திராவிட இயக்கக் கவிஞர்களில் பாரதிதாசன், சுரதா ஆகியோர் வரிசையில், இடம்பெற்றவர் புலவர் பொன்னிவளவன். இயற்பெயர் நவநீதகிருஷ்ணன். கவியரசர் என்றும் போற்றப்பட்டவர்.
‘மாதவிக் காப்பியம்’, ‘பொன்னிவளவன் கவிதைகள்’ உள்ளிட்ட பல நூல்களைப் படைத்த புலவர், சுரதாவைத் தன் கவிதை ஆசானாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார். குடந்தையருகே உள்ள பாபநசம் பகுதியைச் சேர்ந்த பொன்னிவளவன், தஞ்சை புலவர் கல்லூரியில் பயின்றவர். சென்னை வண்ணாரப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய புலவர், தண்டையார்பேட்டையில் வசித்துவந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார்.
“என் மாணவப் பருவத்தில், கலைஞரின் வாழ்த்துரையோடும், பேராசிரியர் க. அன்பழகனின் அணிந்துரையோடும் உருவான என் முதல் படைப்பான ‘கற்பனைச் சுவடுகள்’ நூலை, 1983இல் அவர்தான் திருவாரூரில் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். அதன்பின் திருவாரூர், திருக்குவளைப் பகுதிகளில் நடந்த ஒருசில நிகழ்சிகளுக்கும் அவரை நான் அழைத்தேன். அவரோடு நிகழ்ந்த அனுபவங்கள், மறக்க இயலாதவை.
திமுக இலக்கிய அணியின் தலைவராக அவர் இருந்த நேரத்தில், அப்போது வழக்கமாக ஜூன் 2இல் நடக்கும் கலைஞர் பிறந்தநாள் கவியரங்கில், கலைவாணர் அரங்கில்... கலைஞர் முன்னிலையில், வைரமுத்து, டி. ராஜேந்தர், குடியரசு, சிங்காரசடையப்பன் உள்ளிட்ட கவிஞர் பெருமக்கள் சிலரோடு, கவிதை பாடும் பெரும்பேறினை நான் அவரால்தான் பெற்றேன்.
அண்ணாவைப் போன்ற கரகர காந்தக் குரல் - ஈர்ப்பான உரைப்பாங்கு - இன, மொழி உணர்வுடன் கூடிய உணர்ச்சிப் பேராற்றல் - முறுக்கிய மீசைக்குக் கீழே பளீரிடும் வெள்ளைப் புன்னகை - உயரம் குறைந்த கருநிறத் திருமேனி - தோளின் இருபுறமும் காலைத் தொங்கவிட்டு மார்பை அலங்கரிக்கும் வண்ணப் பொன்னாடை - பண்பார்ந்த நடத்தை - மரியாதைத் தோற்றம் - சற்றே கோபம் வீசும் பொடிவாடை - இதுதான் அவரது அடையாளம்.
நம் காலத்தில் வாழ்ந்த அந்த மாகவிஞரை, தமிழ்கூறு நல்லுலகம் முழுதாக அறியவில்லையே என்ற கவலை நெஞ்சில் எழுகிறது. இன்று அவருடைய கவிதைகளையோ, அவரைப் பற்றிய செய்திகளையோ, அவர் புகைப்படத்தையோ இணையத்தில் தேடினால் ஏமாற்றம்தான் விஞ்சுகிறது.
அவரைக் குறித்த முதன்மைச் செய்தி ஒன்றையும் இங்கே பகிர விரும்புகிறேன். 65களில் தமிழகத்தைத் தணல் காடாக்கிய, திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, புலவரும் பங்கேற்றார். தூத்துக்குடி போஸ் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் களமிறங்கிய அந்தத் திராவிடக் கவிஞரைக் கைதுசெய்து, அங்கிருந்த நீதிமன்றத்தில் நிறுத்தினர் காவல்துறையினர். குற்றக் கூண்டில் ஏற்றப்பட்ட புலவர், தனது வாக்குமூலத்தை ‘எண் சீர் விருத்தத்திலேயே’ கொடுத்து, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். உலகிலேயே கவிதையால் வாக்குமூலம் கொடுத்த முதல் கவிஞர் அவர்தான். அவருடைய சாதனை இதுவரை இன்னும் எவராலும் முறியடிக்கப்படவில்லை.
