இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் என்பதால் இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்பட்டு வருகிறார் தாதா சாகெப் பால்கே. இவரின் நினைவாகத்தான் இந்திய திரைப்படத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.
1969ம் ஆண்டிலிருந்து இயக்குநர்கள் சத்யஜித்ரே, எல்.வி.பிரசாத், வி.என்.ரெட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், சியாம் பெனகல், கே.விஸ்வநாத், கே.பாலசந்தர், யாஷ் சோப்ரா, டி.ராமாநாயுடு, நடிகர்கள் பிரித்விராஜ் கபூர், ராஜ்கபூர், திலிப்குமார், நாகேஷ்வரராவ், சிவாஜி கணேசன், தயாரிப்பாளர்கள் வி.சாந்தாராம், பி.நாகிரெட்டி, டி.ராமாநாயுடு, இசையமைப்பாளர்கள் நௌஷத், பாடகர்கள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, பாடலாசிரியர் குல்சார் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். 2018ம் ஆண்டிற்கான விருதுக்காக நடிகர் அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தாதா சாகேப் விருதுக்கு தேர்வுபெற்ற அமிதாப்பிற்கு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் வாழ்த்துகள் சொல்லிவரும் நிலையில், வழக்கம்போல தனது சர்ச்சையை ஆரம்பித்துள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. 1913ம் ஆண்டில் பால்கே இயக்கம், தயாரிப்பில் வெளிவந்த ‘ராஜா அரிச்சந்திரா’ படம்தான் இந்தியாவின் முதல் மவுனப்படம். ’’பலமுறை முயற்சி செய்தும் இப்படத்தை 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. ஆனால், அமிதாப்பச்சன் நடித்த பல படங்களை 10 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். அமிதாப்பச்சனுக்கு பால்கே விருது தருவதை விட, பால்கேவுக்குத்தான் அமிதாப்பச்சன் விருது தரவேண்டும்’’ என்று இன்ஸ்டாகிராமில் கிண்டலடித்துள்ளார்.
முன்னோர் நடந்து சென்ற ஒத்தையடிப்பாதைகள்தான் இன்று தார்ச்சாலைகளாக பளபளக்கின்றன. காலமாற்றங்களின் வளர்ச்சியையும், முன்னோடிகளையும் உணராத ராம்கோபால் வர்மாவுக்கு பலரும் கணடனங்களை தெரிவித்துள்ளனர்.