தொடர் மழையை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடவு வேலைக்கிடைத்திருப்பதால் நாட்டுப்புற பாடல்களைப் பாடியபடி உற்சாகத்துடன் நடவுசெய்கின்றனர் பெண்கள்.
நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் பெரும்பாலான ஆற்றுப்பாசனப்பகுதிகளில் தண்ணீர் வராமல்போனதால், ஒருவாரமாக தொடர்ந்து பெய்யும் மழை நீரைக்கொண்டு நெற்பயிர் நடவுப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப்பிறகு நடவு வேலை செய்வதால், நடவுபணியின் போது பழைய வாழ்க்கைக்கு நம்மை திரும்ப அழைக்கும் வகையில், நாட்டுப்புற பாடல்களை பாடி கலைப்பாற நடவுநட்டு அசத்துகின்றனர் வயதான பெண்கள். அதனை கேட்டு ரசித்தபடி பின்பாட்டுப்பாடி நடவு செய்கின்றனர் இளம்பெண்கள்.
நடவுப்பணி ஒருபுறம் தொடங்கியிருந்தாலும் ஆண்கள் வரப்புகளை மண்வெட்டியால் செதுக்கி களைகள் அகற்றுவதும், நாற்றாங்காளில் இருந்து நாற்றை பறிப்பதும், தூக்கிவந்து நடவு பெண்களுக்கு விசிரிவிடுவதுமாக படு ஜோராக விவசாயப்பணிகள் நடந்து வருகிறது. நாற்றுபறிக்கும் விவசாயிகள் கூறுகையில், " சில ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு இயற்கையும், காவிரி தாயும் கருணைக்காட்டி நடவுப்பணி தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து 3 மாதங்களுக்கு களையெடுத்தல், நெல் அறுவடைப்பணி என தொடர்ச்சியாக வேலை கிடைக்கும், வயிற்றுப்பசியில்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகும் " என கூலித்தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.
"சமீப காலமாகவே விவசாயம், ரசாயனத்தையும், அதிநவீன இயந்திரங்களையும் நம்பி நளிந்து பாரம்பரியத்தை இழந்து வருகிறது. இந்த மண்ணையும், விவசாயத்தையும் மட்டுமே நம்பி இருக்கும் கூலித்தொழிலாளிகளை அரசும், விவசாய முதலாளிகளும் கைவிட்டுவிட்டனர். எங்கோ சில இடங்களில் கிடைக்கும் வேலைகளை செய்யும்பொது, இதுபோன்ற நடவுப் பாடல்கள் மூலம் அவர்களின் மன வலிகளை கூறி பாடி உச்சிவெயிலில் அதன்தாக்கம் தெறியாமல், பசி அறியாமல் சேற்றில் இறங்கி அரும்பாடு படுகின்றனர். இதை கருத்தில் கொள்ளாத அரசு உழவுமானியம், நடவுமானியம், உரமானியம் என பெருவிவசாயிகளுக்கு உதவும் அரசு, கூலித்தொழிலாளிகளை கண்டுகொள்ள மறுக்கிறது." என்கிறார்கள் விவசாய கூலித்தொழிலாளிகள்.