‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் நிகழ்ச்சியை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பரப்புரை செய்து வருவதோடு, மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். அ.தி.மு.க. அரசை வரும் தேர்தலில் மாற்றியமைக்க தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு பரப்புரை செய்து வருகிறார்.
3 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, ராமநத்தம் உட்பட பல்வேறு இடங்களில் வாகனத்தில் நின்றபடியும் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்தபடியும் நான்கு பக்கமும் சுற்றி சுழன்று மக்கள் இடையே பிரச்சாரம் செய்தார். இளைஞர்களும் பெண்களும் உதயநிதிக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மிக எளிமையாக பந்தா இல்லாமல் அவர் மேடையில் பேசுவது மக்களை கவர்ந்துள்ளது.
நெய்வேலி அனல் மின் நிலைய பாய்லர் வெடித்து 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு, தொழிலாளர்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார். பின் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பேசிய உதயநிதி, “அடிமை அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற செய்ததுபோல் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதில் இளைஞர் அணியினர் கூடுதல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்” என்று பேசினார்.
அடுத்து பெண்ணாடம் அருகிலுள்ள வெண்கரும்பூரில் பேசும்போது, “தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக பதவியேற்கும் தலைவர் ஸ்டாலின், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவார். தமிழக முதல்வர் எடப்பாடி, யாருக்கும் விசுவாசியாக இருக்கமாட்டார். அதற்கு உதாரணம் சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தார். பிறகு நானே முதல்வர் ஆனேன் என்கிறார். முதல்வராக்கிய சசிகலாவுக்கு அவர் விசுவாசியாக இருந்தாரா, இல்லை. பின் தமிழக மக்களுக்கு எப்படி அவர் விசுவாசியாக இருப்பார். எனவே பாராளுமன்றத் தேர்தலில் அவர்களை துரத்தி அடித்ததுபோல வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வையும் பி.ஜே.பி.யையும் துரத்தியடிக்க வேண்டும்” என்றார். அதன்பின் பெண்ணாடம் பஸ் நிலையம், ஆவினங்குடி, திட்டகுடி ஆகிய இடங்களில் வேனில் நின்றபடியே பரப்புரை செய்துவிட்டுப் புறப்பட்டார்.
புவனகிரி தொகுதியில் உதயநிதி, வேனில் இருந்தபடியே மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கீழே நின்று கொண்டிருந்த புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சரவணனைப் பார்த்த உதயநிதி, அவரை வேனின் மேற்பகுதிக்கு வரவழைத்து புவனகிரி தொகுதி வேட்பாளர் மீண்டும் சரவணன்தான் என்று அறிமுகம் செய்து அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்றார். மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்த உதயநிதி, மற்ற யாரையும் இவர்கள்தான் உங்கள் தொகுதி வேட்பாளர் என்று கூறவில்லை. துரை சரவணனனை மட்டும் மீண்டும் இவர்தான் புவனகிரி வேட்பாளர் என்று அவர் குறிப்பிட்டு பேசியது கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தலைமை, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி யாருக்கு எத்தனை தொகுதிகள் எந்தெந்தக் கட்சிகளுக்கு என்று வரையறை செய்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் உதயநிதி, துரை சரவணன் புவனகிரி வேட்பாளர் என்று அறிவித்துள்ளது தி.மு.க. மட்டுமல்ல அதன் கூட்டணிக் கட்சிகளிடம் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்தார் உதயநிதி. இவரின் பரப்புரை நிகழ்ச்சியில் இவர் பேசும்போது, ஒரு இடத்தில் பேசிய செய்திகளையே அடுத்தடுத்த இடங்களிலும் தொடர்ந்து பேசிவருகிறார். இதில் மாற்றம் செய்தால் இன்னும் அவருடைய பேச்சுக்கு வரவேற்பு இருக்கும் என்கிறார்கள் கட்சி தொண்டர்கள்.
உதயநிதியின் மூன்று நாள் நிகழ்ச்சிகளை கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தனது பிரச்சார சுற்றுப்பயண இடையில் உதயநிதி ஸ்டாலின் சர்பிரைஸ் விசிட்டாக தோனி ரசிகரின் வீட்டுக்குச் சென்றார். அந்த குடும்பத்தினரை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தார்.
திட்டக்குடி அருகில் உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கோபி, கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி சரியாக விளையாடவில்லை என்று பலரும் கடுமையாக விமர்சனம் செய்த நேரத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்ற கருத்தின் அடிப்படையில் தனது வீட்டை ஒன்றரை லட்சம் செலவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலரில் வண்ணம் செய்து அதில் சிங்கம் படம் வரைந்து பார்ப்போரை எல்லாம் வியக்க வைத்து அசத்தினார்.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. நாமும் அதை அப்போது செய்தியாக வெளியிட்டோம். இதை தெரிந்திருந்த உதயநிதி, தனது பிரச்சார சுற்றுப்பயண இடையில் திடீரென்று மாவட்ட செயலாளர் கணேசனுடன் கோபி வீட்டிற்கு சென்றார். அவரது வீட்டில் தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள் மட்டுமே இருந்தனர். திடீரென்று உதயநிதி ஸ்டாலின் தங்கள் வீட்டிற்கு வந்தது அவர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் வைத்து விட்டது.
அவர்களிடம் பேசிய உதயநிதி, “எனக்கும் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆர்வம் உண்டு. தங்களது மகன் கோபி வித்தியாசமான முறையில் சென்னை அணியை உற்சாகப்படுத்தும் விதத்தில் வீட்டுக்கு வண்ணம் அடித்து வெளிப்படுத்தியதன் மூலம் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கையில் வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது கருத்து பலரையும் கவர்ந்தது. அதன் அடிப்படியில் கோபியைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்தேன்” என்று கூறினார்.
கோபி, ஒரு மாதத்திற்கு முன்புதான் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். உடனே அவர்களது குடும்பத்தினர் வீடியோகால் மூலம் உதயநிதியிடம் பேச வைத்தனர். உதயநிதி மேற்படி கருத்தை கோபியிடம் கூற, கோபி சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார். நீங்கள் எங்கள் வீட்டிற்கு வருவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு விமானம் பிடித்து ஊருக்கே வந்திருப்பேன் என்று சந்தோஷப்பட்டார்.
நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்றார். அப்போது உதயநிதி ஸ்டாலின், “நீங்கள் இங்கிருந்து இருந்தால் உங்களோடு சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடும் எண்ணத்தில் இருந்தேன்” என்று ஜாலியாக பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கோபி சந்தோஷத்தில் நன்றி கூறினார். இதையடுத்து பெரியநெசலூர் கிராமத்தில் மக்களை சந்தித்து தி.மு.க.விற்கு ஆதரவு கேட்டுவிட்டு கடலூர் மாவட்ட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அரியலூர் மாவட்டம் புறப்பட்டார். அரியலூர், பெரம்பலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் இரண்டு நாட்கள் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி அரியலூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அரியலூர், திருமானூர் பகுதிகளில் தனது பிரசாரத்தை நடத்திய உதயநிதி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட குழு மூரில் உள்ள அனிதாவின் நினைவு நூலகத்திற்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர், செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமமூர்த்தி ஆகியோருடன் சென்றார்.
அந்த நூலகத்திற்கு 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை பரிசளித்ததோடு அங்கு மரக்கன்று நட்டார். மேலும், அனிதா குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறிய உதயநிதி லப்பைக்குடிக்காடு வழியாக பெரம்பலூர் பகுதியில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.