மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை சிஏஜி வெளியிட்டுள்ளது. 'தமிழக அரசிடம் போதுமான நிதியில்லை, அதன் காரணமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்யும் எண்ணமிருந்தாலும் நிதி இல்லாத காரணத்தால் எங்களால் அதனை தொடங்க இயலவில்லை' என தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் சிஏஜி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பலத்த அதிர்வலைகளை தமிழகத்தில் எற்படுத்தி உள்ளது.
அதன்படி, கடந்த நிதியாண்டில், மத்திய அரசு தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவியாக ரூ.5,920.39 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 3,676.55 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளது தமிழக அரசு. மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழலாம். இதற்கு காரணம், தமிழக அரசுதான் என்பதை நமக்கு புரிய வைக்கிறது சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கை. அதில், மாநில அரசு பயனாளர்களை கண்டறிவதில் ஏற்பட்ட தாமதமே நிதி வீணாக காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள் சரிவர கிடைக்கவில்லை என்று ஒருபக்கம் மக்கள் அவதி அடைந்து வரும் நிலையில், பயனாளிகளை அடையாளம் காணவில்லை என்று அரசு கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக இந்த விவகாரங்களை அறிந்த பொருளாதார வல்லூநர்கள் தெரிவிக்கிறார்கள். எந்தெந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை தமிழக அரசு திருப்பி அனுப்பியது என்பது பற்றியும், சிஏஜி அறிக்கை விளக்கமாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.2394 கோடியை மத்திய அரசிடம் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசு. மேலும், கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகையில் ரூ.758 கோடியும், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ247.84 கோடியும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் ரூ.194.78 கோடியையும் தமிழக அரசு மத்திய அரசிடம் திருப்பி வழங்கி உள்ளது.