பொள்ளாச்சி பகுதியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடூரங்கள் குறித்து வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய இலக்கியவாதியும், அரசியல் பிரமுகருமான நாஞ்சில் சம்பத்,
''இந்த சம்பத்தை நாள் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். தடி கொண்டு பலர் தலையில் அடித்ததைப்போல், இடி வந்து இதயத்தில் விழுந்ததைப்போல் துடித்துவிட்டேன். ஒரு பண்பாடு மிக்க கலாச்சார சிறப்பு மிகுந்த மக்கள் வாழுகிற கொங்கு சீமையில் இப்படி ஒரு அநாகரீகம் அரங்கேறியதை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் நான் துடித்தேன்.
கண்ணகி பிறந்த நாட்டில், மாதவி பிறந்த நாட்டில், மணிமேகலை பிறந்த நாட்டில், காரைக்கால் அம்மையார் பிறந்த நாட்டில் இவ்வளவு பெரிய கலாச்சார சீரழிவு நடந்தேறியிருக்கிறதே என்று நினைக்கும்பொழுது தமிழகத்தில் ஒரு கலாச்சார புரட்சி நடத்த வேண்டியது அவசியம் என உணருகிறேன். அந்த கலாச்சார புரட்சியை முன்னெடுக்கிறவர்கள் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதற்கான தேவை தமிழகத்தில் எழுந்திருக்கிறது.
ஏழு வருடமாக ஏறக்குறைய 286 பெண்கள், தங்கைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, அவைகள் படமாக்கப்பட்டு, 1276 காணொளிகள் வெளிவந்திருப்பதாக வந்த செய்திதான் என்னை அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் என்னை புரட்டிப்போடுகிறது.
எனக்கு இருக்கிற கவலையெல்லாம் யார் பெற்ற பிள்ளையோ? அவளுக்கு இனி என்ன பாதுகாப்பு? அவளுக்கு இனிமேல் என்ன எதிர்காலம்? அவளை இந்த சமுதாயம் இனிமேல் எப்படி பார்க்கும்? இந்த காணொளி காட்சிகளை வைத்திருப்பவர்கள், அதனை ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்தால், அதனை மீட்பதற்கு என்ன வழி?. அரசாங்கத்திடம் அதற்கு ஏதேனும் திட்டமிருக்கிறதா? காவல்துறை இதனை எப்படி கையாளப்போகிறது? வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் இந்த கொடுமைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கு நீதிமன்றம் என்ன தீர்வு சொல்லப்போகிறது?.
எல்லாவற்றையும் தாண்டி ஒரு பாகுபாடு இல்லாத விசாரணை நடத்தி, அந்த பெண்களின் பாதுகாப்புக்கு நீதிமன்றமும், அரசும் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி, அலைஅலையாய் என்னுள் எழுந்து கொண்டிருக்கிறது. இதில் மலிவான அரசியல் செய்வதற்கு நான் விரும்பவில்லை.
அதேசமயத்தில் ஏழு ஆண்டு காலம் இந்த கொடுமை நடந்து கொண்டே இருந்தது என்றால், இதற்கு பின்னால் பெரிய மனிதர்களின் தயவில்லாமல் இது நடந்திருக்காது என்பதுமட்டும் உண்மை. அந்த பெரும்புள்ளி யார்? தமிழ்நாட்டின் அந்த கரும்புள்ளியையும் கண்டுபிடித்து அம்பலப்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமை''. இவ்வாறு கூறியுள்ளார்.