ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அந்தச் சூழலில் சசிகலா அணிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றவியல் போலீசாரிடம் புகார் கொடுத்தார் தேர்தல் அதிகாரி. இந்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரையும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி டி.டி.வி. தினகரனையும் கைது செய்தது டெல்லி போலீஸ், இரண்டு மாத சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார் தினகரன்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுக்க, கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு தினகரன் ஆஜராக, மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’பெண் தொழிலதிபர் ஒருவரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர் டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார். பொருளாதார குற்றம் என்பதால் அமலாக்கத்துறையும் கடந்த 4-ந்தேதி சுகேஷ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரிடம் டெல்லி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச விவகாரமும் விசாரிக்கப்பட்டிருக்கிறது.
அந்த விசாரணையில், சின்னத்தைப் பெற்றுத்தர 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு முன்பணமாக 25 கோடி ரூபாயை தினகரன் கொடுத்தார் என்றும், அதை வைத்தே தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க அணுகியதாக சொல்லியிருக்கிறார் சுகேஷ். இதனையடுத்தே, தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப, ஆஜரானார் தினகரன். அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் பிரசாந்த்குமார் ஐ.ஆர்.எஸ். மேற்பார்வையில் அவர் அமைத்த டீம் தினகரனிடம் விசாரணை நடத்தியிருக்கிறது.
விசாரணையில் அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார் தினகரன். குறிப்பாக, சுகேஷுக்கும் உங்களுக்கும் நட்பு எப்படி உருவானது என அதிகாரிகள் கேட்க, “அவரை நான் பார்த்தது கூட கிடையாது; நட்பு எப்படி உருவாகும்?” என தினகரன் கெத்தாக பதில் சொல்லியிருக்கிறார்.
அப்போது, “நீங்க சொல்ற பதில்கள் உங்களுக்கே எதிராகப்போகவும் வாய்ப்பிருக்கிறது. அதனால எல்லாத்துக்கும் தெரியாதுன்னு சொல்லாதீங்க. உண்மையைச் சொல்லுங்கள்” என்று அதிகாரிகள் சொன்னபோதும், சுகேஷை தெரியாது என்றே தினகரன் திரும்பத் திரும்பச் சொல்ல, கடுப்பான அதிகாரிகள், 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியபோது கொடுத்த வாக்குமூலத்தையும், சில புகைப்படங்களையும் தினகரனிடம் காட்டினார்கள். அதில், ஒரு ஹோட்டலில் சுகேஷும் தினகரனும் சந்தித்த சி.சி.டி.வி. காட்சிகள் இருந்தன.
அதைப் பார்த்த தினகரன் வெலவெலத்துப் போயிருக்கிறார். அதன்பிறகு வாய் திறந்த தினகரன், “அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்த போது என்னை சந்தித்த அவர், அரசியல் பிரபலங்களையும் அதிகாரிகளையும் தனக்கு தெரியுமென்றும், இரட்டை இலை சின்னத்தை உங்களுக்கு சாதகமாக பெற்றுத்தர என்னால் முடியுமென்றும், ஆனால் கொஞ்சம் செலவாகும் என்றும் சொன்னார். அதில் எனக்கு விருப்பமில்லையென்பதால் மறுத்து விட்டேன். அப்படியிருக்க அந்த நபர் ஏன் மாற்றி மாற்றி பொய் சொல்கிறார்னு தெரியலை. என்னை மாட்டிவிட அரசியல் சதி நடக்கிறது. நான் நிரபராதி” என கெஞ்சியிருக்கிறார்.
“அரசியல் சதியை யார் செய்கிறார்கள்?” என அதிகாரிகள் கேட்க, பதில் சொல்லவில்லை தினகரன். அதேபோல, சென்னையை சேர்ந்த மோகன்ராஜ், கோபிநாத் (சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டவர்) குறித்த பல கேள்விகளுக்கும் தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார். கூப்பிடும்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்கிற எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டார் தினகரன். ஆனால், இந்த வழக்கு தொடர்பாக தினகரனுக்கும் சுகேஷுக்குமான தொடர்புகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. இதில் எந்த சூழலிலும் அவர் தப்பிக்க முடியாது” என்கின்றன டெல்லி தகவல்கள்.
தினகரனுக்கு எதிரான விவகாரங்கள் இப்படியிருக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவர் முடங்கிவிடுவார் என எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், “எனது ஆன்மிக பயணத்தை அரசியல் பயணமாக தொடரப் போகிறேன்; இனிதான் என் அரசியலை எடப்பாடி பார்க்கப்போகிறார்” என்று வெளிப்படையாக பேசத் துவங்கியுள்ளார் சசிகலா.
இந்த நிலையில், எடப்பாடியை பலவீனப்படுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 30 பேரை வளைக்கும் திட்டத்தை போட்டுள்ளார் சசிகலா. முதல்கட்டமாக பட்டியலின எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இதனையறிந்துள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை, அ.தி.மு.க.வை உடைத்து அதே 30 எம்.எல்.ஏ.க்களை வளைத்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உட்கார திட்டமிட்டுள்ளது. இதனை உணர்ந்து பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க ரகசியமாக களத்தில் குதித்துள்ளது தி.மு.க.
ஆக... முக்கோண சிக்கலில் அ.தி.மு.க.வின் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.