Skip to main content

புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்து அசத்தும் கிராமத்து மாணவர்! - வேலை கொடுத்து அழகுபார்க்கும் ஐஐடி!

Published on 16/04/2021 | Edited on 17/04/2021

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம் வேம்பங்குடி, மேற்கு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் மகன் சிவசந்தோஷ். 18 வயதுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. 10- ஆம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துமுடித்த போது 'ரோபோ' சார்ந்த படிப்புக்கு ஆசைப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) படிப்பைத் தேர்வு செய்து சேர்ந்தார். முதல் வருடம் முடித்த பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளை புதுக்கோட்டை  அருகில் உள்ள கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடர்கிறார். இறுதி ஆண்டு மாணவர்.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

தனது வயது, படிப்பைக் கடந்து சாதிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக எளிமையாக, மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் பயனுள்ளதாக பல அரியவகை கருவிகளை உருவாக்கிச் சாதனை படைத்து பலரது பாராட்டுகளையும் பெற்றதோடு பல நிறுவனங்கள் வேலைக்கும் அழைத்துள்ள நிலையில், தற்போது சென்னை ஐஐடி நிறுவனம் சிவசந்தோஷுக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

இந்த நிலையில், மாணவர் சிவசந்தோஷை அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது, "சிறு வயதில் இருந்தே ரோபோ மேல அதிக பற்றுண்டு. அதனால தான் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) தேர்வு செய்தேன். தொடர்ந்து கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் இதே படிப்பை முடித்துள்ள எங்க ஊர் அண்ணன் சீனிவாசனுடன் இணைந்து புதிய கருவிகளை உருவாக்கத் திட்டமிட்டேன். முதலில் பேசும் ரோபோவை உருவாக்கி கரோனா விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தி இணையத்தில் வெளியிட்டேன்.

 

பலரது பார்வையும் எங்கள் மீது பட்டது. தொடர்ந்து கரோனா தொடங்கிய போது தானியங்கி உடல் வெப்பநிலை அறிந்து கையை நீட்டினால் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து ஒரு திருமண நிகழ்ச்சியில் வைத்தோம். பார்த்தவர்களைக் கவர்ந்தது. அதே நேரத்தில் செல்ஃபோன் மூலம் இயக்கக் கூடிய நகரும் ரோபோவை உருவாக்கி கரோனா வார்டுகளில் யாருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு போய் கொடுக்கும் வகையில் செயல்படுத்தினோம். பிறகு இதை உருவாக்கப் பொருளாதார உதவிகளை எங்கள் ஊர் அண்ணன்கள் பார்த்திபன் மற்றும் சரவணன் செய்துகொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

அதன்பிறகு, திறந்த வெளியில் கண்ணுக்குத் தெரியாமல் சுற்றும் கிருமிகளை அழிக்கும் 'யுவி லைட்' மூலம், கரோனா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். இதையும் இணையம் மூலம் வெளிப்படுத்திய போது வடமாநிலத்தைச் சேர்ந்த ஆன்லைன் (பொருட்கள் விற்பனை செய்யும்) நிறுவனம் வாங்கிச் சென்று இப்போது பல ஆயிரம் இயந்திரங்களை உருவாக்கி உள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

அதன் பிறகு வளிமண்டலத்தில் உள்ள தட்பவெப்ப நிலையை அறிய 2.5 செமீ சதுர அளவில் 18 கிராம் எடை கொண்ட சிறிய கருவியை உருவாக்கி அதன் மூலம் தட்ப வெப்பம் அறிந்து பயிர்சாகுபடி செய்வது குறித்த ஆய்வு செய்துள்ளேன். மேலும், விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய சொட்டு நீர் பாசனத்திற்கான கருவியை (சூரிய ஒளியில் இயங்கும்) உருவாக்கினேன். அதேபோல சூரிய ஒளி மூலமே நேரடியாக தண்ணீரை சூடாக்கும் கருவியைக் கண்டுபிடித்தேன். இதை அறிந்த சென்னை ஐஐடி நிறுவனம் என்னை அழைத்துப் பாராட்டி அந்த இயந்திரத்தை வாங்கிக் கொண்டு எனக்கு வேலை தர முன்வந்துள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

இதே போல இன்னும் பல உபகரணங்களை உருவாக்குவதும் கிராமப்புற மாணவர்களுக்கு ரோபோ பற்றிய வகுப்புகள் எடுப்பதுமே என் லட்சியம். இப்பவும் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையவழியில் ரோபோடிக் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன்" இவ்வாறு அந்த மாணவர் கூறினார். 

 

கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை அங்கீகாரம் கொடுத்து உற்சாகப்படுத்தினால், இதுபோல இன்னும் பல ஆய்வாளர்களை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. 


 

 

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.