Skip to main content

இட ஒதுக்கீட்டால் இரண்டு இடங்களில் மட்டுமே வென்ற எம்ஜிஆர்; அதிமுக தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்கிறது - ராம. சுப்பரமணியம்

Published on 16/11/2022 | Edited on 17/11/2022

 

ர

 

உயர் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. இதுதொடர்பாக மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மேலும் அதிமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை என்று தெரிவித்திருந்தார். 

 

இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ராம. சுப்பிரமணியத்திடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " அதிமுக இந்த விவகாரத்தில் ஆதரிக்கிறதா இல்லையா என்பதை முதலில் சொல்லட்டும். இவர்கள் இன்றைக்கு இதில் மாட்டிக்கொள்ளவில்லை.

 

எம்ஜிஆர் ஆட்சியில் இருக்கும்போது 9 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருப்பவர்கள் எல்லாம் உயர் வகுப்பு ஏழைகள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது என்ன ஆனது என்று இவர்களுக்குத் தெரியுமா? தமிழகத்தில் அப்போது நடைபெற்ற தேர்தலில் இரண்டு இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக தோற்றது. 

 

இவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை, வாயில் வருவதைச் செய்தியாளர்களைப் பார்த்ததும் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். எந்தக் காலத்திலும் இத்தகைய முடிவுகளைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நமக்கு வரலாறு தெரிவித்துள்ளது. ஆகையால் ஜெயக்குமார் போன்றவர்கள் தங்கள் ஆட்சியில் இதற்கு முன்பு என்னென்ன நடைபெற்றது என்ற விவரங்களை முதலில் அறிந்துகொண்டு பிறகு தெளிவாகப் பேச வேண்டும்.

 

பாஜகவினரை எதிர்க்கக்கூடாது, அவர்களுக்கு அடிவருடிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கருத்து தெரிவித்து வந்தால் அதிமுக தமிழகத்தில் காணாமல் போக அதிக நாட்கள் ஆகாது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் அதிமுக தங்கள் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்கிறது.

 


தமிழகத்தில் 80களில் எம்ஜிஆர் கொண்டு வந்த அந்த உயர் பிரிவினர் இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பிறகு உடனடியாக வாபஸ் வாங்கிவிட்டார். இதை திமுக மக்களிடம் கண்டிப்பாகப் பெரிய அளவில் வரும் காலங்களில் கொண்டு செல்வார்கள். எம்ஜிஆர் ஆட்சியில் கலைஞர் அதைத் தீவிரமாகச் செய்தார். தற்போது அதிமுகவுக்கு எதிராக திமுக கடுமையாக இதனைத் தேர்தல் காலங்களில் முன்னெடுத்துச் செல்லும் என்பது எனது எண்ணம்.

 

அவ்வாறு கொண்டு செல்லும்போது இவர்களால் மறுக்க முடியாது. ஏனென்றால் இன்றைக்கு இந்த இட ஒதுக்கீட்டை அதிமுக ஆதரிக்கிறது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவராக வழக்கம்போல் பேசுவதைப்போல் கூறினாரா இல்லை எடப்பாடி கூறச்சொல்லிக் கூறினாரா என்பது தெரியவில்லை. ஆனால் பெரிய அளவில் இதற்காக அதிமுக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.”