பிரிட்டன் இளவரசியான இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 96. உடல்நலக் குறைவு காரணமாக ஸ்காட்லாந்த் பண்ணை வீட்டில் வசித்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத், சமீப நாட்களாக மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தாக சொல்லப்பட்டது. இதனால் அவருக்கு நெருக்கமான பலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் காலமாகி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.
இறந்த ராணியின் உடல் நேற்று லண்டன் எடுத்து வரப்பட்டு வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ஐந்து நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் பத்து நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டுக்கு முன்பு உயிரிழந்தார். பிலிப் - எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள் என 4 பேர் உள்ளனர். ராணி 2-ம் எலிசபெத் நேற்று முன்தினம் உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்கிறார்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்த்துள்ளனர்.
1952ம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் இங்கிலாந்தின் ராணியாக பொறுப்பேற்றுக்கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத், 2022ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை சரியாக 70 ஆண்டுகள் 214 நாட்கள் இங்கிலாந்தின் ராணியாக இருந்திருக்கிறார். இதன் மூலம் உலகில் நீண்ட காலம் ஆட்சிசெய்த இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராணி இரண்டாம் எலிசபெத். இவருக்கு முன்பாக பிரான்ஸை ஆண்ட பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சி செய்து உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல் நபராக இருக்கிறார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு, உலகின் இரண்டாம் நபராக அதிக நாட்கள் ஆட்சி செய்த நபர் என்பதை எல்லாம் தாண்டி, அவர் மறைவையொட்டி மற்றொரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தின் ராணிகள் அரண்மனையில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் கிரீடம் அணிவது மரபு. அப்படி அணியும் அந்த கிரீடத்தில் விலை மதிப்பற்ற கோஹினூர் வைரம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த கோஹினூர் வைரத்தின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.
105 காரட் அதாவது 21.6 கிராம் எடை கொண்ட கோஹினூர் வைரத்தின் பிறப்பிடம் இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் வைர சுரங்கமாகும். விலை மதிப்பற்ற இந்த வைரம் இந்து, மொகலாய, பெர்சியர், ஆப்கான், சீக்கியர் என்ற பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த மன்னர்களின் வசம் இருந்திருக்கிறது. இந்த வைரத்தை கைப்பற்ற இவர்களுக்குள் பல போர்களும் நடந்திருக்கிறது. மொகலாய மன்னர் பாபரின் வசம் வந்த இந்த வைரம் அதற்கு பிறகு அவரின் வாரிசாக வந்த ஷாஜகான் மற்றும் அவுரங்க சீப் போன்ற மன்னர்களிடம் வழி வழியாக பயணித்திருக்கிறது. பின்னர் இந்தியா பிரிட்டிஷ் ஆளுகைக்கு கீழ் வந்த பிறகு கிபி 1851ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எடுத்து செல்லப்பட்டு ராணி விக்ட்டோரியாவின் கிரீடத்தை அலங்கரிக்க தொடங்கியது.
ராணி விக்டோரியாவிற்கு பிறகு ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சிக்கு வந்ததால் கடந்த எழுபது ஆண்டுகளாக கோஹினூர் வைரம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இப்படி இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்று பல வருடங்களாக ராணி இரண்டாம் எலிசபெத் கிரீடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம், அடுத்து யார் அணியும் கிரீடத்தை அலங்கரிக்க காத்திருக்கிறது என பேச்சுகள் பரபரப்பாக எழுந்த நிலையில், அது புதிய மன்னராக பொறுப்பேற்கும் சார்லஸின் மனைவியான கமிலா பார்க்கர் பவ்லஸ் அணியும் கிரீடத்தை அலங்கரிக்கும் என முடிவாகியுள்ளது.
மூன்றாம் மன்னர் சார்லஸ்க்கும் அவரது முதல் மனைவி டயானாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1996ம் ஆண்டு இருவரும் மண முறிவு செய்து கொண்டனர். அதன் பின்னர் 2005ம் ஆண்டு இளவரசர் சார்லஸ், கமிலா பார்க்கரை இரண்டாவதாக மணம் செய்து கொண்டார்.
இவ்வளவு எதிர்பார்ப்புகளை கிளப்பும் இந்த கோஹினூர் வைரம் தொடர்பாக மற்றொரு நம்பிக்கையும் பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. கோஹினூர் வைரம், தன்னுள் ஒரு சாபத்தையும் கொண்டுவருவதாகவும், அதை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அது பலிக்காது என்றும் தொடர்ச்சியாக நம்பப்பட்டு வரப்படுகிறது. அதுபோல், அந்த வைரத்தை வைத்திருந்த ஆண்கள், ஒன்று அவர்களது மகுடத்தை இழந்தனர். அல்லது பிற துரதிஷ்டங்களால் பாதிக்கபட்டனர். பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்திலிருந்து விலகி, ராணி விக்டோரியா மற்றும் ராணி எலிசபெத் ஆகியோர் மட்டுமே ஆட்சியாளராக தனது ஆபரணமாக அந்த வைரத்தை அணிந்தனர். ராணி விக்டோரியாவிலிருந்து அந்த வைரம் எப்போதும் மகுடத்திற்கான ஆண் வாரிசின் மனைவிக்குச் சென்றுவிடுகிறது.
சாபத்தின் சாத்தியக்கூறானது வைரத்தின் உரிமையைச் சார்ந்திருப்பதாக பழமையான நூல் ஒன்று தெரிவிக்கிறது. மேலும் அந்த நூலில், "யார் இந்த வைரத்தை வைத்திருக்கின்றாரோ அவர் உலகை வெல்லலாம், ஆனால் அதன் துரதிஷ்டங்கள் அனைத்தும் வெளிப்படும். கடவுள் அல்லது பெண் மட்டுமே அதன் தீமைகளிலிருந்து விலகி அதனை அணிய முடியும் என்று விளக்கபப்ட்டுள்ளது.
இந்தியா என்னும் வளம் மிக்க நாடு எந்த அளவுக்கு இங்கிலாந்தால் சுரண்டப்பட்டது என்பதற்கு ஓர் வரலாற்று சாட்சியுமாக இருக்கும் இந்த வைரமானது, பல முறை இந்தியாவால் திரும்ப கோரப்பட்டாலும், இங்கிலாந்து அரசு அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. கோஹினூர் வைரம் இப்போது வரைக்கும் இங்கிலாந்தில் இருந்தாலும் எப்போதும் அது இந்தியாவின் சொத்து என்பதை வரலாற்றின் பக்கங்களில் இருந்து யாராலும் மறைக்க முடியாது என்பதே உண்மை.
வீடியோவாக பார்க்க: