சேலத்தில், வஉசி மார்க்கெட் கடைகளை டெண்டர் விட்டதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி விஐபிகள் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை பலரும் 'கட்டிங்' வாங்கிய விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.
சேலம் சின்னக்கடை வீதியில் பழமையான வஉசி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு, புதிதாக கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, சேலம் போஸ் மைதானத்திற்கு தற்காலிகமாக வஉசி மார்க்கெட் மாற்றப்பட்டது. பழைய வஉசி பூ மார்க்கெட்டில் மொத்தம் 204 கடைகள் இயங்கி வந்ததால், அதே எண்ணிக்கையிலான கடைகள் தற்காலிக வஉசி மார்க்கெட்டிலும் கட்டப்பட்டன. ஒவ்வொரு கடைக்கும் 10க்கு 6.5 சதுர அடிகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், ஆளுங்கட்சி எம்எல்ஏ சக்திவேல், அளித்த அழுத்தத்தின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் கடைகளின் எண்ணிக்கையை 326 ஆக அதிகரித்தது. அதாவது, 122 கடைகள் புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்காக, ஒவ்வொரு கடையின் பரப்பளவும் 10க்கு 4 மற்றும் 10க்கு 5 சதுர அடியாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, வஉசி நாளங்காடிக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் என்கிற லோகநாதன் (57), முருகன் ஆகியோர் அதிமுக எம்எல்ஏ சக்திவேல் ஆதரவுடன் ஒப்பந்தத்தில் களமிறங்கினர்.
நான்கு முனை போட்டிக்கு இடையே, சக்திவேல் எம்.எல்.ஏ. ஆதரவுடன் களமிறங்கிய லோகேஷ் தரப்பைச் சேர்ந்த முருகனுக்கு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. அவர், வாரத்திற்கு 12 லட்சத்து 929 ரூபாய்க்கு ஏலம் கோரியிருந்தார். அதாவது, ஆண்டுக்கு 6 கோடியே 24 லட்சத்து 48300 ரூபாய் மாநகராட்சிக்கு ஏலத்தொகை செலுத்த வேண்டும். இந்த ஒப்பந்தம், 16.8.2020 முதல் 15.8.2021 வரை ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.
இதற்கு முன்பு பழைய வஉசி மார்க்கெட் ஒப்பந்தம் ஆண்டுக்கு 1.90 கோடிக்கு மேல் ஏலம் போகாத நிலையில், நடப்பு ஆண்டில் வரலாறு காணாத வகையில் ஏலம் போனதில் மாநகராட்சிக்கும் பரம திருப்திதான். ஆனால் குத்தகைதாரர் தரப்பு, அதிக தொகைக்கு ஏலம் முடிவானதால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மார்க்கெட்டுக்கு வரும் பூ, காய்கறி, பழக்கடைக்காரர்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதன் மூலம் மட்டுமே லாபம் சம்பாதித்து விட முடியாது என்பதால், கடைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்.
பழைய வஉசி மார்க்கெட்டில் கடை வைத்திருந்த 204 கடைக்காரர்களுக்கும் புதிய இடத்தில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்படி, அவர்களுக்கு தற்காலிக மார்க்கெட்டிலும் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த 204 கடைகள் போக, எஞ்சியுள்ள 122 கடைகளை தலா 6 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பகுடியாக விற்பனை செய்துவிட்டாலே போட்ட காசை எடுத்து விடலாம் என லோகேஷ் தரப்பினர் கணக்குப் போட்டனர்.
இங்குதான் குத்தகைதாரர்கள் தரப்புக்கு சிக்கல் ஆரம்பமானது. வரலாறு காணாத அளவுக்கு ஏலம் போனதை அறிந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களின் கண்களை ரொம்பவே உறுத்தத் தொடங்கியது. லோகேஷிடம் ஆளாளுக்கு பணமாகவோ, கடைகளாகவோ தங்களுக்கு ஒதுக்கக் கேட்டு மொய்க்கத் தொடங்கினர். ஆதரவுக்கரம் நீட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேலும், கூடுதல் கடைகளை ஒதுக்கும்படி குடைச்சல் கொடுத்தார்.
