தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
சனாதனம் என்பது வட மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும், தென் மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது. சனாதனமும் இந்து மதமும் வேறு வேறு என்கிற புரிதல் தென்னிந்தியாவில் இருக்கிறது. அதனால் தான் உத்தரப்பிரதேச சாமியாரின் வன்முறைப் பேச்சை அண்ணாமலையால் இங்கு ஆதரிக்க முடியவில்லை. ஆனால் சனாதனம் பற்றிப் பேசினால் கண்ணை நோண்டிவிடுவேன் என்கிறார் ஒரு ஒன்றிய அமைச்சர். மம்தா பானர்ஜி கூட உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
வட இந்தியாவில் செய்யப்படும் பிரச்சாரம் வேறு மாதிரியாக இருக்கிறது. இங்குள்ள பாஜக தலைவர்கள் வேறு மாதிரியாக பேசுகின்றனர். அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்பதே உண்மை. சனாதனம் என்றாலும் இந்து மதம் என்றாலும் ஒன்றுதான் என்கிற எண்ணத்தில் வட இந்தியர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இதுகுறித்த புரிதல் வேறுபட்டிருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைத்தான் நாம் எதிர்க்கிறோம் என்பது இங்கு அனைவருக்கும் புரிகிறது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டும்.
சனாதனமும் இந்து மதமும் ஒன்றுதான் என்று பாடநூலில் இருப்பதை தமிழக அரசு மாற்ற வேண்டும். அரசாங்கத்துக்கு சித்தாந்த தெளிவு இருந்தாலும், பல அதிகாரிகளுக்கு அப்படி இருப்பதில்லை. அதிகார மட்டத்தில் சில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் களைய வேண்டும். அனைத்து தளங்களிலும் அரசின் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும். இந்தியாவின் பெயரை பாரத் என இவர்களால் மாற்ற முடியாது. அது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டமும் சாத்தியம் இல்லை.
ஆட்சியில் இருக்கும் அனைத்து மாநில அரசுகளையும் இவர்கள் கலைக்கப் போகிறார்களா? இப்போது வட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்ப்பு இருக்கிறது. மோசமான தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்கிற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. வருகின்ற ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக தோற்றால், சர்வாதிகாரமாக ஒரே தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் இந்த நாடு பிளவுபடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினரின் உடையை காவி நிறத்துக்கு நாங்கள் மாற்றுவோம் என்கிறார் ஹெச். ராஜா. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே இவர்கள் உத்தரப்பிரதேசம் போல் மாற்றிவிடுவார்கள்.
தேசிய சின்னத்தை தங்களுடைய கட்சியின் சின்னமாக யாராவது வைத்திருக்க முடியுமா? ஆனால் பாஜக வைத்திருக்கிறது. இதுபோல்தான் பாரத் என நாட்டுக்கு பெயரை மாற்றும் முடிவையும் எடுக்கிறார்கள். புறவாசல் வழியாக வருவதே பாஜகவின் பாணி.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...