சீர்கேட்டினை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் மணிமுத்தாறு பகுதியை ஒட்டிய தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் சுமார் 4,600 அடிக்கும் மேலான உயரத்திலிருக்கின்றது ரம்மியமான கடுங்குளிர் பகுதியான மாஞ்சோலை. கோடைக் காலங்களில் தரைமட்டத்தில் வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைக்கிற நேரத்தில் மாஞ்சோலைப் பகுதியில் மைனஸ் டிகிரிக்கும் கீழான குளிரடிப்பதால் தென்மண்டலத்தின் குட்டி காஷ்மீர் என்றழைக்கப்படுகிறது. மலைத் தண்ணீர், மாசுபடாத அக்மார்க் ஆக்சிஜன் காற்று, கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைக் கம்பளத்தைப் போர்த்தியதைப் போன்ற தேயிலைத் தோட்டங்கள் என்பதால் கோடையைத் தணிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மாஞ்சோலைப் பகுதியை முற்றுகையிடுவதுண்டு.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிற வனத்துறை, சுற்றுலாப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுற்றுச் சூழலை சீர்கெடுக்கிற பொருட்களைக் கொண்டு சென்றால் அபராதம். மாஞ்சோலை செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கே செல்கிற அரசுப் பேருந்துகளில் பயணிக்க முடியாது. சுற்றுலா செல்லும் பயணிகள் வனத்துறையினரிடம் முன்பதிவு செய்து, அவர்களின் சோதனை முடிக்கப்பட்டு, மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களிலேயே காலை 9 மணிக்குப் பயணித்து, மலை சீதோஷ்ணக் காட்சிகளை அனுபவித்துவிட்டு மாலை 5 மணிக்கு அந்த வாகனத்திலேயே தரையிறங்கிவிட வேண்டும். தடையை மீறினாலும், இரவு அங்கு தங்கினாலும் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
மாஞ்சோலை, குதிரைவெட்டி, காக்காச்சி மற்றும் ஊத்து எஸ்டேட் பகுதிகளில் தேயிலையைப் பறிப்பதற்கும், அவற்றை பிராசஸ் செய்வதற்குமான குத்தகை, வெள்ளைக்காரன் காலத்திலேயே பி.பி.டி.சி. எனப்படுகிற பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி வசம் தரப்பட்டுள்ளதால், பி.பி.டி.சி.யே தேயிலைத் தொழிலாளர்களை குடும்பம் குடும்பமாகக் கொண்டுவந்து குடியமர்த்துகிறது. நான்கு எஸ்டேட்களிலும் சுமார் 1200 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்குட்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். தோட்டப் பகுதிகளில் வசிக்கிற உள்ளூர்வாசிகளான இவர்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து விதிவிலக்கு.
இந்தச் சூழலில், மாஞ்சோலைப் பகுதியில் அமைந்துள்ள 10 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளியில் பயில்கிற 6 பள்ளி மாணவர்கள், அங்குள்ள சர்ச் ஒன்றின் பாதிரியார் (ஆன்டோ என்று சொல்லப்படுகிறது) தலைமையில், இரவு வேளையில் காரில் குதிரை வெட்டி, காக்காச்சி எஸ்டேட் மலைவனப் பகுதிக்குள் சென்று ஆட்டம் பாட்டத்துடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள். இது தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அக்டோபர் 27 அன்றும் குத்தாட்டத்துடன் இரவு முழுக்க வனப்பகுதி அமர்க்களப்பட்டிருக்கிறது.
சம்பவம் எப்படியோ வீடியோவாகி மலைப்பிரதேசத்தைக் கலக்கிவிட்டுத் தரையிறங்கி பரபரப்பாக்கியதுடன், வனத்துறையின் தலைமை வரை போயிருக்கிறது. அதிர்ந்து போன அம்பை கோட்ட வனத்துறை உயரதிகாரிகள், அந்த வீடியோவிலிருக்கும் அனைவரையும் வரவழைத்து விசாரணை நடத்தியதில் குத்தாட்டம் உறுதியானதால், அனைவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவெடுத்து, தொடர்புடையவர்கள் பள்ளி மாணவர்கள் என்ற காரணத்தால் அவர்களைக் கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நாம் அம்பை வனக்கோட்டத்தின் முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநரான செண்பகப்பிரியாவிடம் பேசியதில், “அவர்கள் மாணவர்கள் என்பதால் எச்சரித்து அனுப்பியிருக்கிறோம். நடந்தவை குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம். மேலும் அங்கு வேறு சம்பவங்கள் ஏதேனும் நடக்கிறதா என்ற விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
தவிர, கடந்த வாரம் நெல்லை மாவட்ட டவுன் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியான மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை ஆய்வு செய்துவிட்டு தரையிறங்க மாலை 5 மணிக்கும் மேலாகிவிட, வழியோர வனத்துறை சோதனைச் சாவடியில் அவரை வழிமறித்த வனத்துறையினர், மாலை 5 மணி தாண்டிவிட்டதால் அவருக்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமான ஏ.டி., “நான் அரசு அதிகாரி. மாஞ்சோலைக்கு ஜாலி டூர் போகவில்லை. அரசு வேலையாகச் சென்றேன். அபராதத் தொகையைக் கட்ட முடியாது” என்றவர், அரசு ஜீப்பை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார். அதற்குள் விஷயம் வனத்துறையின் உயரதிகாரியின் காதுவரை போக, பதறிப்போய் சோதனைச் சாவடியிலுள்ள வனத்துறையினரை ஒரு பிடிபிடிக்க, அரண்டு போனவர்கள், அதிகாரியை சமாதானப்படுத்தி வருத்தம் தெரிவித்து ஜீப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இவ்வளவுக்குமிடையே, மலைமீது இரவுப் பொழுதில் ஒருசிலர் மான் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். இப்படியாக குத்தாட்டம், கும்மாளம், மான் வேட்டையென நிலைமை கைமீறிப் போனால், குட்டி காஷ்மீரான மாஞ்சோலை நிறமே மாறிப் போய்விடுமென்றும், அதிகாரிகள் கடுமை காட்ட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார்கள் மணிமுத்தாறின் முக்கியப் புள்ளிகள்.