Skip to main content

எவ்வளவு நாட்கள் இலவசத்தை தருவோம் என்று ஏமாற்றுவீர்கள் - சீமான் கேள்வி!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

jkl

 

தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் வாக்குப் பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின்போது சீமான் பேசியதாவது, "இன்றைக்கு அரசியல் கட்சிகள் இலவசத்தை அளித்து மக்களை சோம்பேறிகளாக்க திட்டம் தீட்டியுள்ளார்கள். உழைக்காமல் மக்களை வைத்திருந்து இந்த நாட்டை அழிக்க திட்டம் போட்டுள்ளார்கள்.

 

மனித அறிவாற்றலை உழைப்பில் செலுத்த விருப்பப்படாமல் இலவசம் தருகிறோம், வாங்கி சாப்பிடுங்கள், வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறுவதெல்லாம் எந்த மாதிரியான மனநிலை என்று நாம் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பாதைக்குச் செல்லும். நீங்கள் வீட்டிலேயே இருங்கள், நாங்கள் இலவசம் தருகிறோம் என்றால், எவ்வளவு காலத்துக்கு இந்த இலவசத்தை தருவீர்கள். வாழும்வரை அவர்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் இலவசத்தை தருவார்களா? இந்த உறுதிமொழியை அரசியல் கட்சிகளால் கொடுக்க முடியுமா? அதை மட்டும் செய்ய மாட்டார்கள். எவ்வளவு காலத்துக்கு அவர்களால் இதை தர முடியும் என்று மக்களாகிய நீங்களே கூறுங்கள். இது சாத்தியமா? நிச்சயம் இல்லை என்றும் நம் அனைவருக்கும் தெரியும். வேளாண் குடிகள் நஷ்டப்படுகிறார்கள் என்று கூறி, கடன்களைத் தள்ளுபடி செய்கிறீர்கள், ஒருபக்கம் அரசியை இலவசமாக கொடுக்கிறீர்கள். அப்புறம் எப்படி வேளாண் குடிகளை அடுத்தக் கட்டத்திற்கு மேம்படுத்துவீர்கள். ஒருவேளை இலவச அரசி கொடுக்க முடியாத சூழ்நிலை வந்தால் மக்களின் நிலை என்ன. அவன் கிளர்ச்சி செய்வான், போராடுவான். அப்போது எதிரில் நின்று மக்களை சந்திக்கப் போவது யார். எந்த நாட்டிலேயேயும் கார் இல்லை என்றோ, செல்ஃபோன் இல்லை என்றோ புரட்சி வந்ததில்லை. ஆனால் நீரும், சோறும் கொடுக்க முடியாத நாட்டில் புரட்சி வராமல் இருந்ததில்லை என் சொந்தங்களே. அப்படி ஒருநிலை நம் யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. 

 

ஒரு தேசம் அடிப்படையில் இருந்து நிறைவடைந்து மேல் எழ வேண்டும். அதற்கு மிக முக்கியம் நீர் வளம். ஆனால் அதையே இங்கே தனியாருக்குத் தாரை வார்த்து கொடுத்தால், மக்களுக்கு என்ன கொடுப்பீர்கள். மக்களுக்கு வெறும் கையைத்தான் கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையில் இதே மாதிரியான ஏமாற்று வேலையைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களுக்கென்று மார்ஜின் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகம் வைத்து விற்க வேண்டும் என்றால், ஐந்து ரூபாய் விலை ஏற்றுவார்கள். நாம் விலையைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடுவோம். உடனே அவர்கள் இரண்டு ரூபாய் விலை குறைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டிய மூன்று ரூபாயை அவர்கள் எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இப்படியாக இந்த அரசுகள் கார்ப்பரேட்டுக்களுக்கு ஒத்துழைக்கும் அரசுகளாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அதனால் இவர்கள் செயற்கையாக எரிபொருள் பஞ்சத்தை ஏற்படுத்தி கூட இந்த விலை உயர்வை சாத்தியப்படுத்துவார்கள். நான்கு பங்க்குகளில் பெட்ரோல் இல்லை என்றால் எவ்வளவு விலை என்றாலும் பெட்ரோல் போடுங்கள் என்ற மனநிலை நமக்கு வந்துவிடும். அதைத்தான் இவர்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே இந்த சூழ்ச்சிகளுக்கு எல்லாம் நாம் ஆளாகக்கூடாது. நமக்கான அரசாகத்தான் நாம் தேர்தெடுக்கும் அரசு இருக்க வேண்டும்" என்றார்.