தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீட்டை அமல்படுத்த 2016-ல் வாய்ப்பளிக்கவில்லையா? 2023-ல் தான் மோடிக்கு வாய்ப்பு வந்ததா? இவர்கள் தான் கடந்த 10 வருடம் ஆட்சியில் இருந்தார்கள் ஏன் அமல்படுத்தவில்லை. மேலும், இந்த 33% ஒதுக்கீட்டிற்கு தமிழகம் எப்போதிருந்தோ குரல் கொடுத்து வருகிறது. ஏன், இதே சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் 2006 நாடாளுமன்றத்தில் அறிவித்தது. ஆனால், அப்போது இதனை எதிர்த்தவர்கள் பாஜகவினர் தான். அதிலும், பாஜக வின் பெண் எம்.பி, உமாபாரதியும் இதற்கு செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து, தற்போது உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட 33 சதவிகிதம் இந்து தர்மத்திற்கு எதிரானது போன்றும் பேசி மறுத்துள்ளார். இன்றைக்கு கடவுளின் அருளால் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை தருகிறேன் என்கிறார்கள்.
ஆனால், 2016ல் திமுக எம்.பி கனிமொழி போன்றோர் இதற்காக பேரணி நடத்தி குரல் எழுப்பினார். அப்போதெல்லாம் கருத்து தெரிவிக்காமல் இருந்தவர்கள்தான் பாஜகவினர். இவர்கள் சொல்வது போல உடனே இதனை அமல்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நாம் 2011-ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்துத்தான் இன்று வரை தீர்மானித்து வருகிறோம். ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் கணக்கெடுக்க வேண்டும். கொரோனா பேரிடரால் தாமதமாகி விட்டது. ஒருவேளை, இவர்கள் 2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால், 33 சதவிகிதம் அமல்படுத்த 2029-ல் தேர்தலில் தான் முடியும். எதிர்பாரதவிதமாக, 2026-ஆம் ஆண்டும் கணக்கெடுக்கவில்லை என்றால் 2031 வரைக் கூட இது தாமதமாகலாம்.
எனவே, தற்போது நிறைவேற்ற முடியாத சூழலில் இதனை அறிவித்தது பெரிய அயோக்கியத்தனமாகவே தெரிகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கூட கருத்து தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்ற நிறைய சட்ட சிக்கல்கள் இருப்பதால் உடனே அமல்படுத்த முடியாது. ஆனால், இந்த கோரிக்கையை தமிழகம் நீண்ட ஆண்டுகளாக முன்வைத்து வருகிறது. பாஜகவினர் உண்மையில் இதனை கொண்டுவர நினைத்திருந்தால் 2014, 2016-ம் ஆண்டுகளில் கொண்டு வந்திருக்கலாம். தற்போது பாஜக இதனை கையிலெடுத்தது அரசியல் நோக்கத்திற்கு மட்டுமே தான். இந்தியாவில் பிற மாநிலங்களில் பெண்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு மகளிருக்கான உரிமைத்தொகை, இலவச பேருந்து சேவைகள் போன்றவை வழங்குகிறது. இதனைவிட முக்கியமானது 33 சதவிகித இடஒதுக்கீடு என பாஜக சொல்கிறது. எனவே, இவர்கள் எதனை எதிர்த்தார்களோ அதனைத்தான் மீண்டும் கொண்டு வருகிறார்கள்.
மேலும், பாஜக பெண்கள் முன்னேற்றத்தை பேசிக்கொண்டிருகிறது. அதேவேளையில், பெண் ஜனாதிபதியை கைம்பெண், பழங்குடியினப் பெண் என்றெல்லாம் சில தலைவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து, ஜனாதிபதியை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கும் அழைக்கவில்லை. அதனை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற பழைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரில் கூட ஜனாதிபதியை அழைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் முதல் நாள் கூட்டத்தில் கூட ஜனாதிபதி இடம்பெறவில்லை. பதிலாக, துணை ஜனாதிபதியை வைத்து கூட்டத்தை நடத்துகிறார்கள். இதனை வைத்து பார்த்தால் எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு உண்மை எனவே தோன்றுகிறது. பெண்களுக்காக துணை நிற்கிறேன் எனச் சொல்லிக் கொள்ளும் வானதி ஸ்ரீனிவாசன் போன்றோர் இந்த நிகழ்வுகளை ஆதரித்து பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.
இந்த மசோதா அமலாக்கப்பட்டால் தென் இந்திய மாநிலங்களில் இட மறுசீரமைப்பு நடக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். ஏனென்றால், பாஜக நிறைய திட்டங்களை தேன் தடவி பிற விசயங்களை மறைத்து கொண்டு வருகிறது. உதாரணத்திற்கு, தேசியக் கல்வி கொள்கை போன்றது தான். தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுமா என்ற கேள்விகள் உள்ள நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் 888 இருக்கைகள் போடப்பட்டிருகிறது. இந்த மசோதாவை பயன்படுத்தி வடமாநிலங்களில் எம்.பி தொகுதிகளை அதிகரித்து தென்னிந்தியாவில் தொகுதிகளை குறைக்க திட்டமிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அணுகியுள்ளார். அப்படி பார்த்தால், உத்திர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் அதிக எம்.பி தொகுதிகளை பெரும். இதனால், பாஜக தென்னிந்தியாவில் வெற்றிபெறாமல் ஆட்சியை பிடித்துவிடும்.
அண்ணாதுரை அவர்களைப் பற்றி அண்ணாமலை விமர்சித்ததை அதிமுக தரப்பு சரியாக எதிர்கொள்ளவில்லை. கூட்டணி தொடராது என சொல்வதெல்லாம் எளிதில் நம்பக்கூடியதாக இல்லை. ஏனென்றால், ஜெயக்குமார் பேசிய பிறகு. எடப்பாடி ஒரு அறிக்கையில் தொண்டர்களை அமைதிகாக்க சொல்கிறார். எனவே, எடப்பாடி அவர்கள் மத்தியில் இருந்து வரும் உத்தரவின் பேரில் தான் செயல்படுகிறார். மேலும், எடப்பாடி கொள்கைப் பிடிப்பானவர் இல்லை என பாஜகவினருக்கே தெரிந்துள்ளது. அதனால்தான் கூட்டணியில் இல்லை என்பதை துணிவுடன் அறிவிக்க சொல்கிறார்கள். தற்போதுள்ள அ.தி.மு.க.வால் ஏன் ஜெயலலிதா அவர்கள் சொன்னது போல் தைரியமாக கூட்டணி இல்லை என தெரிவிக்க முடியவில்லை. இதன் தொடரச்சியாக, பாஜக பாதியளவு எம்.பி இடங்களையும் தமிழகத்தில் கேட்டுள்ளது. இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் அதிமுக-பாஜக மோதலுக்கு எனவும் சொல்லப்படுகிறது. ஆகவே, அண்ணாமலை மேலிடத்து உத்தரவு இன்றி இது மாதிரி செயல்படமாட்டார். அதுவும் நட்டா, அமித்ஷா வழிகாட்டுதல் இல்லாமல் அண்ணாமலை இயங்கமாட்டார். அ.தி.மு.க.வை சீரழிக்கவே அண்ணாமலைக்கு மத்தியில் இருந்து அறிவுவரை வந்திருக்கலாம். ஆகவே, இதெல்லாம் மேலிருந்து கீழ்வரை திட்டமிட்டு நடக்கிறதால், அ.தி.மு.க. வசமாக சிக்கிக்கொண்டுள்ளது.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...