இந்த கூத்துகள் ஒருபுறம் இருக்க, கடைக்காரர்களிடம் போலி ரசீது போட்டு அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரின் பேரில் முருகனுக்கு வழங்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம், கடந்த நவ.5- ஆம் தேதி திடீரென்று ரத்து செய்தது. ஆனால் அதற்கு மறுநாளே லோகேஷ் உயர்நீதிமன்றத்தில் அந்த உத்தரவுக்கு தடை ஆணை பெற்றார்.
வஉசி மார்க்கெட் டெண்டர் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து லோகேஷிடம் கேட்டோம். ''வஉசி மார்க்கெட் டெண்டரில் இந்த முறை கடும் போட்டி இருந்தது. ஒப்பந்தப்புள்ளி கணிசமாக உயர்ந்தது. இதனால் கடைகளை விற்று அதன்மூலம் இழப்பை சரிக்கட்டலாம் என்ற திட்டத்துடன் பூ மார்க்கெட் சங்கத் தலைவர் பூக்கடை ராஜூ, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேல் ஆகியோர் ஆதரவுடன் என் உறவினர் முருகன் மூலம் டெண்டரில் கலந்து கொண்டோம்.
அதிகபட்ச விலைப்புள்ளி கோரியதன் பேரில் எங்களுக்கு டெண்டர் முடிவானது. மாநகராட்சி நிபந்தனைகளின்படி பழைய கடைக்காரர்கள் 204 பேருக்கு கடைகளை ஒதுக்கி விட்டோம். அதன்பிறகு, எஞ்சியிருந்த 122 கடைகளில் அதிமுக எம்எல்ஏ சக்திவேல், ஆளுங்கட்சி பிரமுகர்களை 'கவனிக்க' வேண்டும் என்று கூறி 46 கடைகளை எடுத்துக் கொண்டார். மீதமுள்ள 76 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு 22 கடைகள், தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், தி.மு.க. எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோருக்கு 'மரியாதை' செய்யும் வகையில் தலா 5 கடைகள் கொடுத்தோம். இதன்பிறகு எங்களுக்கு 44 கடைகள் கிடைத்தன.
இந்நிலையில், வஉசி மார்க்கெட் சங்கத் தலைவரான பூக்கடை ராஜூ, திடீரென்று எனக்கு எதிராக திரும்பினார். அவர் தன் குடும்பத்தினருக்கு 9 கடைகளை ரிசர்வ் செய்து கொண்டதோடு, கடைக்காரர்களிடம் பகுடி வசூலித்துக் கொண்டு பேசிய ஒப்பந்தப்படி எனக்கு பணம் தராமல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து பூக்கடை ராஜூ மீது சேலம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். தவிர, பாமக நிர்வாகிகள் தரப்பிலும் குடைச்சல் அதிகமானதால், அக்கட்சியின் முக்கிய பிரமுகருக்கு 7 லட்சம் ரூபாய் மரியாதை செய்தோம்,'' என்றார் லோகேஷ்.
அப்போது இருந்த சேலம் மாநகராட்சி கமிஷனரும், தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலருமான சதீஷ்க்கு 5 கடைகள், அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் ராம்மோகனுக்கு 1 கடை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் குத்தகைதாரர் தரப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. அப்போது அம்மாபேட்டை உதவி வருவாய் அலுவலராக இருந்த முருகேசன், முன்னாள் ஆணையர் சதீஷின் உதவியாளர் சதீஸ் ஆகியோரையும் குத்தகைதாரர் தரப்பு சில லகரங்களை ரொக்கமாக கொடுத்து கவனித்திருக்கிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேல் லோகேஷிடம் இருந்து பெற்ற 46 கடைகளில் முதல்வர் அலுவலகத்திற்கு 5 கடைகளும், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தரப்புக்கு 5 கடைகளும் கொடுத்ததாகவும் லோகேஷ் தரப்பினர் கூறுகின்றனர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. சக்திவேலிடம் கேட்டபோது, ''வஉசி மார்க்கெட்டை டெண்டர் எடுப்பதில் போட்டி நிலவியது. அப்போது லோகேஷ் என்னிடம் சில உதவிகளைக் கேட்டது உண்மை. ஆனால் அதற்காக அவரிடம் இருந்து நான் எனக்காகவோ பிறருக்காகவோ எந்த கடைகளையும் கேட்டு வாங்கவில்லை. அப்படி கொடுத்ததாக சொன்னால் என் முன்னால் வந்து சொல்லச் சொல்லுங்கள். அப்புறம் பார்க்கலாம்,'' என்று ஒரே போடாக போட்டார்.
