இந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் டீக்கடை அரசியல் பிரதான இடத்தைப் பிடித்து வருகிறது. எடப்பாடி தனது பிரச்சாரத்தின் போது திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் உட்கார்ந்து, டீ குடித்து மக்களைக் கவரும் முயற்சியில் இறங்கினார். ஏற்கனவே அடுத்த ஆட்சி நாங்களே என்று பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலின், டீக்கடைகளுக்குச் சென்று டீ குடிப்பதும், ஏழை குழந்தையைக் கொஞ்சித் தூக்கி முத்தமிடுவதுமாக அதிரடி கிளப்பிவருகிறார். இவர்கள் மட்டுமல்லாது, தி.மு.க., அ.தி.மு.க.வில் இருக்கும் முன்னாள் இந்நாள் அமைச்சர்களும் தேர்தல் நெருங்க நெருங்க, திடீர் திடீரென டீக்கடை அரசியலைக் கையில் எடுத்து, லோக்கல் அரசியல் புள்ளிகளோடு தெருத்தெருவாக வலம் வரத்தொடங்கிவிட்டார்கள்.
இது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று அவர்களின் மன நிலையை அறிய முயன்றோம். அப்போது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள எம். குன்னத்தூர் டீக்கடை ஒன்றில் நாம் சந்தித்த அஜித்குமார், "வழக்கமா கார் கண்ணாடியை உயர்த்திக்கொண்டு போகிறவர்கள் இப்போது டீ கடைக்கு வந்து உட்காருவது என்பது ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான். தேர்தல் முடிந்த பிறகு இவர்கள் பதவிக்கு வந்து விட்டால் அவர்களை சந்திப்பது மிகவும் கடினம்'' என்கிறார் புன்னகையோடு.
இன்னொரு கடையில் நாம் சந்தித்த சங்கரோ, "இந்த தேர்தல் கால மேஜிக்கை எல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். இதெல்லாம் சும்மா டிராமா'' என்றபடி சிரிக்கிறார்.
டீக்கடைக்காரரான முருகன் நம்மிடம், "தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் டீக்கடையை நோக்கி வருவாங்க. நலம் விசாரிப்பாங்க. கை கொடுப்பாங்க. தோளில் கை போடுவாங்க. இதையெல்லாம் பார்க்கும் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்கள், முகம் மலர்ந்து பூரித்துப் போவோம். அந்த மயக்கத்தில் அவர்களுக்கு ஓட்டும் போடுவோம். அவர்கள் பதவிக்கு வந்த பிறகு பொது நலப் பிரச்சனைகளுக்காக தேடிப்போனாக் கூட வீட்டில் இருந்துகொண்டே இல்லைன்னு சொல்லச் சொல்வாங்க. என்ன பண்றது. தெரிஞ்சேதான் ஏமாறுறோம்'' என்கிறார் சிந்தனையோடு.
ஓய்வுபெற்ற ஆசிரியர் காசிராஜன் நம்மிடம், "காலங்காலமாக ஓட்டு கேட்டு வரும்போது கும்பிடு போடுவதோடு, மக்கள் காலில் விழுந்தும் அரசியல்வாதிகள் ஓட்டுகேட்கறாங்க. வெற்றி பெற்ற பிறகு, அதே மக்களைக் கேவலமாப் பார்க்கறாங்க. அதே நேரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கே ஏகப்பட்ட பணிச்சுமை இருக்கும் போது, அதைவிட எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்குமேன்னு நம்மையே நாம் சமாதானப்படுத்திக்க வேண்டியிருக்கு. ஆனால் இவங்க எல்லாம், மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டால் அதுவே போதும்'' என்கிறார் நிதானமாக.
"பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாதாரணமான நாட்களில் டீக்கடை ஃபார்முலாவை செய்து காட்டினால்தான் எங்களைப் போன்ற சாதாரண மக்கள் அவங்களை நம்புவார்கள். வெற்றிபெற்ற பிறகோ அல்லது தோல்வி அடைந்த பிறகோ மக்களைத் தேடி டீ கடைகளுக்கு அடிக்கடி அவங்க வந்தால்... மக்களின் நம்பிக்கையைப் பெறமுடி யும்'' இது சங்கரின் தீர்க்கமான கருத்து.
சட்டப் பஞ்சாயத்து இயக்க பிரமுகர் ராமநத்தம் கோவிந்தசாமியையும் நாம் சந்தித்தோம். அவர் நம்மிடம், "காய்கறிகள் மளிகைச் சாமான்கள் எல்லாம் தினசரி விலை ஏறிக்கொண்டே போகுது. அதைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோ ஆட்சியாளர்களும் நினைக்கலை. ஆளத் துடிக்கும் அரசியல்வாதிகளும் அதைக் கண்டிக்கத் துடிக்கலை. விவசாயிகளைக் காப்பாற்ற யாரும் முன்வரலை. ஆனால் இப்ப இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோருமே சினிமா நடிகர்களைப் போல் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தங்களோட கட்சி முன்னோடிகளைக் கூட மேடை ஏத்தறது இல்லை. ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகக் கோடி கோடியாக பணத்தை வாரி இறைக்குது. கொரோனாவால் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு சிலரைத் தவிர மத்தவங்களால உதவ முடியலை'' என்றார் காட்டமாகவே.
பெயர் சொல்ல விரும்பாத அந்த இளைஞர் "12-ஆம் தேதி ஸ்டாலினின் பிரச்சாரக் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிராமப்புறங்களில் இருந்து டாட்டா ஏ.சி வாகனங்கள் மூலம் மக்களை கொண்டு வந்து குவிச்சாங்க. அப்படி வாகனங்களில் வந்த பெண்கள் தங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கலைன்னும் வேலையை விட்டுவிட்டு வந்த தங்களுக்கு பணமும் தரலைன்னும் பகிரங்கமாக குற்றம் சாட்டினாங்க. அதெல்லாம் சமூக ஊடகங்கள்ல வீடியோ காட்சிகளா பரவிக்கிட்டு இருக்கு. இந்த நிலவரம் அந்தக் கட்சியின் தலைமையோட கவனத்துக்குப் போனதாகத் தெரியலை'’என்கிறார்.
தேர்தல் நேரத்தில் நடிகர்களாக மாறும் அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டு வைத்திருக்கிறார்கள் என்பதைப் பரவலாகவே நம்மால் பார்க்க முடிகிறது.