அமெரிக்க தலைநகர், வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் வன்முறையின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பலியாகியுள்ளனர். இச்சம்பவத்தால், அதிகாரப்பூர்வமாக பைடனை அடுத்த அமெரிக்காவின் அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி ஆறுமணி நேரம் தடைப்பட்டது. ட்ரம்பின் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து மீண்டும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு ஜோ பைடன், ஒபாமா, போரீஸ் ஜான்சன், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் ரிபப்பிளிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதேபோல் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என ஆதரவாளர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப், மைக் பைனஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வன்முறை தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் 12 மணி நேரத்துக்கு முடக்கப்பட்ட நிலையில், ட்ரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் ஆதரவாளர்களின் இந்தச் செயலால், ஜனநாயகம் படிப்படியாக அழிந்துவருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வன்முறைக்கு ஆரம்பப்புள்ளியாக இருப்பவர் ட்ரம்ப். தன்னுடைய ஆதரவாளர்களை நாடாளுமன்றம் இருக்கும் ‘கேபிடல் ஹில்லுக்கு வந்து போராடுங்கள்’ என்று முதலில் கூறியவர் ட்ரம்ப்தான். அதனைத் தொடர்ந்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகளைப் பதிவிட்டு வந்தனர். அதன்பின்னர்தான் கேபிடள் ஹில்லை முற்றுகையிட்டு, செனேட்டினுள் (நாடாளுமன்றம்) சென்று கலவரத்தைத் தொடங்கினார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவின் சட்ட வல்லுநர்கள் பலர் 25வது அமெண்ட்மண்ட்டை பயன்படுத்தி, ட்ரம்பின் அதிபர் பதவியை நீக்குங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். அதேபோல செனேட்டிலுள்ள மற்ற அமைச்சர்களும் ட்ரம்பை நீக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தில் உள்ள 25வது சட்டத் திருத்தம் என்றால் என்ன?
இந்த சட்டமானது 1967ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலையைத் தொடர்ந்து இந்த சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிபர் எந்த பணியையும் சிறப்பாக பார்க்கவில்லை, ஆனால் அந்த பதவியில் இருந்து விலக மறுப்பது குறித்து சட்டத் திருத்தத்தின் பகுதி நான்கு தெரிவிக்கிறது. அதிபர் உடல் அல்லது மனநோயால் தகுதியற்றவராக இருக்கும்போது அமைச்சரவை விண்ணப்பிக்க வேண்டும் என்று 25 ஆவது திருத்தத்தின் வரைவுதாரர்கள் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிபர் பணிக்கு மிகவும் ஆபத்தாக இருப்பவர்களின் மீதும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்தலாம் என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடன் அடுத்த அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு, தற்போதைய அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து விலக இன்னும் பதினான்கு நாட்களே உள்ளன. இருந்தபோதிலும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் இன்னும் விரைவாக ட்ரம்ப் அப்பதிவியில் இருந்து நீக்கப்படுவார்.
அதிபர் ட்ரம்ப்பால் அவருடைய பணிகளைத் திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்றும் அதனால் அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ட்ரம்பின் அமைச்சரவை முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் 25வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்த முடியும். இதன் பின்னர் ட்ரம்ப், தன்னால் மீண்டும் அதிபர் பணியைத் தொடங்க முடியும் என்று தீர்மானம் செய்ய முடியும். டிரம்பின் இந்த தீர்மானத்திற்கு பென்ஸ் மற்றும் பெரும்பான்மை அமைச்சரவை போட்டியிடவில்லை என்றால், டிரம்ப் மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுவிடுவார். டிரம்பின் அறிவிப்பை அவர்கள் மறுக்கும்போது, இந்தப் பிரச்சினை காங்கிரஸால் முடிவு செய்யப்படும், ஆனால் பென்ஸ் அதுவரை ஜனாதிபதியாக தொடர்ந்து செயல்படுவார்.