ரமணன் கோரிக்கையை
அன்பாக மறுத்த தமிழ்நாடு வெதர்மேன்....

சுய விருப்பத்தின் காரணமாக இணையத்தில் வானிலை கணிப்பவர்களைப் பற்றி ஓய்வு பெற்ற ரமணன் கூறியதாவது,
“இந்திய வானிலை ஆய்வு மையமே அரசால் எச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்பு போன்ற தகவல்களை முறையாக மக்களுக்கு அளிக்க அதிகாரபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட துறை. இணைய வசதியை வைத்துக் கொண்டு ராடாரை பார்த்து மழை தொடர்பான அறிவிப்புகளை செய்வது குழப்பத்தை ஏற்படுத்த வல்லது. ஓய்வு பெற்ற நான் செல்லும் பள்ளி கல்லூரிகளில் எனது அனுபவத்தையும் அறிவை பகிர்வேனேயன்றி வானிலை அறிவிப்புகள் செய்வதில்லை. எனவே, ஆர்வலர்கள் மக்களிடையே வானிலை, காலநிலை மற்றும் அதனை எதிர்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்”
ரமணன் பேச்சை மேற்கோள் காட்டிய இணைய புகழ் தமிழ்நாடு வெதர்மேன், தனது முகநூல் பக்கத்தில் பணிவும், நம்பிக்கையும் கலந்து அளித்த பதில்: “தொலைக்காட்சியில் வானிலை குறித்த உங்கள் அறிவிப்பை கேட்டு வளர்ந்தோம். மீண்டும் நீங்கள் தோன்றும் வரை காத்திருந்த தருணங்களுண்டு. அத்தகைய பாதிப்பை என்னைப் போன்ற சாதாராண மனிதனிடம் ஏற்படுத்தியிருந்தீர்கள்.
எனினும், உங்கள் கோரிக்கையை என்னால் ஏற்க முடியாது சார்.... நான் ஒருபோதும் தவறான தகவல் மூலம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது கிடையாது. அதிகாரபூர்வமானது இந்திய வானிலை ஆய்வு மையம் தான், ( Indian Meteorological Department (IMD)) அதற்கு மாற்றே கிடையாது.
மேலும், ராடார் மூலம் தற்போதைய நிலையை மட்டும் பிரதிபலிக்க முடியும். முந்தைய இரவே, நான் மழை தொடர்பான முன்னறிவிப்பை செய்து, மழை பெய்யும் பொழுது உடனுக்குடன் நிகழ்நேர நிலைத் தகவல்களையும் பரிமாறுகிறேன். விளக்கப்படங்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் கணிப்பதை கற்றுக் கொடுக்க முயற்சிக்கிறேன். ஒரு நாள், மக்களே ஆராய்ந்து வானிலை தொடர்பான கணிப்புகளை மேற்கொள்வார்கள். நிச்சயம் அந்த ஒரு நாள் சாத்தியப்படும்! “
-பிரபு