Skip to main content

'கைகொடுத்த வாணியம்பாடி... வாகை சூடிய திமுக' வேலூர் சொல்லும் அரசியல் பாடம் என்ன..?

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் முதல் முறையாக நாடாளுமன்றம் செல்ல இருக்கிறார். கல்வி நிறுவனங்களை நடத்திவந்த அவர் இன்று முதல் மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. கே.வி குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றது. குறிப்பாக வாணியம்பாடி தொகுதியே திமுகவின் வெற்றியை உறுகி செய்துள்ளது.
 

dmk




திமுக முன்னிலை பெற்ற அந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வேலூர், ஆம்பூர் தொகுதிகளில் திமுக-வை சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வாணியம்பாடியில் அமைச்சர் அமைச்சர் நிலோபர் கபில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதைபோல அதிமுக வெற்றிபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளில் கே.வி குப்பம் தொகுதியில் மட்டும் அதிமுகவை சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். குடியாத்தம், அணைக்கட்டு தொகுதிகளில் திமுகவை சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேலூர் தொகுதியில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதியில் திமுகவை சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், அமைச்சர் நிலோபர் கபில் தொகுதியான வாணியம்பாடி தொகுதியே திமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளது. இங்கு மட்டும் 20000-க்கும் அதிகமான வாக்குகளை திமுக கூடுதலாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியல் கணக்குகள் பலவற்றை தற்போதைய வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு மாற்றியுள்ளது என்றால் அது மிகையல்ல.