Skip to main content

பிரதமர் நிர்வாகத்தில் ஜனாதிபதி தலையிட்டால்

Published on 15/11/2017 | Edited on 15/11/2017
பிரதமர் நிர்வாகத்தில் ஜனாதிபதி 
தலையிட்டால் ஏற்பீர்களா? 
தமிமுன் அன்சாரி சிறப்பு பேட்டி 

கோவையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அதிமுக கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். 

இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் நேற்றைய தினம் கோவையில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக்கூட அழைக்காமல், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டத்தை கவர்னர் நடத்தியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.



ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசும், முதல் அமைச்சரும் இருக்கிறபோது இப்படி கவர்னர் அத்துமீறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஏற்கனவே டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மத்திய அரசு கவர்னரை தூண்டிவிட்டது. பிறகு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடியை தூண்டிவிட்டு அங்கு இரட்டை தலைமை தோற்றத்தை உருவாக்கியது. இதன் மூலம் அங்கு குழப்பத்தை உருவாக்கி நிர்வாகத்தை சீர்கெடுத்தார்கள்.

இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக யூனியன் பிரதேசம் அல்லாத தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசும், முதல் அமைச்சரும் இருக்கும்போது கவர்னர் இப்படி வரம்பு மீறி செயல்பட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. மாநில சுயாட்சி கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் கவர்னர் இவ்வாறு நடந்திருப்பது அந்த கோரிக்கையை வலுப்படுத்தவே உதவும். இதை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவிக்கிறது. பிரதமருடைய நிர்வாக அமைப்பில் ஜனாதிபதி வரம்பு மீறி தலையிட்டால் அதை ஏற்றுக்கொள்வார்களா? அதுபோலத்தான் இந்த விசயத்தை பார்க்க வேண்டும்.

இந்த விசயத்தில் பாஜக தலைவர்கள் கவர்னருக்கு வக்காலத்து வாங்கி பேசுவது, அவர்களுடைய ரகசிய திட்டங்களை காட்டுகிறது. தமிழக அரசு குறிப்பாக எடப்பாடி பழனிசாமி இதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?

இது காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆட்சி செய்த மாநிலம். இங்கு டெல்லியின் குள்ளநரித் தனத்தை தமிழக மக்கள், அனுமதிக்க மாட்டார்கள், ஏற்கமாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற வரம்பு மீறல்களை கவர்னர் உடனடியாக நிறுத்திக்கொண்டு, தனது எல்லைக்குள் உள்ள பணிகளை செய்ய வேண்டும். இதனை எடப்பாடி பழனிசாமி கண்டிப்பார் என்று நம்புகிறேன். அப்படி கண்டித்தால்தான் இது பினாமி அரசு என்ற குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் வெளிவர முடியும்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் நீடித்தால்...

இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் மிக கடுமையாக சட்டத்தின் அடிப்படையிலான போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். தேவைப்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க அனைத்துக் கட்சிகளோடும் கைகோர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் உறுதியாக. 

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்