Skip to main content

ராகுல் குரலில் ஒலித்த அண்ணாவின் அரசியல்! தேர்தல் கணக்கா, தமிழ்நாட்டின் வீச்சா?

Published on 03/02/2022 | Edited on 04/02/2022

 

fgh

 

நாடாளுமன்றம் நேரு முதல் மோடி வரை எத்தனையோ பிரதமர்களின் பேச்சுக்களையும், அமைச்சர்களின் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறது. ஆனால் ஒரு பெரும் கட்சியின் பிரதான ஆளுமை, தனது 48 நிமிட உரையில் ஆளும் கட்சியை பார்த்து " உங்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட அந்த மாநில மக்களை ஆள முடியாது" என்று குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை யாரும் சவால் விட்டு பேச்சைப் பதிவு செய்ததாக தகவல் இல்லை. அவ்வாறு சவால் விட்டவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. சவாலுக்கு அவர் எடுத்துக்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இன்று பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகம் செய்து தமிழ்நாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அவரின் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் ஆட்சியை பறிகொடுத்து 50 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் நாங்கள் ஆள்வோம் என்று சொல்லி வீண் சவால் விட விரும்பவில்லை. இந்த தமிழ்நாட்டை பற்றி தமிழக மக்களை பற்றி இந்தியாவில் வேறு எந்த தேசிய தலைவருக்கும் இல்லாத புரிதல் இவருக்கு இருக்கிறது. அதற்கான காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

 

அதனால்தான் இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், 5 ஆண்டுகள் நிறைவடைந்து மீண்டும் தேர்தலை சந்திக்கும் பஞ்சாப் மாநிலத்தையோ, அல்லது தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வேறு ஏதோ ஒரு மாநிலத்தையோ, அல்லது தேர்தல் நடைபெறும் வேறு ஏதோ ஒரு மாநிலத்தையோ கூறி அவர் சவால் விடவில்லை. தமிழ்நாட்டின் கோரிக்கை பற்றி பேசியதால் அவர் தமிழ்நாட்டை பற்றி பெருமையாக பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்று யாரும் அதனை குறைத்து பேச தேவையில்லை. அப்படி என்றால் அவர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி செய்ய போவதை பற்றி பேசியிருக்கலாம், ஆனால், பாஜகவை டார்க்கெட் செய்து உங்களால் முடியாது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. 

 

dhj

 

50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அவர்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டு, தமிழர்கள் வேறானாவர்கள் என்ற புரிதலின் வெளிப்பாடே ராகுலின் தமிழ்நாடு குறித்த நேற்றைய பேச்சு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உங்களால் தனித்து கால் பதிக்க முடிகிறது. மேற்கு வங்கத்தில் முடிகிறது, கேரளாவில் தனித்து சில சட்டமன்ற இடங்களில் வெற்றிபெற முடிகிறது. திரிபுராவில் ஆட்சி அமைக்க முடிகிறது.  ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சி என்ற நினைப்பே உங்கள் வாழ்க்கையில் வரக்கூடாது என்றார் ராகுல்காந்தி! ராகுலின் பேச்சை சற்று கூர்ந்து யோசித்து பார்த்தால் மேலே கூறிய இரண்டு வார்த்தைகள் தான் அவர் தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. எங்கும் முடியும், ஆனால் இங்கு முடியாது என்பதுதான் அது. அது உண்மையும் கூட, வரலாறு இந்தியாவுக்கு அதைத்தான் சொல்கிறது. 

 

குறிப்பாக தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அவர் ஆரம்பித்த கட்சியை தடை செய்வோம் என்று கூறிய அதே காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரையே, அண்ணா 1962ம் ஆண்டு தமிழ்நாடு குறித்து நாடாளுமன்றத்தில் என்ன சொன்னாரோ அதை மீண்டும் ஒருமுறை கூற வைத்துள்ளது காலம். இதை விட அவரின் நினைவு நாளுக்கு வேறு ஒரு சிறப்பு யாரும் செய்துவிட முடியாது. தன்னை காலெமெல்லாம் எதிர்த்தவர்கள் வாயாலேயே தமிழ்நாடு மற்ற மாநிலத்தைப்போல் அல்ல, அவர்கள் வேறானவர்கள் என்று நாடாளுமன்றத்தின் மையமண்டபத்தில் நின்றவாறே ஒரு பெரும் கட்சியின் தேசியத்தலைவரை கொண்டே இந்த தேசத்துக்கே மீண்டும் ஒருமுறை கூற வைத்துவிட்டார் அண்ணா. அவர் அன்று போட்ட விதைதான் இன்று தமிழ்நாட்டை இந்தியாவில் மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் தனித்துவமாக மாற்றி வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. 

 

ஆனால் அதையும் தாண்டி ராகுலின் நேற்றைய பேச்சை வர போகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு முடிச்சு போட்டு நிறைய பேச்சுக்கள் உலாவி வருகின்றன. இந்தியாவில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆண்டு வருகிறது, வர போகின்ற ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் என்ன என்றும் யாருக்கும் தெரியாது, நிலைமை அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் அவர் போட்டியிட்டால்தான் ஜெயிக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அதற்காக நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்த்து அவர் சவால் விட வேண்டிய அவசியமும் இல்லை. தமிழ்நாடு பற்றிய உண்மை அவருக்கு புரிந்திருக்கிறது, பாஜகவுக்கு உண்மை புரிய வேண்டும் என்று விரும்புகிறார். அதைத்தாண்டி வாக்கு அரசியலுக்கு தமிழ்நாட்டை ராகுல் பயன்படுத்துகிறார் என்று எதிர்தரப்பினர் குற்றம் சுமத்துவது என்பதெல்லாம் தமிழர்களின் அரசியல் புரிதலை குறைத்து மதிப்பிடுவதை போல்தான் இருக்கும். ராகுலுக்கு நேற்று புரிந்திருக்கிறது, எதிர்தரப்புக்கு விரைவில் புரியும்!!