முந்தைய விதிமீறல் வழக்குகளுக்கு நடவடிக்கை என்ன? விஜயதாரணி கேள்வி

ஜெயலலிதா விடியோ வெளியிட்டதற்கு விதிமீறல் வழக்கு பதியும் தேர்தல் ஆணையம், இதற்கு முன் பதிவு செய்த விதிமீறல் வழக்குகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி...
இந்த வீடியோவை விதிமுறை மீறல் என எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவைப் போல பொம்மை செய்து சவ ஊர்வலம் நடத்தி பிரச்சாரம் செய்தார்களே அது விதிமீறல் இல்லையா. இந்த வீடியோ வந்ததால், போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா இறந்துதான் கொண்டு போனார்கள் என்ற சர்ச்சை மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடுதான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது இப்போது தெளிவாகிறது.
இந்த வீடியோவை எப்படியும் ஆய்வுக்கு உட்படுத்துவார்கள். என்ன ஆய்வு செய்தாலும் அவர் அந்த காலக்கட்டத்தில் உயிரோடு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, நேரம், நாள் உள்ளிட்டவற்றை சொல்ல வேண்டும். அப்போதுதான், கரூர், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அவருடைய கைரேகை பதியப்பட்டது உண்மையா என உறுதி செய்ய முடியும்.
பல்வேறு ஆதாயங்களுக்காக இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்பட்டாலும், ஜெயலலிதாவின் சாவில் கிளப்பப்பட்ட மர்மங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதைத்தான் பொதுநோக்கர்கள் பார்க்க வேண்டும்.
வீடியோ வெளியிட்டதை தேர்தல் ஆணையம் விதிமுறை மீறல் என வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதே?
தேர்தல் ஆணையம் எவ்வளவோ வழக்குகளை பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கெல்லாம் நடவடிக்கை எடுத்ததுபோல் தெரியவில்லை. கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தது என்று ரத்து செய்தார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? கடந்த 3 நாட்களுக்கு முன்பு 100 கோடி அளவு பணப்பட்டுவாடா நடந்ததாக செய்திகள் வெளியானது. நடவடிக்கை எடுத்தார்களா. 30 லட்சம் பிடிப்பட்டதாக சொல்கிறார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். ஜெ. புகழை கெடுக்கிறார்கள் என்று சசிகலா தரப்பை குற்றம் சாட்டுகிறாரே?
வீடியோ இருந்தால் வெளியிட வேண்டும் என்று சொன்னதே இந்த அமைச்சர்கள்தானே. தேர்தலில் யாருக்கு என்ன லாபம் என்று பார்ப்பதைவிட மக்களுக்கு உள்ள சந்தேகம், சர்ச்சைகளுக்கு பதில் வேண்டும் என்பதைதான் பார்க்க வேண்டும். இந்த வீடியோ வெளியிடப்பட்டதை பெரிய தவறு என்றோ, விதிமுறை மீறல் என்றோ சொல்ல முடியாது என்றார்.
வே.ராஜவேல்