மீடியாக்களும் சோஷியல் மீடியாக்களும் எப்போது கன்ட்ன்ட் கிடைக்கும் என ஆலாய்ப் பறக்கின்றன. அவற்றுக்கு அரசியல்வாதிகள் அடிக்கடி தீனி போடுகிறார்கள். இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் விதிவிலக்கல்ல.
பழமொழிகளை மாற்றிச் சொன்ன ஸ்டாலின், சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என அதிர வைத்த எடப்பாடி பழனிசாமி, தெர்மோகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ, சோப்பு நுரை புகழ் கருப்பணன், ஆமைக்கறி சீமான் எனப் பலரும் கன்டன்ட் தந்தாலும் பஞ்சமே இல்லாமல் கன்டன்ட் தருபவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டுப் போடும்படி அவர் சொன்னது அதிர்ச்சி கலந்த சிரிப்பை வாக்காளர்களிடம் ஏற்படுத்தியது. "மாங்காய், மாம்பழம் ஆகும், அமைச்சர் வாயால் அது ஆப்பிளாகிவிட்டதே' என சிரித்தனர். வேட்பாளர் ஜோதி முத்துவையும் சோலை முத்துவாக்கி விட்டார் அமைச்சர்.
எம்.ஜி.ஆரைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்' என்றும், ‘ஜெயலலிதா கொள்ளையடித்து வைத்த பணத்தை சசிகலா எடுத்துக்கொண்டார்' என்றும் அ.தி.மு.க. மேடைகளிலேயே பேசி அதிர வைக்கவும் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி என்பதற்கு பதில், நரசிம்மராவ், மன்மோகன் சிங் என மாற்றி மாற்றி பெயர்களை உச்சரித்ததும் நகைப்புக்கிடமானது.
நத்தம் தொகுதிக்குட்பட்ட கணவாய்ப்பட்டி, முளையூர் பகுதியில் நடந்த மினி கிளினிக் திறப்பு விழாவில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுத்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுகிறார். அவங்கப்பா கொடுத்திருந்தால் புத்தர் வாரிசு, இயேசு வாரிசு என்றிருப்பார். நாங்கள் கொடுத்தால், இயேசுவை சுட்ட கோட்சே வாரிசா?'' என்று பகீரடைய வைத்தார். "காந்தியைத்தானே கோட்சே சுட்டார். இயேசுவையுமா?” என்று சொந்தக் கட்சிக்காரர்களே புலம்பினர்.
அதையடுத்து, இன்னொரு மேடையில் பேசும்போது, "திருக்குறளை எழுதிய ஔவையார்'’ என உளறினார். மேடையில் இருந்தவர்கள் சிரிப்பிற்கிடையே, ‘திருவள்ளுவர்’ என மெலிதாக குரல் கொடுக்க, “இரண்டு பேரும்தான் எழுதினாங்க'' என்று மறுபடியும் சிரிக்க வைத்தார் அமைச்சர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விழா மேடையில் சமீபத்தில் பேசிய அமைச்சர், "பையில் இருக்கிற அரிசி, வெல்லம் எல்லாம் வீட்டில் உள்ள பெண்கள் கிட்ட போயிடும். பணத்தை ஆண்கள் எடுத்துக்கிட்டு அதை டாஸ்மாக்கில் செலவழிச்சிடுவாங்க. அது அரசாங்கத்துக்கே திரும்பி வந்திடும்'' என்று ஒரு போடு போட்டார்.
அமைச்சர் பேச்சைக் கேட்டு அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் அதிர்ந்தனர். "ஒவ்வொரு மீட்டிங்லேயும் மீம்ஸ்க்கு கன்டன்ட் தருகிறோரே, இவர் திண்டுக்கல் சீனிவாசனா? காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசனா?'' என்றபடி கலைந்தனர்.
- கீரன், சக்தி