வஉசி மார்க்கெட்டை, சங்கத்தின் பெயரால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பூக்கடை ராஜூ என்பவர், ''லோகேஷ், ஒண்ணாம் நம்பர் ஃபிராடுங்க. அவர் சேலம் மாநகராட்சிக்கு 45 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தார். அவர் ஐ.பி. கொடுத்தவர். அவர் வஉசி மார்க்கெட் டெண்டர் எடுக்க கடைக்காரர்களிடம் 1.80 கோடி ரூபாய் வசூலித்து கொடுத்து உதவினேன். கடந்த 107 நாள்களாக தினமும் 80 ஆயிரம் ரூபாய் சுங்கம் வசூலித்து இருக்கிறார்.
அந்தப் பணத்தை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறார்? அதுமட்டுமில்லாமல், சாலையோரம் உள்ள 150 பூ மாலை கடைக்காரர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் மிரட்டி வசூலித்திருக்கிறார். அவருக்கு, பண வெறி பிடித்து விட்டது. அவருக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறேன்,'' என்று கொந்தளித்தார்.
இந்த மார்க்கெட் டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் திடீரென்று போராட்டத்தில் குதித்தார். அதன்பிறகே டெண்டரை ரத்து செய்யும் அளவுக்கு விவகாரம் விசுவரூபம் எடுத்தது.
இது தொடர்பாக எஸ்.பார்த்திபனிடம் பேசினோம். ''அ.தி.மு.க. ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து சாக்பீஸில் கோடு போட்டு கடைகளின் பரப்பளவை குறைத்து விற்பனை செய்துள்ளனர். பூ வியாபாரிகள் என்ற பெயரில் சமூக விரோதிகள் அங்கே குடும்பம் நடத்தி வருகின்றனர். பூக்கடை ராஜூ, லோகேஷ், முருகன் ஆகியோருக்கு பூ மார்க்கெட்டை ஒன்றும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லை.
இவர்களுடன் அம்மாபேட்டை மண்டல உதவி கமிஷனர் ராம்மோகன், மாநகராட்சி முன்னாள் கமிஷனர் சதீஷ் ஆகிய அனைவருமே கூட்டு களவாணிகள்தான். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேலின் மிரட்டலுக்கு பயந்து அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். இப்போதைய டெண்டரை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறேன். அப்படி இருக்கும்போது நான் எதற்காக லோகேஷிடம் கடைகளை கேட்க வேண்டும்?,'' என்றார்.
அதேபோல தி.மு.க. எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ராஜேந்திரனும், ''குத்தகைதாரர்கள் தரப்பினரே வந்து 5 கடைகளை கொடுத்தனர். கட்சியை சேர்ந்த 5 ஏழை குடும்பத்தினருக்கு அந்த கடைகளை நடத்திக்கொள்ள கொடுத்துட்டோம்,'' என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
இவர்கள் ஒருபுறம் இருக்க, மாநகராட்சி முன்னாள் ஒப்பந்ததாரர்களுள் ஒருவரான சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த வரதராஜன், வஉசி மார்க்கெட் டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவு, உயர்நீதிமன்ற பதிவாளர், விஜிலன்ஸ் உள்ளிட்ட பலருக்கும் விரிவாக ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அவரிடமும் பேசினோம்.