அவர் கொடுத்த வாக்குமூலக் கவிதை இதுதான்.
'மதிப்புமிகு நடுவர்க்கு வணக்கம்! நீதி
மன்றத்தில் நிற்கின்றேன் குற்றக் கூண்டில்!
கொதிப்போடு மொழிப்பிரிவைக் கொளுத்தி விட்டேன்!
கொழுத்துப்போய் அல்ல!இதைக் குற்றம் என்று
விதிப்பீர்கள் தண்டனையை! ஏற்றுக் கொள்வோம்!
வீண்வாதம் நான்செய்ய மாட்டேன்! இந்தி
எதிர்ப்புணர்வில் மொழிப்பிரிவை எரித்த செய்கை
எனதுமன சாட்சிக்கோ குற்ற மல்ல!
முன்னேற்றக் கழகத்து கவிஞன் நானோ
முத்தமிழைக் கற்றுணர்ந்த புலவன்; ரொம்பச்
சின்னவன்தான்! இருந்தாலும் பிறர்ம திக்கும்
சீர்வாய்ந்த பேச்சாளன்! இந்தி தன்னை
என்னென்னவோ விதத்திலும் எதிர்த்துப் பார்த்தேன்!
எழுதிப்பார்த் தேன்!பேசிப் பார்த்தேன் ! இன்னும்
என்னவழி! ஆட்சிமொழிச் சட்டம் தன்னை
எரிப்பதுதான் வழிஎன்று எரித்தும் பார்த்தேன் !
தயங்கவில்லை; மயங்கவில்லை; இந்த நாட்டில்
தமிழ்படித்தோர் இந்திதனை எதிர்ப்ப தற்கு
பயங்கொண்டு ஒதுங்கிவிட்டால் இனிக்கும் வெல்லப்
பாகுநிகர் தமிழ்கெட்டுச் செத்துப் போகும்!
நயங்கெட்ட இந்திமொழி வந்து குந்தி
நாட்டாண்மை செய்திடுமே! அதனால் நன்றாய்
இயங்குகிற இயக்கத்தில் உள்ள தொண்டன்
எரித்திட்டேன் ஆட்சிமொழிச் சட்டம் தன்னை!
சாட்சிமொழி பலசொல்லிக் காட்டி நீங்கள்
சட்டத்தை நினைவூட்டிச் சுமையைக் கூட்டி
ஆட்சிமொழிச் சட்டத்தை எரித்த தற்கு
'அளித்திடுக நீ வாக்கு மூலம் !' என்றீர்.
சாட்சியென்ன? சாட்சியென்ன? நீங்கள் சொல்லும்
சட்டமென்ன? ஆட்சியென்ன? எனது - நெஞ்சின்
சாட்சிக்கோ நான்குற்ற வாளி யல்ல!
சட்டம் அதைக் குற்றமென்றால் மறுக்க மாட்டேன்!
அழியாமல் வளர்கிறது எங்கள் கட்சி!
அதனைநான் எப்போதும் நினைத்தி ருப்பேன்!
கமழ்கின்றார் எனதுமன நிறைவாய் எங்கள்
கற்கண்டு தனித்தலைவர் அறிஞர் அண்ணா!
தமிழ் காக்க எரிந்தவனாம் சின்னச் சாமி
தன்னையும்நான் மனநினைவில் உலவ வைப்பேன்!
தமிழ்காக்கும் தொண்டனுக்கு இந்த நாட்டில்
தண்டனைதான் பரிசென்றால் ஏற்றுக் கொள்வேன்!'
புலவர் பொன்னிவளவனின் உணர்ச்சித் தமிழை உள்ளன்போடு வணங்குகின்றேன்.