ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது. தேசம் முழுவதும் இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. இது குறித்து பிரபல பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தெரிவித்துள்ள கருத்து...
"காஷ்மீர்... கடந்த எழுபது ஆண்டுகளாக ஏதேனும் ஒரு அரசியல் தீர்வையோ அமைதியையோ கண்டிருக்கிறதா? எனது வயது 50 ஆகிறது. எனது பள்ளி நாட்களிலிருந்து இன்று வரை செய்தித்தாள்களின் முதல் பக்கங்கள், காஷ்மீர் குண்டுவெடிப்பில் 40 பேர் பலியாவதையும் தாக்குதலில் 10 பேர் கொல்லப்படுவதையுமே மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றன. மக்களுக்கு காஷ்மீர் என்பது என்றும் ஒரு சூடான செய்தியாகவே ஊடகங்களாலும் காட்டப்படுகிறது. 'சுதந்திர காஷ்மீர்' என்ற முழக்கத்துடன் கொடூரமான கொலைகளும் வன்முறையும் தொடர்ந்தன. காஷ்மீர் பிரச்சனையில் மட்டும் இதுவரை கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு படையினரையும் சேர்த்து கருத்தில் கொண்டால் அது நமது சுதந்திர போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தாண்டும்.
காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பது குறித்த பெருமை நம் எல்லோருக்கும் உண்டு . ஆனால், உண்மையில் எத்தனை பேருக்கு அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு என்ன என்பது தெரியும்? அது காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மட்டும்தானா? கடந்த சில நாட்களாக நடக்கும் விவாதங்களை கூர்ந்து கவனித்தால் ஒன்று நன்றாகப் புரிகிறது. நமது அரசியல் தலைவர்களுக்கும்கூட அது குறித்த ஆழ்ந்த அறிவு இல்லை என்பதுதான் அது. தேசம் முழுவதுமான ஆதரவு அலை, சில காங்கிரஸ் தலைவர்களையும் கூட பாஜக அரசின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கச் செய்துள்ளது. எதிர்கட்சிகளை பிரிக்கும் வியூகத்தில் இந்த முறையும் மோடி அரசு வென்றுள்ளது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. தேசத்துக்கு இவ்வளவு முக்கியமான ஒரு மசோதாவிலும் கூட ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்? ராகுல் காந்தி ஏன் நாடாளுமன்றத்திற்குள் தனது கருத்தை பதிவு செய்யவில்லை? ஏன் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதா குறித்த அழுத்தமான தெளிவான பேச்சை நிகழ்த்துவதில் படுதோல்வியடைந்தனர்? திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் பேச்சு அவருக்கு அந்த விஷயம் முழுதாகத் தெரியாது என்பதை உணர்த்தியது. மாயாவதியின் கட்சி, பிஜு ஜனதா தளம் கட்சி உள்ளிட்டவை சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மசோதாவை ஆதரித்தன. மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்குமென்று சிந்திக்கவேண்டும்.
நான் இங்கு அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு என்றால் என்ன என்பதைப் பற்றியோ அது திரும்பப் பெறப்பட்ட சூழல் பற்றியோ சொல்ல வரவில்லை.ஆனால், காஷ்மீரின் வளர்ச்சிக்காக மன்மோகன்சிங் ஒதுக்கிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கு சென்றது என்பதை சிந்திக்கவேண்டும்.
நான் காஷ்மீரில் வாழ்ந்த சில காலம் அங்குள்ள பள்ளத்தாக்குகளில் பயணித்திருக்கிறேன். பல தாலுகாக்களில் மருத்துவமனையோ பள்ளியோ கிடையாது. 100 கி.மீ பயணம் செய்யவேண்டும் ஒரு மருத்துவமனையை தேடி. வளர்ச்சி குறித்த அந்த மாநில அரசின் அறிக்கைகள் எல்லாம் பொய் அறிக்கைகள். இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலம் காஷ்மீர்.
இந்த மசோதாவை இன்று எதிர்ப்பவர்கள் என் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். 2015இல் காஷ்மீர் அமைதிக்காக அமைக்கப்பட்ட குழுவால் விளைந்த நன்மைகள் என்ன? தங்களை சந்திக்க வந்து காத்திருந்த தலைவர்களை சந்திக்காமல் பிரிவினைவாதிகள் கதவை மூடிக்கொண்டனர். அவர்கள் ஏன் தேர்தல்களிலும் போட்டியிடுவதில்லை? அவர்களுக்கு இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை பொறுத்தவரையில் காஷ்மீர், ஒரு தனி நாடாகவோ அல்லது பாகிஸ்தானுடன் இணைந்தோ இருக்கவேண்டும். இதுதான் அவர்களது தேவை. அதனால்தான் காஷ்மீரில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவிடாமல் அவர்கள் தடுக்கிறார்கள். அவர்களது விருப்பம் நடந்தால் காஷ்மீர் எப்போதும் ஒரு மோசமான தலைப்புச் செய்தியாகவே தொடரும்."