2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆண்டொன்றுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வீதம், ஐந்து ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவேன் என வாக்குறுதி அளித்து, நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தைப் பிடித்தார் நரேந்திர மோடி. வெறும் வாய்ச்சொல்லாக மட்டுமே போன அந்த வாக்குறுதியால், பல ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை வாசித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவை முக்கியத்துவம் பெறும் துறைகளாக’ இருப்பதாக அறிவித்தார்.
அவர் அதை அறிவித்திருக்கும் இந்த நேரத்தில், இன்னும் ஒரே ஆண்டில் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் முக்கால்வாசி இந்தியர்களின் வேலை பறிபோகும் நிலையில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோ, அதை வீரியப்படுத்தும் நம் அரசின் துரித நடவடிக்கைகளின் விளக்கம்..
இந்திய வேலைச்சூழலின் மோசமான நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கும் அறிக்கைகள்
இந்தியாவின் வேலைச்சூழல் முன்பைவிட மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் விவரத்தைச் சொல்லும் இரண்டு அறிக்கைகள் சமீபத்தில் வெளியாகின. ஆக்ஸ்ஃபோம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பங்கு மூலதனம் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்களான வளங்கள் குவிவது, ஊழியர்களின் வருமானத்திற்கு எதிரானதாக இருப்பதாக தெரிவித்தது. அதேபோல, இந்திய நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த சொத்துமதிப்பில் 77%, இந்த நாட்டின் மக்கள்தொகையில் வெறும் 1 சதவீதத்தினரிடம் மட்டுமே இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
அதேபோல், ஐஎல்ஓ (ILO) வெளியிட்ட அறிக்கையில், இந்திய தொழிலாளர்கள் சிரமம் நிறைந்த வேலை மற்றும் வாழ்க்கைச்சூழலில் பிழைத்திருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கும் மோசமான நிலையை உணர்த்தியது. மேலும், உழைக்கும் இந்தியர்களில் 77% பேர் (வேலையில்லாதவர்கள் தவிர்த்து) வரும் 2019ஆம் ஆண்டில் வேலையிழக்கும் சூழலுக்குத் தள்ளப்படும் நிலை உருவாகும் என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருக்கிறது. 'உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம் : 2018ன் போக்கு' என்ற இந்த அறிக்கை சொந்தமாக தொழில் செய்பவர்கள் அல்லது குடும்பத்தொழிலாளர்களின் வேலை பலவீனம் குறித்து விளக்குகிறது. ஆனால், தொழில் வல்லுநர்களும், பொருளாதாரவியலாளர்களும் இதை வேறொரு கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள். அவர்கள் அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழில்களைச் செய்யும் ஒப்பந்தக்கூலிகள்தான் இதனால் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறார்கள். உற்பத்தித்துறையின் ஒட்டுமொத்த பிரிவுகளிலும் கணிசமான வேலைவாய்ப்புகள் குறைந்துவருவதாக இந்திய தொழிற்சாலைகளின் தரவுத் தொடர் ஆண்டறிக்கை தெரிவித்திருந்ததை, ஐஎல்ஓ அறிக்கை உண்மையாக்குகிறது. வருடாந்திர தொழிலாளர் பணியக புள்ளிவிவரங்களும் வேலைவாய்ப்புகள் நலிவடைந்து வருவதை உணர்த்துகின்றன. அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டில் 480 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பு, 2016ல் 467 மில்லியனாக குறைந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தற்போது தலைகீழ் நிலைக்கு மாறியுள்ளது.
முதலாளிகளை ஊக்கப்படுத்தி, தொழிலாளர்களை புறக்கணிக்கும் இந்திய வரிமுறை
நம் இந்திய வரிமுறை கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சமூக சேவைகள், நன்கொடைகள் என எதையாவது காரணமாகச் சொல்லி, வரி செலுத்துவதில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தப்பிப்பதை நம் வரிமுறை அனுமதிக்கிறது. இது சிறுகுறு நிறுவனங்கள் செலுத்தும் வரியை விட, பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் குறைவான வரி செலுத்துவதை சுலபமாக்குகிறது. இது நேரடியாக முதலாளிகளை ஊக்கப்படுத்தி, தொழிலாளர்களின் வேகத்தைக் குறைக்கும் நிலைக்கு வழிவகுப்பதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ரூ.1 கோடிக்கும் குறைவாக வருவாய் ஈட்டும் சிறு நிறுவனங்கள் 30% வரி செலுத்தும் நிலையில், ரூ.500 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் 26%க்கும் குறைவாகவே வரி செலுத்துகின்றன என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
கார்ப்பரேட் வரிக்குறைப்பை ஊக்குவிக்கும், தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் யூகேஐபிசி (UKIBC)
யூனைட்டட் கிங்டம் - இந்திய வர்த்தக கவுன்சில் மற்றும் பிரிட்டிஷ் தொழில்க் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதின. அதில் கார்ப்பரேட் வரிச்சலுகைகள், குறைப்புகள் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்தித் தருமாறு கோரப்பட்டிருந்தது. இந்திய பட்ஜெட்டுக்கான விருப்பப் பட்டியல் விவாதத்தின்போது, மேற்சொன்னவற்றை செயல்படுத்தினால் இந்தியாவில் தொழில்செய்வது (Ease of doing Business) இன்னமும் எளிதாகும் என்றும், பிரிட்டிஷ் முதலீடுகளை அதிகம் கவருவதற்கான வாய்ப்பாக இருக்கும் எனவும் சில லாபி குழுக்கள் விவாதித்தன.
