அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு: ரஜினி அறிவிப்பு பற்றி இரா.முத்தரசன் கருத்து
6வது நாளாக தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினி, அரசியலுக்கு வருவதாகவும், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:-
நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்றத்தில் சில அறிவிப்புகளை செய்திருக்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த ஓர் ஆண்டு காலமாக நடைப்பெற்று வரக்கூடிய ஆட்சிக் குறித்து மிக கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார். அலங்கோலமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றன.

குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையையும் இழந்து விட்டது, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டது, ஆகவே பதவி விலக வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதுபோலவே எல்லா கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறது. அதே கருத்தைத்தான் இன்று ரஜினியும் தெரிவித்திருக்கிறார்.
இரண்டாவதாக அவர் இன்று முக்கியமாக மேற்கொண்டிருக்கிற பணி என்பது அவருடைய மன்றத்தை பலப்படுத்துவது என்பதுதான். மூன்றாவதாக உள்ளாட்சித் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டோம் என்று தெரிவிக்கிறார். கடந்த ஓராண்டு காலமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனை நடத்த வேண்டும் என்று கூட அவர் சொல்லவில்லை. சட்டமன்றம், நாடாளுமன்றம் எப்படி முக்கியமோ அதைவிட முக்கியமானது உள்ளாட்சி அமைப்புகள். மக்களுடன் நேரடியாக தொடர்பு உள்ள அமைப்பு அந்த அமைப்பு. அப்படிப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கிறார்.
அதேபோல தனிக்கட்சி, தனிக்கொள்கை, தனி லட்சியங்கள் குறித்து இப்போது அறிவிக்க மாட்டேன். சட்டமன்றத் தேர்தல் அறிவித்தவுடன்தான் அறிவிப்பேன். அதுவரை தனது மன்றத்தில் தான் உள்பட யாரும் அரசியல் பேசக்கூடாது என்கிற ஒரு முடிவையும் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் தற்போது சொல்லமாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். ஆகவே தனிக்கட்சி என்று அவர் அறிவிக்கிற வரையிலும் தன்னுடைய கட்சியின் கொள்கை என்ன என்பதை அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆன்மீக அரசியல் என்று குறிப்பிடுகிறார். ஆன்மீகம் வேறு. அரசியல் வேறு. ஆன்மீகத்தில் அரசியல் தலையிடக் கூடாது. அரசியலில் ஆன்மீகம் தலையிடக் கூடாது. அரசியல்வாதிகள் எங்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள், நுழையாதீர்கள் என்று ஆன்மீகவாதிகளே சொல்வார்கள். மதசார்பற்ற கொள்கைதான் நம்நாட்டின் மிக முக்கியமான கொள்கை. அருகில் உள்ள நேபாளம் கூட மதசார்பற்ற நாடு என்றுதான் அறிவித்திருக்கிறது. ஆகவே ஆன்மீக அரசியலை மேற்கொள்வோம் என்று ரஜினி குறிப்பிட்டிருக்கிறது குழப்பமான அரசியல் என்று தெரிகிறது. எனவே அவர் கட்சி, கொள்கை பற்றி அறிவித்தவுடன் விவாதிப்பது பொருத்தமாக இருக்கும். இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்