Skip to main content

என்னையும் வழக்குல சேர்த்துட்டாங்களா? வீடியோவில் போலீஸ் அதிகாரி...  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

"ஹலோ நக்கீரனா? பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மறைக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்...' என, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நமது லைனில் வர, அவரைச் சந்தித்தோம்.

"அத்தனையும் உண்மை' என தன் நெஞ்சில் கைவைத்து அந்த அதிகாரி சொன்னாலும் கூட, அவை அப்படியே எழுதிவிட முடியாத ரகத்தைச் சேர்ந்தது. அதே நேரத்தில், தவிர்க்க முடியாதது என்பதால், குறிப்பாகத் தந்திருக்கிறோம்.

 

incident



"பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் செல்போன்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தது உண்மைதான்! அவற்றை ஆராய்ந்த கோவை மாவட்ட அதிகாரிகளான ‘"ராஜன்'’ ஆனவரும், ‘"ராமன்'’ ஆனவரும் ஆனந்தக் கூத்தாடினார்கள். அந்த அளவுக்கு அந்த வீடியோக்களில் மிக முக்கிய அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் பெண்களுடன் நெருக்கமாக இருந்தது பதிவாகியிருந்தது. குறிப்பாக, "நாதன்'’ஆன அந்த அதிகாரி, பல வீடியோக்களில் காணப்பட்டார்.

சக அதிகாரி என்றாலும், "இந்த வீடியோக்கள் லீக் ஆனால் உனக்கு எதிர்காலம் என்பதே இல்லாமல் போய் விடும்' என மிரட்டப்பட்டார் அந்த அதிகாரி. அதனைத் தொடர்ந்து “இந்த வீடியோக்கள் வெளிவராமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 லட்சம் கொடு.

இல்லையென்றால், பாலியல் வழக்கில் நீயும் கம்பி எண்ண வேண்டியதுதான். இதை நான் சொல்லவில்லை. பெரிய அதிகாரிதான் உன்கிட்ட சொல்லச் சொன்னாரு என்று பேரம் பேச, அடித்துப்பிடித்து அந்தத் தொகையை அவர் ‘ரெடி’ செய்து கொடுக்க, அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

அந்த அதிகாரியிடமிருந்து மட்டுமல்ல, சில அரசியல் பிரமுகர்களிடமும் வீடியோக்களை அழிப்பதற்காகக் கறந்த பணம் ரூ.6 கோடிக்கும் மேலே. அந்தப் பணத்தில்தான், பிளாக் மெயில் அதிகாரிகள் இருவரில் ஒருவர், வடவள்ளி அண்ணா நகர் ஏரியாவில், தன்னுடைய மனைவி பெயரில் ஒண்ணே முக்கால் கோடிக்கு பெரிய பங்களா வாங்கி, பதிவும் செய்திருக்கிறார்.


அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும், அந்த இடத்துக்கு வந்தார் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அவ்வளவுதான்! வீடியோவில் சிக்கி பணத்தை இழந்த அதிகாரி, அவருக்கு ‘ஆல் இன் ஆல்’ ஆகிவிட்டார். உயரதிகாரிக்குத்தான் நம் மொழி தெரியாதே! விட்ட பணத்தை இத்துறையில் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற வெறியோடு லஞ்சத்தை வாங்கிக் குவிக்கிறார்.

இவருக்காக ‘மனோ’ தைரியமுள்ள அதிகாரியும், "தவ'மான அதிகாரியும் வசூல் வேட்டை நடத்துகின்றனர். ஆக, வீடியோ அதிகாரி உள்ளிட்ட மூவரும், இந்த மாவட்டத்தில் ‘மூவேந்தர்கள்’என்றே அழைக்கப்படுகின்றனர்.

மாதம்தோறும் ரூ.15000 வரை வீதம், இந்த மாவட்டத்திலுள்ள 35 காவல் நிலையங்களில் இருந்தும், இவர்களுக்கு லஞ்சம் போய்ச் சேர்கிறது. ’மூணு நம்பர் லாட்டரி’ நடத்துபவர்கள், கஞ்சா விற்பனையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் என சட்ட விரோத கும்பல் எதையும், பணம் கறக்காமல் இவர்கள் விட்டு வைப்பதில்லை. தற்போது நடந்த காவலர் தேர்விலும்கூட, சிலரிடம் தலைக்கு ரூ. 6 லட்சம் என லஞ்சம் வாங்கினார்கள்.


மூவேந்தரில் ஒருவரான ’மனோ’ தைரியமுள்ளவர், பெரியநாயக்கன்பாளையம் பில்லூர் டேம் வனப்பகுதிக்கு, கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் ஸ்டைலில், அதுபோலவே உள்ள ஜீப்பில் சென்று கள்ளத்துப்பாக்கி மூலம் வேட்டையாடுகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட விலங்குகள் பில்லூர் கெஸ்ட் ஹவுஸுக்கு கொண்டுபோய் சமைக்கப்படும்.

