தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி எனக் களத்தில் இறங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தவர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, 'வில்லேஜ் குக்கிங் சேனல்' எனும் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடியது பெரும் வரவேற்பைப் பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் சின்னவீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, யூட்யூபில் பிரபலமான 'வில்லேஜ் குக்கிங் சேனல்' சமையல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, அவர்களுடன் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். பின்னர் குழுவினரோடு சேர்ந்து அவரும் உற்சாகமாக சமையலில் இறங்கி அவர்களுக்கு உதவிகளைச் செய்தார். இதுகுறித்து அந்த 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினரிடம் நேர்காணல் எடுத்தோம்.
ராகுல் காந்தி எவ்வாறு உங்களிடம் பழகினார்?
ராகுல் ஐயா வந்தது ஒரு கோட்டையைப் பிடித்த மாதிரியான சந்தோசம் எனக்குள். மிகவும் ஆனந்தமாக இருந்தது. அவர் ஒரு குழந்தையைப் போலப் பழகினார். எங்களுக்குக் கைகொடுத்தார். 'நல்லா இருக்கிங்களா?' என விசாரித்தார்.
ராகுல் காந்தி ஒரு தேசியத் தலைவர், அவரிடம் ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தீர்களா?
வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. சக நண்பரைப் போலத்தான் அவர் நடந்துகொண்டார். என் பேரனைப் போலவே நடந்துகொண்டார்.
ராகுல் காந்தி எப்படி உங்கள் நிகழ்ச்சிக்கு வந்தார்?
எங்கள் சமையலை சாப்பிட நிறைய பேருக்கு ஆசை இருக்கும். அப்படித்தான் ராகுல் அண்ணனும் எங்கள் நிகழ்ச்சிக்கு வந்தார். மிகப் பெரிய தலைவர் வரப்போகிறார் எனப் பரபரப்பாக இருந்தோம். ஆனால், அவர் வந்தவுடன் ஃபிரண்ட்லி ஆக கட்டிப்பிடித்து அன்பாக நடந்துகொண்டார். அதில், எங்களின் பதட்டம் பறந்துபோய்விட்டது. பிறகு, "நான் பல நிகழ்சிகளால், தாமதமாக வந்துவிட்டேன். மன்னிக்கவும். இப்போது என்ன செய்கிறீர்கள்?" என்றார். பிரியாணி செய்துவிட்டோம் என்றோம். உடனே, "நான் ரைய்த்தா செய்ய உதவுகிறேன்" என்றார். அப்போது, 'ONION-க்கு தமிழில் என்ன' எனக் கேட்டார். 'வெங்காயம்' என்றோம். உடனே, எங்க தாத்தா மாதிரி 'வெங்காயம்' எனச் சத்தமாகச் சொன்னார். ஆஹா, ராகுல்காந்தி அண்ணனும் நம்ம சேனல பாத்திருங்காங்க என அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. பிறகு, சாப்பிட்ட உடனேயே செல்லாமல் எங்களுடன் அமர்ந்து பேசிவிட்டுத்தான் சென்றார்.
ராகுல் வந்ததை உங்கள் ஊர் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
ராகுல் அண்ணன் வந்ததன் மூலம், எங்கள் பகுதி மக்களுக்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அதைப்போலவே, எங்களது சப்ஸ்க்ரைபர்களும் எங்களைப் பாராட்டி வருகின்றனர். எங்களைப் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.
எப்படி ராகுல் காந்தியுடன் தொடர்பு ஏற்பட்டது?
எங்களது யூ-டியூப் சேனலைப் பார்த்துவிட்டு, வாரத்திற்கு இரண்டு குடும்பம் எங்களது வீட்டிற்கே நேரடியாக வந்து செல்வார்கள். அதன்படி, ஜோதிமணி அக்காவின் தம்பியும் ஒருநாள் வந்திருந்தார். அவர்மூலம், ஜோதிமணி அக்காவும் நேரில் வந்து எங்களைப் பார்த்துப் பாராட்டினார். பிறகு ராகுல் காந்தி அவர்களிடம் அறிமுகம் செய்துவைப்பதாகக் கூறினார். நாங்கள் விளையாட்டாக, 'ராகுல் அண்ணனை சமைக்கக் கூப்பிட்டடால் வருவாங்களா அக்கா?' எனக் கேட்டோம். அவரும் உடனே, அதெல்லாம் வருவார் தம்பி என்றார். அப்படி ராகுல் அண்ணனின் கரூர் வருகையின் போது இந்தச் சந்திப்பு சாத்தியப்பட்டது.
ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டாரா?
அப்படிக் கேட்கவில்லை. ஆனால், 'உங்களது அடுத்த திட்டம் என்ன?' எனக் கேட்டார். அப்போது, நாங்கள் இந்தச் சேனலை ஆரம்பிப்பதற்கு முன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிறகு, யூ-டியூப் சேனல் தொடங்கிய பிறகு அந்த நிர்ப்பந்தம் இல்லாமல்போனது. இருந்தாலும், 'எங்களது சமையலை உலகம் முழுதும் கொண்டு போய்க் காட்ட விரும்புகிறோம்' என்று சொன்னோம். அப்போது, 'என்ன நாட்டிற்குச் செல்ல வேண்டும்?' எனக் கேட்டார். நாங்கள், 'அமெரிக்கா செல்ல வேண்டும்' என்றோம். இப்போது, நாங்கள் செல்வதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்துவிட்டார். பாஸ்போர்ட் எடுக்கச் சொன்னார்கள். நாங்கள் தான் அமெரிக்கா செல்ல இனி தயாராக வேண்டும் என்றனர் நெகிழ்ச்சியாக.