இந்திய ஜவுளித்துறையில் நிலவும் நவீன அடிமைத்துவம்
க்ளீன் க்ளோத்ஸ் கேம்பைனுடன் (Clean Cloth Campaign) இணைந்து செயல்படும் இந்திய ஜவுளித் தொழிலாளர்கள் யூனியன் வெளியிட்ட, ‘சுதந்திரமில்லா தொழிலாளர்கள் – பெங்களூரு ஜவுளித்துறைக்கு இடம்பெயர்ந்த பெண் ஊழியர்கள்’ என தலைப்பிடப்பட்ட அறிக்கை, உயர்ரக ஜவுளிகளைத் தயாரிக்கும் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த திறனுள்ள ஊழியர்கள், பெங்களூருவின் ஜவுளி நிறுவனங்களில் வேலைசெய்ய நிர்பந்திக்கப்படும் மிகமோசமான நிலையை விளக்குகிறது. மேலும், அதில் பதினொன்றில் ஐந்து ஊழியர்கள் கட்டாயத்தின் பேரில் பணியிலமர்த்தப் பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பொய்யான ஊதிய உத்தரவாதங்களைக் கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண் ஊழியர்கள், மிகுந்த அழுத்தத்துடனும், வேலைப்பளுவுடனும் குறைந்த சம்பளத்திற்காக வேலை செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தொழில்துறையை ஒப்பந்தமயமாக்கத் துடிக்கும் மத்திய அரசு
மத்திய அரசு சமீபத்தில் தொழில் முரண்பாட்டுச் சட்டம் மற்றும் மாதிரி நிலை ஆணை விதிகள் ஆகியவற்றில் ‘நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கான வேலைவாய்ப்பினை’ நிறுவனங்கள் செயல்படுத்துவதற்கான வரைவை வெளியிட்டது. ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நியாயமானதாக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தந்த உந்துதலின் வெளிப்பாடே இது. இந்த முறையை தோல் மற்றும் ஆடைத்துறையில் மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், நிதி ஆயோக் போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் இதை அனைத்துத் துறைகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இந்த ‘நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கான வேலைவாய்ப்பு’ முறையை மாநில அரசுகள் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, இந்தச் சட்டத்திற்கான வரைவு தற்போது கருத்துக்கேட்புக்காக வைக்கப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் ஊழியர்களின் தொழில்சுழற்சி மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்க நேரிடும். மேலும், இந்த மசோதா 300 பேருக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களை இழுத்து மூடுவதற்கும், தேவைப்பட்டால் எந்தவொரு முன்னறிவிப்பும், அறிக்கையும் இன்றி ஆட்குறைப்பு செய்வதற்கான வசதிகளை தொழில் முரண்பாட்டுச் சட்டத்தில் அமல்படுத்தும் வசதியையும் மாநில அரசுக்கு ஏற்படுத்தும். தற்போது, பல மாநிலங்களில் இந்த எண்ணிக்கை நூறாக இருக்கிறது.
சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடியிடம் வேலைவாய்ப்பு குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், உங்கள் கட்டிடத்தின் வெளியே பக்கோடா விற்பவர் கூட நாளொன்றுக்கு ரூ.200 வருமானம் ஈட்டுகிறார். அது வேலைவாய்ப்பு இல்லையா? எனக் கேட்டார். டெல்லியின் சங்கர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் டீக்கடையில் பக்கோடா விற்கும் ஜெய்ப்பிரகாஷ், ‘எனக்கு 24 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனைப் படிக்க வைப்பதற்காக இந்த வேலையைச் செய்யத் தொடங்கினேன். இன்று என் மகன் படித்து முடித்துவிட்டான். ஆனால், அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவனுக்காக நான் பக்கோடா விற்கத் தொடங்கினேன். இனி நாட்டுக்காக என் மகன் பக்கோடா விற்கவேண்டுமா?’ என விரக்தியான முகத்தோடு கேட்டார். அதைத்தான் நம் பிரதமரும் விரும்புகிறாரோ என்னவோ!