Skip to main content

சிவகங்கை அ.தி.மு.க. கலட்டா! அதகளமான பூத் கமிட்டி கூட்டம்! 

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Sivagangai admk booth committee meeting

 

"......தா.....டா' என்கின்ற தடித்த வார்த்தைகளும், "என்னையப் பத்தி பேசுறியா? கழுத்தை அறுத்துப் போட்டுவிடுவேன்' என்கின்ற வார்த்தைகளும் சர்வசாதாரணமாக கிடைக்கின்றது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் நடத்திவரும் பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில்.

 

அடிப்படையிலிருந்து வந்தால்தான் கட்சியைப் பலப்படுத்த முடியும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றார் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இதன் ஒருகட்டமாக பூத் கமிட்டியில் என்னென்ன செய்ய வேண்டுமென ஆறு நிபந்தனைகளை விதித்து, அதற்காக மாவட்டந்தோறும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தி வருகின்றது அ.தி.மு.க. அதனையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பூத் கமிட்டியினை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக பூத் கமிட்டி பொறுப்பாளருக்கான மேலிட பார்வையாளராக கழக அமைப்புச் செயலாளரான ராதாபுரம் சீனிவாசனை நியமித்தது மாநிலத் தலைமை.

 

சம்பவம் 1:


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 334 பூத் கமிட்டிகளுக்கான பொறுப்பாளர்களை நியமிப்பதற்காக, அதே சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 84 மாவட்ட பொறுப்பாளர்களை கொண்டு அச்சுக்கட்டுப் பகுதியிலுள்ள தனியார் ஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிடப் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ராதாபுரம் சீனிவாசன், மா.செயலாளரும் சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன், மாவட்ட அவைத்தலைவர் ஏவி. நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில், ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 

 

Sivagangai admk booth committee meeting

 

இதில், "அ.தி.மு.க. தொண்டனின் பணி, புனிதப்பணி.. இந்த பணியை நாம் செய்து மீண்டும் எடப்பாடியாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும்'' என நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்தார் மா.செ. செந்தில்நாதன். அடுத்து மைக் பற்றிய ராதாபுரம் சீனிவாசனோ, "இந்த பூத் கமிட்டியை நிர்வாகிகளாகிய நீங்கள் வலுவாகவும், அர்ப்பணிப்போடும் அமைத்துக் கொடுத்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது, இரட்டை இலைக்கு யார் விசுவாசமாக இல்லையோ அவர்களை எந்த பூத் கமிட்டியிலும் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என புரட்சி தமிழர் எடப்பாடியார் கட்டளையிட்டுள்ளார்'' என்றார்.

 

இந்நிலையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கட்சியில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவனோ, "இந்த பூத் கமிட்டி விஷயத்தை முன்னரே செய்திருந்தால் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை நாம் இழந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு ஆளும் கட்சியினரோடு நம்ம அ.தி.மு.க. கட்சிக்காரங்க லிங்க் வைத்திருப்பதால் தோல்வி கிடைக்குது. இப்பகூட பாருங்க, சிங்கம்புணரி சேர்மன் விளம்பரத்துல அமைச்சரோட படத்தைப் போட்டு விளம்பரப்படுத்துறாங்க. அது தேவையில்லாத ஒன்று'' என காட்டமாக உரையாற்றிவிட்டு உட்கார்ந்தார்.

 

இதற்கு விளக்கம் கொடுப்பதற்காக எழுந்த மா.செ. செந்தில்நாதனோ, "இப்படி அத்தனை பேரு முன்னால் பேசியதை தவிர்த்திருக்கலாமே? இங்கு யாரும் யாரோடும் லிங்கில் இல்ல'' என்றதுதான் தாமதம், சட்டென எழுந்த உமாதேவனோ, "நேரிடையாக சொல்றேன். உன்னையத்தான் சொல்றேன். உன்னுடைய உள்ளடி வேலைகளால் அசோகனும், மருது அழகுராஜூம் தோற்றது தெரியாதா என்ன?'' என பதிலுக்கு எகிற, அந்த இடமே அதகளமானது. "வெளியே போடா! வெளியே போடா!' என உமாதேவனுக்கு எதிராக குரல் அதிகரித்த நிலையில், தடித்த வார்த்தைகள் இரு தரப்பிலும் அதிகரித்தன. இதில் சிங்கம்புணரி சேர்மன் தரப்பினை சேர்ந்தவர்கள் உமாதேவனின் காரை எட்டி மிதித்ததாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து கருத்தறிய முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவனை தொடர்புகொண்டோம். பதிலில்லை. மா.செ. சார்பில் பேசியவர்களோ, "நல்லபடியாக சென்று கொண்டிருந்த கட்சியில் குழப்படி உருவாக்கவே வந்திருக்கின்றார் உமாதேவன். ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கட்சி என்ற நிலையில் இப்பொழுது திருப்பத்தூர் சட்டமன்றத்தினை குறிவைத்து வந்திருக்கின்றார். அதற்காகத்தான் இந்தப் பேச்சு. திருப்பத்தூர் சட்டமன்றத்தில் தி.மு.க.வோடு லிங்க் இருந்தால் சிங்கம்புணரி சேர்மன் பதவியை நாங்கள் எப்படி கைப்பற்ற முடியும்..?'' என்கின்றனர் அவர்கள்.

 

சம்பவம் 2:


முந்தைய நாள் திருப்பத்தூரில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், மறுநாள் காரைக்குடி நகரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மா.செ. செந்தில்நாதன், மேலிட பார்வையாளர் ராதாபுரம் சீனிவாசன் உள்ளிட்டோர் பொறுப்பாளர் கமிட்டிக்கான ஆலோசனைகளை வழங்கி புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், "டேய்... நீதான் ஐயப்பனா..? ................என்கிட்ட பேசமாட்டியா..? மேலிடப் பார்வையாளரிடம்தான் பேசுவியா..?'' என தடித்த வார்த்தைகளால் காரைக்குடி நகர 2வது வார்டினைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளரான ஐயப்பனை அனைவரது முன்னிலையில் எகிறியிருக்கின்றார் காரைக்குடி ந.செயலாளரான மெய்யப்பன். "நீங்க கட்சியை நடத்துற லட்சணம் தெரியும். அதுதான் நேரடியாக மேலிடப் பார்வையாளரிடம் பேசினேன்'' என்றிருக்கின்றார் ஐயப்பன்.

 

Sivagangai admk booth committee meeting

 

மா.செ. செந்தில்நாதனும், மேலிடப் பார்வையாளரும் தேமே என்று பார்க்க மீண்டும், "எவனிடம் சொல்லியும் என்னை ......முடியாதுடா... இங்கேயே கழுத்தை அறுத்துப் போட்டுருவேன்'' என எகிறிய நகர செயலாளர் மெய்யப்பனை அமைதிப்படுத்தியிருக்கின்றனர் அருகிலிருந்தவர்கள்.

 

பத்து வருடங்களாக மா.செ. பதவி வகித்துவரும் செந்தில்நாதனை இச்சம்பவங்கள் அசைத்துப் பார்த்திருக்கின்றன என்பதுதான் நிஜம்.

 

-நா.ஆதித்யா


படங்கள்: விவேக்