Skip to main content

பாஜகவின் சித்து விளையாட்டு -வேல்முருகன் சந்தேகம்

Published on 16/02/2018 | Edited on 16/02/2018

காவிரியில் தமிழகத்திற்கு 264 டி.எம்.சி. நீர் கேட்ட நிலையில் 177.25 டி.எம்.சி. நீர் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 

velmurugan


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கூறியது:-

காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்பது தமிழர்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் ஒரு அநீதியான தீர்ப்பு. அதற்கு காரணம் ஏற்கனவே 205 டி.எம்.சி. நீர் வழக்க வேண்டும் என்ற இடைக்கால தீர்ப்பை, அதற்கு பிறகு குறைத்து 192 டி.எம்.சி.யாக வழங்கப்பட்டது. இப்போது 192 டி.எம்.சி.யும் குறைக்கப்பட்டு வெறும் 177.25 டி.எம்.சி. நீர் வழங்குவோம் என்று சொல்லியிருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லாதது.
 

ஏற்கனவே வல்லுனர் குழு கொண்டு ஆய்வு செய்தபோது, அந்தந்த நீர்பிடிப்பு விவசாய பகுதிகளாக கணக்கிட்டபோது தமிழ்நாட்டில் கிட்டதட்ட 25 லட்சம் ஏக்கர் விவசாய பகுதிகளாகவும், கர்நாடகத்தில் 6 லட்சம் ஏக்கர் விவசாய பகுதிகளாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன. 25 லட்சம் ஏக்கர் விவசாய பாசனம் கொண்ட கடைமடை பகுதி என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டிற்கு வெறும் 177.25 டி.எம்.சி. தண்ணீர் என்பதும், அதுவே வெறும் 6 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்கின்ற
கர்நாடகத்துக்கு 184.75 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி ஒரு நீதியான தீர்ப்பாக அமைந்திருக்க முடியும். இது ஒரு அநீதியான தீர்ப்பு. இயற்கைக்கு மாறான தீர்ப்பு. 

மொத்தம் 740 டி.எம்.சி. என்று நடுவர் மன்றம் கடந்த 2007ல் இறுதி தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் 740 டி.எம்.சி.யில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. என்றும், கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. என்றும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி. என்றும், புதுவைக்கு 7 டி.எம்.சி. என்றும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், கடலில் கலப்பதற்கும் 14 டி.எம்.சி. என்று நடுவர் மன்றமே தனது இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற சூழல் இருக்கிறபோது, அந்த தமிழகத்திற்கு வெறும் 177.25 டி.எம்.சி. தண்ணீர் என்பதும், கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. என்கிறபோது 184.75 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கப்படுகிறது என்பதும் கேரளாவுக்கும், புதுவைக்கும் மாற்றமில்லை என்று சொல்வது இது எந்த விதத்தில் நீதியான தீர்ப்பாகும். 

காவிரி கர்நாடகத்தில் 320 கி.மீ. பயணிக்கிறது. ஆனால் தமிழகத்தில் 416 கி.மீ. பயணிக்கிறது. மேலும் எல்லா விதத்திலும் காவிரியால் பாதிக்கப்படுவது தமிழகம். 30 ஏக்கராக இருந்து பின்னர் 25 லட்சமாக குறைந்து, அதற்கு பிறகு 16 லட்சமாக குறைந்து, தற்போது 11 லட்சமாக விவசாய உற்பத்தி நிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக வறண்ட பூமியாக ஆகிய காரணத்தினால் 600க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால், உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளால் தற்கொலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். 

இன்றைய தீர்ப்பு தமிழகத்திற்கு எந்த வகையிலும் பயனுள்ள தீர்ப்பு அல்ல. ஆகையால் தமிழக அரசு உடனடியாக அரசியல் சாசன அமர்வுக்கு இதனை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு எத்தனை ஏக்கர் பயிரிடுகிறது என்பதை கருத்தில் கொள்ளாமல், அதற்கு எத்தனை டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாமல், பெங்களுருவைவிட பெரிய மாநகரமான சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரத்தை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. 

ஒருவேளை மத்தியில் இருக்கும் பாஜக அரசு, கர்நாடாகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, இதில் ஏதாவது அரசியல் சித்து விளையாட்டை விளையாண்டிருக்குமோ என்ற அய்யமும் இந்த தீர்ப்பால் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கவில்லை. வஞ்சித்துவிட்டதாக நான் குற்றம் சாட்டுகிறேன். இவ்வாறு கூறினார்.