அறுவடை முடிந்துவிட்டாலே தமிழகத்தில் திருவிழாக் கோலம் தான். அடுத்த சில மாதங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கிராமங்களிலும் கிராம கோயில்கள் முதல் குல தெய்வ கோயில்கள் வரை திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். தமிழர்களின் பாரம்பரிய விழாக்கள் அத்தனையும் அர்த்தமுள்ள விழாக்காளாகவே இருந்திருக்கிறது.
முளைப்பாரித் திருவிழா கிராமங்களில் விதைப்புக் காலத்திற்கு முன்பு நாடியம்மன், பிடாரி அம்மன் கோயில்களில் நடத்தப்படும் திருவிழா. மேலோட்டமாக பார்க்கும் போது பொழுதுபோக்கு விழாவாக தெரியும். ஆனால் அதனுள் ஒழிந்திருக்கு அறிவியல்.. விதைப்புக் காலம் வரப்போகிறது. அதற்குள் தன்னிடம் உள்ள விதை நல்ல விதைகளாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விதை நேர்த்தி செய்ய ஒவ்வொரு விவசாயியும் தன் வீட்டு விதைகளை மண் சட்டியில் விதைகளை தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து பாதுகாப்பாக வளர்த்து விதைகள் நல்ல விதைகளா என்பதை கண்டறிந்து விதைக்கிறார். அதை தான் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் விதைகளின் வீரியத்தை பார்க்க முளைப்பாரித் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். இதேபோல தான் தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் இருக்கிறது.
இப்போது அறுவடை காலம் முடிந்துவிட்டது. அதனால் கிராம காவல் தெய்வங்களுக்கான திருவிழாக்களை கொண்டாடத் தொடங்கி விட்டனர். கிராம காவல் தெய்வங்கள் யார்?..
நம்மை நம் மண்ணை ஆண்டவர்கள். கிராமத்தை காத்தவர்கள் தான் அவர்களை மறக்காமல் நினைவு கூர்ந்து அவர்களின் சிறப்புகளை சொல்லி ஆடு, கோழி பலியிட்டு விருந்து படைப்பதும். அவர்களின் வாகனங்கள், போர் கருவிகளை களிமண்ணில் செய்து வைத்து வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.
அய்யனார் கோயில்களுக்கு அய்யனார் சிலைகளுடன் அவருக்கு துணையாக பக்க பலமாக நின்றவர்களை பரிவார தெய்வங்களாக அவர்களுக்கும் சிலைகள், அவர்களின் வாகனங்களான குதிரை, காளை, வேட்டை நாய்கள் இப்படி அத்தனை சிலைகளையும் களிமண்ணில் செய்து ஒவ்வொரு வருடமும் கோயிலுக்கு கொண்டு போய் வைத்து படையல் வைப்பது வழக்கம். அதனால் தான் ஒவ்வொரு அய்யனார் கோயில் வாசலிலும் மண் குதிரை சிலைகள் உடைந்து கிடக்கும்.
அதிகமான இடங்களில் இன்னும் கிராம எல்லையில் வனப்பகுதியில் தான் அய்யனார் கோயில்கள் இருக்கிறது. அதே போல கிராம காவல் தெய்வங்கள் வாழும் இடங்கள் வனப்பகுதி தான். அப்படியான வனங்கள் மட்டும் தான் ஆங்காங்கே இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் கோயில் காடுகளும் அழிக்கப்பட்டு கான்கிரீட் கோபுரங்கள் எழுப்பிவிட்டனர்.
இப்படி களிமண் சிலைகள் செய்யப்படும் போது அதனால் மண்பாண்ட கலைஞர்கள் பிழைக்கிறார்கள். அதாவது ஒரு முறை கருங்கல் சிலைகள் செய்தால் காலங்காலத்துக்கும் வைத்து வழிபடலாம். ஆனால் மரபு மாறக் கூடாது என்பதற்காகவும், களிமண் சிலைகள் செய்வதால் பல குடும்பங்கள் வாழும் என்பதாலும் அந்தக் கலாச்சாரம் மாற்றப்படவில்லை.
பல கிராமங்களுக்கு ஒரு கிராமத்தில் மண்பாண்டக் கலைஞர்கள் வசிக்கிறார்கள். பழைய காலங்களில் பானை, தானிய குதிர், அடுப்பு, போன்றவற்றை செய்து வருடம் முழவதும் அவர்களுக்கு வேலை இருந்தது. ஆனால் நாகரீகம் என்ற பெயரில் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களுக்கு மக்கள் மாறிய பிறகு அவர்களுக்கான வேலைகளும் குறைந்துவிட்டது. அதைவிட அவர்கள் களிமண் அள்ளிய பகுதிகளும் மழையின்மையாலும், ஆக்கிரமிப்புகளாலும் காணாமல் போய்விட்டதால் மண்பாண்டம் செய்யும் கலைகளை மறந்து பலர் மாற்று வேலைகள் தேடி சென்றுவிட்டனர்.
இந்த நிலையிலும் கிராம கோயில் திருவிழாக்களுக்கு குதிரை செய்ய ஓடோடி வந்துவிடுகிறார்கள். ஒரு கிராமத்துக்கான வேலையை நிறுத்தக் கூடாது என்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூா் கிராமத்தில் வசிக்கும் பல மண்பாண்ட கலைஞர்களில் ஒரு சிலர் மட்டுமே தற்போது அந்த வேலைகளை செய்கிறார்கள். அதற்கும் மண் கிடைக்கவில்லை. இங்கு தான் மேற்பனைக்காடு உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் களிமண் சிலைகள் செய்து கொடுப்பது வழக்கம்.
மேற்பனைக்காடு ஆற்றங்கரை அய்யனார் கோயில் திருவிழாவுக்காக செரியலூரில் மண்பாண்ட கலைஞர் வீரையன் குழுவினர் செய்த அய்யனார், குதிரை, பரிவார தெய்வங்களின் சிலைகளை தூக்கிச் செல்ல மேற்பனைக்காடு கிராமத்தார்கள் ஆட்டம், பாட்டம், தப்பாட்டத்துடன் வந்து சிறப்பு பூஜைகள் செய்து சிலைகளை தலையிலும் தோலிலும் சுமந்து சென்றனர். இப்படித் தான் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் மரபுகள் அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது.