தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரசு முறை பயணமாக முதல் முறையாக செல்கிறார். வருகிற 28-ந்தேதி சென்னையில் இருந்து லண்டன் செல்லும் அவர், செப்டம்பர் 9-ந்தேதி சென்னை வருகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் லண்டனுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் உடன் செல்கிறார்கள்.
லண்டனில் சுகாதாரத்துறை தொடர்பான சந்திப்புகள் நிறைவடைந்ததும், சி.விஜயபாஸ்கர் அங்கிருந்து சென்னை திரும்புகிறார். எம்.சி.சம்பத், முதல்-அமைச்சர் உடன் அமெரிக்கா செல்கிறார். இந்த நிலையில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சென்னையில் இருந்து நேரடியாக அமெரிக்கா சென்று, முதல்-அமைச்சர் குழுவில் இணைகின்றனர். இந்த பயணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அவருடைய தனி செயலாளர்களும் உடன் செல்கின்றனர்.
தமிழகத்தில் முதலீடு செய்பவர்கள் சென்னைக்கு வந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற நடமுறைகளை பின்பற்றலாம். அதைவிட்டுவிட்டு ஏன் இவர்கள் அங்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த ஜனவரி மாதம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் வர உள்ளதாகவும், 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் எந்த ஒரு புதிய முதலீடும் வரவில்லை என்று சொல்கிறார்கள். ஏனென்றால் ஒரு புதிய தொழிற்சாலை வருகிறது என்றால், அந்த தொழிற்சாலை வருகிறபோதே கமிசன் கேட்கிறார்களாம். அந்த முதலீட்டாளர்கள் சொல்வது என்ன வென்றால், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட 30 நாளில் தொழிற்சாலை அமையும் இடம், தேவையான மின்சாரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யாமல், கமிசன் கேட்கிறார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தொழிற்சாலை இயங்க தொடங்கும்போது உங்களுக்கு தேவையான கமிசன் தருகிறோம் என்று சொன்னால் அதனை ஏற்க மறுக்கிறார்கள். இப்போதே வேண்டும் என்கிறார்கள். இதனால்தான் புதிய முதலீடு வரவில்லை என்கிறார்கள்.
ஏற்கனவே இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதன் விரிவாக்கத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தங்களை காட்டி இத்தனை நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள்.
தமிழகத்தில் முதலீடு செய்பவர்கள் சென்னைக்கு வந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற நடமுறைகளை பின்பற்றலாம். அதைவிட்டுவிட்டு ஏன் இவர்கள் அங்கு செல்ல வேண்டும். அப்படியே செல்ல வேண்டும் என்றால் அதிகாரிகள் சென்றால் போதும், இன்று உள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி முதலமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் முலம் இங்கிருந்து தொடர்பு கொண்டு பேசலாமே என்ற கேள்வி எழுகிறது.
எடப்பாடியின் அமெரிக்க பயணம் குறித்து மேலும் விசாரித்தபோது, ‘’ உலக முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு வரவழைக்கவே இந்த வெளிநாட்டு பயணம் என சொல்லப்பட்டாலும், சில தனிப்பட்ட விவகாரமும் அதில் அடங்கியிருக்கிறது ‘’ என்கிறது தொழில்துறை வட்டாரம்!
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வேலூர் தேர்தல் தோல்வி, அதிமுக-பாஜக கூட்டணி, பாமகவின் செல்வாக்கு குறித்தெல்லாம் விசாரித்திருக்கிறார் அமீத்ஷா. இதற்கெல்லாம் விளக்கமளித்த எடப்பாடி, தனது வெளிநாடு பயணம் குறித்து பேசியிருக்கிறார்.
இதற்கெல்லாம் விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, தனது வெளிநாடு பயணம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது, தனது வெளிநாட்டு பயணத்தின்போது தன் துறைப் பொறுப்புகளை ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைக்க விரும்பவில்லை. அவர் தந்திரமானவர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
அப்போது வந்த ஓ.பி.எஸ்., என்னை டம்மியாகவே வச்சிக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன் பொறுப்பை இன்னொரு அமைச்சரிடம் கொடுத்து, ஏனைய அமைச்சர்கள் முன்பு என் இமேஜை எடப்பாடி குறைக்க நினைக்கிறார். மற்றவர்களிடம் பொறுப்புகளை கொடுத்தால் துணை முதல்வருக்கு என்ன மரியாதை என்று கூறியிருக்கிறார்.
அப்போது அமித்ஷா, உங்கள் வசம் உள்ள பொறுப்புகள் அனைத்தையும் துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் ஒப்படைத்து விடுங்கள் என அமீத்ஷா அட்வைஸ் செய்ய, அவரிடம் ஒப்படைக்க தனக்கு விருப்பமில்லை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் கவனித்துக்கொள்வார்கள் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. துணை முதல்வருக்கு உரிய மரியாதையை கொடுத்தே ஆகணும். உங்கள் இஷ்டத்திற்கு ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்குகிறீர்கள். யாரை கேட்டு அந்த முடிவை எடுத்தீர்கள். உங்களுக்கு சாதகமாக இரட்டை இலையை பெற்றுக்கொடுத்தோம், அதிமுகவை பெற்றுக்கொடுத்தோம், அப்படி இருந்தும் வேலுரில் ஜெயிக்க முடியவில்லை என்றால், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றுதானே அர்த்தம். இந்த ஆட்சி நடக்க நாங்கள் ஆதரவு இல்லை என்றால் முடியுமா? 3 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் பெற்ற ஒரு செல்வாக்கு மிகுந்த நபரை உங்களிடம் ஒப்படைத்தால் வேலூர் தொகுதியில் தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அதிமுக வேலை செய்யவில்லை என்றுதானே அர்த்தம் என்று அமித்ஷா கறார் குரலில் சொல்லியிருக்கிறார்.
வெளிநாடு சென்று திரும்பும்வரை ஓ.பன்னீர்செல்வத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்குமாறு அமித்ஷா கூறியது குறித்து எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை செய்திருக்கிறார்.
அப்போது அவர்கள் ஒரு பழைய சம்பவத்தை சொல்லியிருக்கிறார்கள். ஆந்திராவில் முதல் அமைச்சராக இருந்த என்.டி.ராமராவுக்கு இருதய குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அமெரிக்காவுக்கு 1983ம் ஆண்டு ஜுலை மாதம் 15ம் தேதி சென்றார். ஆகஸ்டு மாதம் 14 ம் தேதிதான் ஆந்திரா திரும்பினார். மறுநாள் (சுதந்திர தினத்தன்று) அவர் கொடி ஏற்று விழாவில் கலந்து கொண்டார். ஆனால் அன்றைய தினமே அவருக்கு எதிராக நிதி மந்திரி பாஸ்கரராவ் தலைமையில் சில மந்திரிகள் போர்க்கொடி உயர்த்தினார்கள். கவர்னர் ராம்லாலை மந்திரி பாஸ்கரராவ் சந்தித்து, “தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள். ராமராவ் மெஜாரிட்டி இழந்து விட்டார். என்னை முதல் மந்திரியாக நியமனம் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டு எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் ஒன்றையும் கொடுத்தார்.
அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் உண்மையிலேயே பாஸ்கரராவை ஆதரிக்கிறார்களா என்பதைக் கண்டறிய கவர்னர் ராம்லால் எந்த முயற்சியும் செய்யாமல், என்.டி.ராமராவை டிஸ்மிஸ் செய்தார். பாஸ்கரராவை முதல் மந்திரியாக நியமித்தார். ராமராவ் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 162 பேர்களை டெல்லிக்கு அழைத்துச்சென்று ஜனாதிபதி முன் நிறுத்தினார். “எனக்கு மெஜாரிட்டி ஆதரவு இருக்கிறது. கவர்னர் செய்தது அநியாயம்” என்று முறையிட்டார்.
நிலைமை மோசமானதைக் கண்டு கவலை அடைந்த மத்திய அரசு ஆந்திரக் கவர்னராக சங்கர் தயாள் சர்மாவை நியமித்தது. ராம்லாலை வாபஸ் பெற்றது. புதிய கவர்னரின் உத்தரவுப்படி செப்டம்பர் 11 ம் தேதி ஆந்திர சட்டசபை கூடியது. அதில் பாஸ்கரராவ் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால், அவரை ராஜினாமா செய்யும்படி கவர்னர் உத்தரவிட்டார். மீண்டும் முதல் அமைச்சராக ராமராவ் செப்டம்பர் 16 ம் தேதி பதவி ஏற்றார்.
அண்மையில் கர்நாடகாவில் அமெரிக்காவுக்கு குமாரசாமி வெளிநாடு சென்றிருந்தபோதுதான் அங்கு ஆட்சி மாற்றத்திற்கான வேலைகள் நடந்தது.
எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்திற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததே, இங்கு எந்தவித சர்ச்சையும், பிரச்சனையும் வராமல் திட்டமிட்டபடி முதல் அமைச்சர்மாற்றம் நடத்தியாக வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் திட்டமிட்டபடி வெளிநாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வாரா அல்லது பயணம் ரத்தாகுமா என அடுத்த வாரத்தில் தெரிய வரும் என்கிறார்கள்.
இதிலிருந்து எடப்பாடி பழனிசாமி எப்படி தப்பிக்கப்போகிறார். எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சர்கள் சகாக்கள் மூலம் என்னென்ன தூது அனுப்பப்போகிறார், அவற்றை பாஜக காது கொடுத்து கேட்குமா? என்று அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஓ.பி.எஸ். ஜெயிப்பாரா அல்லது ஈ.பி.எஸ். ஜெயிப்பாரா என்ற விவாதமும் நடந்து விருகிறது.