கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்த தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தௌஃபீக்கிடம் பத்து நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்திவருகிறது காவல்துறை. அவர்களும், அசராமல் பதிலளித்து வருகிறார்கள்.
இதில் கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடம் பற்றியும் இந்த விசாரணையில் தெரியவந்தது. அதன்படி, ஜனவரி 23-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள கழிவுநீர் ஓடையில் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டது. அதேபோல், 24-ந் தேதி திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதரில் இருந்து கத்தியை போலீசார் மீட்டனர். ஒருபுறம் இந்தத் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனைக் கொலைசெய்த இருவரும், அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றனர். அங்குள்ள நெய்யாற்றின்கரா என்ற பகுதியில் ஜாஃபர் என்பவனைச் சந்தித்து ஒரு பையைக் கொடுத்துள்ளனர். அதில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கத்தியும், சில சாக்லேட்களும் வாங்கியதற்கான பில் இருந்திருக்கிறது. அதே திருவனந்தபுரத்தில் இருக்கும் தம்பானூர் பகுதியில் பேருந்துநிலையம் அருகிலுள்ள ஒரு புதருக்குள் கத்தியை வீசிவிட்டு, அங்கிருந்து எர்ணாகுளம் சென்று பேருந்துநிலையத்திற்கு பின்புறம் உள்ள கழிவுநீர் ஓடையில் துப்பாக்கியை எறிந்துள்ளனர். இரண்டுமே பொதுமக்கள் சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தும் பகுதிகள்.
இங்கிருந்துதான் பல்வேறு கேள்விகள் விரிவதாகச் சொல்கிறார்கள் கேரள கியூ பிரிவு போலீசார். இதுதொடர்பாக நம்மிடம் விரிவாகப் பேசியவர்கள், "திருவனந்தபுரத்தில் கத்தியையும், எர்ணாகுளத்தில் துப்பாக்கியையும் எதற்காக போட்டுவிட்டுச் செல்ல வேண்டும். திருவனந்தபுரத்தில் உள்ள பீமாபள்ளி, வள்ளகடவு, மணக்காடு ஆகிய பகுதிகளில் இந்தத் தீவிரவாதிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கலாம். காவல்துறையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதால், எப்படியும் காவல்துறை விரட்டிவரும் என்ற அச்சத்தில் பாதுகாப்பிற்காக கூடவே எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், கர்நாடக மாநிலம் உடுப்பியில் குஜராத் செல்லும் வேரவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த தீவிரவாதிகளைக் கைதுசெய்தபோது, அவர்களிடம் ஆயுதங்கள் இல்லாதது ஏன் என்பது போன்ற கேள்விகள் கேரளாவின் கியூ பிரிவு அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளன.
இதேபோல், வில்சனின் உடலில் இருந்த காயங்களின் தன்மை மற்றும் குண்டுகளை வைத்து, கொலைக்காக பயன்படுத்திய துப்பாக்கி ரிவால்வர் ரகத்தைச் சேர்ந்தது என்று கியூ பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள். ஆனால், எர்ணாகுளத்தில் கைப்பற்றியிருப்பதோ, 7.65 மி.மீ. ஆட்டோமேடிக் பிஸ்டல் ரக துப்பாக்கி. இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. இத்தாலி ராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி கணேசன் கூறியுள்ளார்.
மேலும் அவர், 50 மீட்டர் தூரத்தில் இருந்து சுட்டால் மட்டுமே சாதாரண ரிவால்வர் மூலம் உயிரிழப்பு ஏற்படும். குண்டுபட்ட இடம் 3.8 விட்டம் ஆழம் இருக்கும். 50 மீட்டரைத் தாண்டினால், அதன்மூலம் கொடுங்காயம் மட்டுமே ஏற்படும். இதுவே பிஸ்டலாக இருந்தால், உயிரிழப்புக்கான சுடும் தூரம் 100 மீட்டர். குண்டு ஏற்படுத்தும் காயத்தின் ஆழம் 9 விட்டம் இருக்கும். மேலும், பிஸ்டலின் மேகஜினில் 13 மற்றும் 17 குண்டுகள் பயன்படுத்தலாம்.
வில்சனை நேருக்கு நேர் நின்று சுமார் 6 மீட்டர் தூரத்திலிருந்து சுட்டுள்ளதாகவும், அவரது உடலில் இருந்து 3 குண்டுகளும், உடலைத் துளைக்காமல் தரையில் ஊடுருவியதாக 2 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எர்ணாகுளத்தில் மீட்கப்பட்ட பிஸ்டலில் 5 குண்டுகள் மட்டுமே இருந்தன' என தெரிவித்திருக்கிறார்.
பிஸ்டலின் மூலம் 6 மீட்டர் தூரத்தில் நின்று சுட்டிருந்தால், நிச்சயம் வில்சனின் உடலை குண்டுகள் துளைத்து மறுப்பக்கம் வெளியேறியிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அப்படியானால், எங்கிருந்து சுட்டு உயிரிழப்பை ஏற்படுத்தினார்கள். அல்லது சுடுவதற்குப் பயன்படுத்தியது ரிவால்வரா, பிஸ்டலா? ஒருவேளை பிஸ்டலாக இருந்தால் அதில் மீதமிருக்க வேண்டிய 3 குண்டுகள் எங்கே போயின. முதலில் அதில் எத்தனை குண்டுகள் நிரப்பப்பட்டிருந்தது உள்ளிட்ட தொடர் கேள்விகள் இதில் எழுவதாக கேரள கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கியைச் சுடும்போது, அது ஃபயர் ஆகி குண்டில் இருக்கும் பவுடர் பிஸ்டலின் பேரல் குழாயில் படிந்திருக்கும். அந்தப் பவுடரையும், வில்சனின் உடலில் பாய்ந்த குண்டுகளையும் ஆய்வு செய்தாலே எந்தத் துப்பாக்கியால் சுட்டார்கள் என்பது தெரிந்து விடும். ஆனால், பிஸ்டல் கழிவுநீர் ஓடையில் கிடந்ததால், அந்தப் பவுடரும் அழிந்திருக்கலாம்'' என்கிறார்கள்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, கிடைத்த 7.65 மிமீ ரக பிஸ்டல், இத்தாலி ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதா? இவர்களிடம் அதைக் கொடுத்த தீவிரவாதி மெகபூப் பாஷாவுக்கு அது எப்படிக் கிடைத்தது போன்ற பல கேள்விகளுக்கான விடையை விசாரணையின் மூலம் தேடிக் கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை.
இதற்கிடையே காயல்பட்டினத்தில் அப்துல் சமீம் மீதுள்ள கொலைவழக்கு தொடர்பாக அங்கு அழைத்துச் சென்றபோது, இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபிறகு, தீவிர வாதிகளை நேசமணி நகர் காவல்நிலையம் கொண்டு சென்று மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.