தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசும்போது, "பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும்" என பேசி இருந்தார். இந்நிலையில் இது குறித்து கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் நக்கீரன் யூடூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பின்வருவனவற்றை பேசினார்..
"இதற்கு முன்பாகவே அண்ணாமலை பேசும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்து விடுவோம் என்று சொல்கிறார். பழைய கதைகளை எல்லாம் எடுத்துப் பாருங்கள். ஆரம்பத்தில் ராஜாக்கள் கட்டிய கோவில்கள் ராஜாக்கள் கோவில்கள் எனப்பட்டன. ராஜாக்கள் எல்லாம் அதன் நிர்வாகத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆகவே அந்த கோயில் உடைய முழு அதிகாரங்களும் ராஜாக்களிடம் இருந்தது. அதே ராஜாக்கள் நிறைய மானியங்கள் வருமானங்கள் எல்லாம் கோவிலுக்கு போய் சேர வேண்டும். அர்ச்சகர்களும் கொடுக்க வேண்டும் என்று கல்வெட்டுகள் எல்லாம் கூட இருக்கிறது. அந்த கோவிலுடைய சொத்துக்களை அநியாயமாக அபகரிப்பவர்களுக்கு என்ன பாவம் வந்து சேரும் என்றால் தன்னுடைய சொந்த தாய்க்கு செய்த பாவம் உங்களுக்கு வந்து சேரும் என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.
இந்த நிலைமை தான் கோவில்களில் தொடர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு கோவில் நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொண்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இதன் பிறகு கிறிஸ்தவ கொள்கைக்கு எதிரானது என்றதால், அதை எல்லாம் விட்டுக் கொடுக்க சொன்னதால் விட்டுக் கொடுத்து விட்டார்கள். மறுபடியும் கோவில் சொத்துக்கள் எல்லாம் கோவிலின் அறங்காவலர்கள், தர்மகர்தாக்கள் என்ற பெயரில் பலவாறு சூறையாட ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு பிறகு மறுபடியும் கோவில்களை எல்லாம் கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வருகிறார்கள். 1925 ல் முதல் முறையாக இந்து அறநிலையத்துறை சட்டத்தை கொண்டு வந்தனர். அதன் பிறகு 1951 இல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஓமந்தூரார் போன்ற பிரமாதமான ஆன்மிக செம்மலை பார்க்கவே முடியாது. ராஜாஜி, நேரு போன்றோர் எல்லாம் 1947 இல் அவரை முதல்வராக ஆக கேட்ட போது, ரமண மகரிஷியிடம் அனுமதி கேட்டு அதன் பிறகு 6 மாதம் கழித்து அந்த பதவியை ஏற்று கொள்கிறார். கோவில் நிர்வாகம் தொடர்பாக ஓமந்தூராருக்கு நிறைய புகார்கள் வருகிறது. அதனால் அவர், 60 க்கும் மேற்பட்ட புகார்கள் மீது வழக்குகள் போட சொல்லுகிறார். அதன் பிறகு ‘நீங்கள் முதல்வராக வர வேண்டும் என்று சொன்னதால் வந்தேன். இப்போது நீங்கள் போக சொன்னதால் போகிறேன்’ என்று சொன்னார். அப்படிப்பட்ட உத்தமான மனிதர் ஓமந்தூரார். அறங்காவலர்கள் சிப்பந்திகள் செய்கிற அக்கிரமங்கள் எல்லாம் பற்றி அவர் சொல்லி இருக்கிறார்.
அதற்குப் பிறகு 1951 இல் ஒரு சட்டம் வருகிறது. பின் அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, மாற்றி அமைத்து 1959 இல் மீண்டும் சட்டம் வருகிறது. இதைப் பார்க்கும்போது அரசாங்கத்தின் கையில் கோயில்கள் இருப்பது தான் நல்லது. ஆரம்பத்தில் நான் கோவில்கள் எல்லாம் அரசாங்கத்திடம் இருக்கக் கூடாது என்று தான் பேசி உள்ளேன். அரசே ஆலயத்தை விட்டு விலகு என்று எல்லாம் பேசி உள்ளேன். இவ்வாறு பேசியது எல்லாம் சரியான புரிதல் இல்லாத வரை தான் அப்படி பேசினேன். ஆனால் ராமசுப்ரமணியன் மாற்றி பேசுகிறார் என்று எண்ணிவிடக் கூடாது. காஞ்சி மகா பெரியவரின் தெய்வத்தின் குரல் நூலின் 7 தொகுதியை படித்து பாருங்கள் கோவில்களின் நிர்வாகம் என்பது நிச்சயம் அரசாங்கத்திடம் இருப்பது நல்லது. தனியாரிடம் சென்றால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று சொல்ல முடியாது. நிறைய சொத்துக்கள் சூறையாடல் எல்லாம் ஏற்படும் என்று அதில் சொல்லி இருக்கிறார்.
குறிப்பாக டி.ஆர். பாலுவின் ஒன்றும் இல்லாத அவரின் இந்த பேச்சை மத கலவரத்தை உருவாக்க நினைத்து பரப்பினார்கள். கடைசியில் புஷ்னு போய் விட்டது. இது மாதிரி வீடியோக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அண்ணாமலை புழுதியை வாரி இறைத்து வருகிறார். இப்போது இந்த விஷயத்தையும் ஒட்டியும் வெட்டியும் செய்து வருகிறார். நியாயமா இது ?. ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் இதை வைத்து பொதுமக்களிடம், ‘ போய் பாருங்கள் கோவிலை இடித்தவர் இவர் தான். இந்த ஆட்சி இருக்கலாமா. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கோயில்கள் வரலாமா’ என்று கேள்வி கேட்பது நியாயமற்றது, அபாண்டமானது அதர்மமானது" என்று பேசினார்.