மற்ற இருவரும் அங்கு சேர்ந்துகொள்ள, மூவேந்தர்களும் ‘அமர்க்களம்’ பண்ணுவார்கள். மதுவும் இறைச்சியும் போதாதென்று, ஒரு பிரிவில் பணிபுரியும் பெண்களை ’கரெக்ட்’ செய்து அங்கே அழைத்துச் சென்று, மூவரும் போடும் ஆட்டம் இருக்கிறதே! ரொம்பவும் கொடுமை சார்'' என்றார் நம்மிடம் அந்த அதிகாரி.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார் என்பதற்காக ரூ.25 லட்சத்தை அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதல்லவா? அதன் பின்னணியில் இருக்கிறார் வீடியோ அதிகாரி.

எப்படியென்றால், அந்தப் பெண்ணின் பெயரைப் பதிவு செய்துகொடுத்ததே இவர்தான். பண விஷயத்தில் நம்பிக்கையானவர் என்று பெயரெடுத்த தனக்குக் கீழுள்ள அதிகாரி என்பதால், அந்த பத்திரிகை செய்திக் குறிப்பை படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டார். தன்னிடமே பிளாக் மெயில் செய்து பணம் பறித்த மேலதிகாரி என்பதால், அவருக்கு ‘பண தண்டனை’வாங்கிக் கொடுத்து பழி தீர்த்துக் கொண்டார் வீடியோ அதிகாரி'' எனச் சொல்லும் காக்கிகள் வட்டாரம், மேலும் சில விவகாரங்களைக் கசியவிட்டது.

தன்னை அழகாக காட்டிக்கொள்வதில் ஆர்வமுள்ள அந்த ‘வீடியோ அதிகாரி, பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக்! ‘மனோ’ தைரியமுள்ள அதிகாரியும் அப்படித் தான்!

சூலூர் காவல் நிலையத்தில் ‘வீடியோ அதிகாரி’ பணிபுரிந்தபோது, கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவனும் மனைவியும் வந்தார்கள். பெண்ணின் அழகில் கிறங்கிய வீடியோ அதிகாரி, மிரட்டியே அவளுடைய கணவனை காவல் நிலையத்திலிருந்து ஓடச் செய்தார். அந்தப் பெண்ணிடம் "நானும் நீயும் ஒரே சாதி. உனக்கு சகலமுமா இனி நான் இருக்கிறேன்' என்று தன் சாதியை மறைத்துப் பேசி ’திருமணம்’ செய்துகொண்டார்.

சனி, ஞாயிறுகளில், ஆனைமலை எஸ்.ஆர்.ரிசார்ட்ஸ் க்ரீன் ஹோமிலும், பொள்ளாச்சி ஃபார்ம் ஹவுஸிலும் நண்பர்கள் சகிதமாக இளம்பெண்களுடன் அவர் கூத்தடிப்பதெல்லாம் வழக்கமாக நடப்பது தான். அப்படி நடந்த போது தான், திருநாவுக்கரசு கூட்டாளிகளின் வீடியோகேமராவில் இவர் சிக்கினார்.

வீடியோ அதிகாரி இப்படியென்றால், ‘மனோ' தைரியமுள்ள அதிகாரியோ, கஞ்சா, பிராத்தல் புரோக்கர்களை கைவசம் வைத்துக் கொண்டு, அழகு மைனாக்களை அனுபவிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டவர். அப்படித்தான், கஞ்சா விற்பவனின் மனைவிக்கு ‘பிராக்கெட்’ போட்டுவிட்டார். அடுத்து இவர், இயற்கைசார் இடங்களில் இயங்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்குச் செல்லவிருக்கிறார்.

கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் அழகிகளிடம் வசூல் என, அந்த வரும்படி மூலம், இன்னும் சில புல்லட் பைக்குகள், கார்களை வாங்கிக் குவித்துவிடும் திட்டத்தில் இருப்பதாக, அவரே உளறிக்கொண்டிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே விளக்கம் கேட்டோம்.

"நாதன்'’ஆனவர் நம்மி டம், நான் வீடியோக்களில் இருந்தேனா? யாரு இப்படியெல்லாம் சொல்லுறது? கடைசில என்னையும் பொள்ளாச்சி பாலியல் வழக்குல சேர்த்துட்டாங்களா? சொல்லுறது இருக்கட்டும். அதுக்கு ஆதாரம் வேணும்ல.

எனக்கு மேல எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. அப்புறம் சி.பி.சி.ஐ.டி. மேலதிகாரிகளெல்லாம் இருக்காங்க. சாதாரண இன்ஸ்பெக்டர் போஸ்ட்ல நான் இருக்கேன். என்னை வாட்ச் பண்ணுறதுக்குன்னே ஆளுங்க இருக்கிறப்ப எப்படிங்க நான் தப்பு பண்ணுவேன்?'' என்று விவரமாகப் பேசினார்.

"மனோ'கரமான அதிகாரியைத் தொடர்புகொண்ட போது, "நான் ரொம்ப நேர்மையா இருக்கிறதுனால தான், இங்கே எஸ்.ஐ.யா போட்டிருக்காங்க. பெரியநாயக்கன்பாளையத்துல இருக்கும் போது காட்டுக்கு வேட்டையாடப் போனேனா? இதெல்லாம் எனக்கு வேண்டாதவங்க கிளப்பி விடறது'' என்று ஒரே போடாகப் போட்டார். அதுதான் பணம் வாங்கிக் கொண்டு வீடியோ ஆதாரங்களை அழித்துவிட்டார்களே! உலகமே உற்று நோக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மறைக்கப்பட்ட விவகாரங்கள் இன்னும் இருக்கு...!

 

 

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.