''வஉசி மார்க்கெட் டெண்டர் விவகாரத்தில் முற்றிலும் ஊழலும், மாநகராட்சி நிர்வாகம் சீர்கேடுகளும் நடந்துள்ளன. லோகேஷ் என்பவர் சார்பில் அவருடைய பினாமி முருகன் என்பவர்தான் வஉசி மார்க்கெட்டை 6.26 கோடிக்கு டெண்டர் எடுத்திருக்கிறார். என்ன தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதோ, அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட 3 நாள்களுக்குள் முழு தொகையும் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் குத்தகை தொகை செலுத்தப்படவில்லை.
குத்தகைதாரர், ஒப்பந்த தொகைக்கு தான் தகுதியானவர்தான் என்பதை நிரூபிக்க சொத்து சால்வன்சி, வருமான வரி கணக்கு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். அவையும் தாக்கல் செய்யப்படவில்லை. குத்தகை ஒப்பந்த பத்திரத்தில் சாட்சிகள் இருவர் கையெழுத்திட வேண்டும். இதுவரை சாட்சிகளிடமும் கையெழுத்துப் பெறப்படவில்லை. அப்படியான குத்தகை ஒப்பந்தம் செல்லவே செல்லாது.
மாநகராட்சி விதிகளை மீறி, கடைக்காரர்களிடம் இங்கு 100 முதல் 500 ரூபாய் வரை சுங்கம் வசூலிக்கின்றனர். சுங்க கட்டண விவர பலகை விதிகளின்படி வைக்கப்படவில்லை. வஉசி மார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கடை ஒவ்வொன்றையும் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சட்ட விரோதமாக விற்பனை செய்து, 10 கோடி ரூபாய் சுருட்டி விட்டனர். மாநகராட்சி விதிகளின்படி சுங்கம் வசூலித்தால் வாரத்திற்கு 1.75 லட்சத்திற்கு மேல் வசூலாகாது. அப்படி இருக்கையில் வாரத்திற்கு 12 லட்சத்து 929 ரூபாய் குத்தகையை இறுதி செய்ததே விதிமீறல்தான்.
மாநகராட்சி முன்னாள் ஆணையர் சதீஷூம், அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் ராம் மோகனும் குத்தகைதாரர்களுக்கு ஆதரவாக விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,'' என்றார் வரதராஜன்.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடாசலம் தலையும் உருட்டப்பட்டதால் அவரிடமும் கேட்டோம். ''என்னால்தான் இந்த முறை டெண்டரில் போட்டியே உருவானது. எனக்கு குத்தகைதாரர்கள் தரப்பிலிருந்து கடைகளோ பணமோ கொடுத்ததாகச் சொன்னால் அதில் துளியும் உண்மை இல்லை,'' என்றார்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல உதவி கமிஷனர் ராம்மோகனிடம் கேட்டபோது, ''குத்தகைதாரர் முருகன் மற்றும் லோகேஷ் தரப்பினர் மாநகராட்சி விதிகளை மீறி வஉசி மார்க்கெட் வியாபாரிகளிடம் அதிகளவில் சுங்க கட்டணம் வசூலித்து உள்ளதாக புகார்கள் வந்தன. இது குறித்து முதல்வர் வரை புகார் சென்றதால், லோகேஷ் தரப்புக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்தோம். அவர்கள் பெற்ற தடை உத்தரவை ரத்து செய்யுமாறு மாநகராட்சி தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
கரோனா காலத்தில் வருவாய் இழந்து தவிக்கும் பூ, காய்கறி, பழ வியாபாரிகள், விவசாயிகளிடம் சுங்கம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர்களிடம் 'கட்டிங்' வாங்கிக் கொண்டு சேலம் மாநகராட்சியும், அரசும் வேடிக்கை பார்க்கிறது. மாதந்தோறும் சேலத்துக்கு விசிட் அடிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சுரண்டல் தெரியாமல் போனது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது என கண்ணீர் வடிக்கிறார்கள் பூக்கடைக்காரர்கள்.