சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானைச்சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்திலுள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் வெளியிட்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில், வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவர பாராளுமன்றத்தில் வலியுறுத்துவது, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, ஜனநாயகத்திற்கு எதிரான சனாதன பாசிச சக்திகளை அகற்றுவது, தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் அனைத்து மொழிகள் நலன் பாதுகாப்பு, இந்திய மொழிகள் நல அமைச்சகம், வறுமைகோட்டின் உச்ச வரம்பினை உயர்த்துவது, நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வலியுறுத்துவது, விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்திட்டம், தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி, ஜிஎஸ்டி ஒழிப்பு, விவசாய கடன்கள் ரத்து, பொதுத்துறை நிறுவனங்களை காக்க நடவடிக்கை, சுங்க கட்டண நடைமுறைய ரத்து செய்வது, நீதித்துறை மற்றும் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு, அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமையை சட்டமாக்குவது, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்தல், தமிழை ஆட்சி மொழியாக்குவது, தமிழகத்திற்கு தனிக்கொடி உரிமை, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவது, சுற்றுசூழலை பாதுகாப்பது உள்ளிட்ட 48 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் மக்களவைக்கு போட்டியிடுகிறது. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலும் ஜனநாயக சக்திகளை ஒழிப்பதை எதிர்த்து போட்டியிடுகிறது. சாதி மத அடிப்படையில் சமூக பதற்றத்தை உருவாக்கி பாஜக வின் பாசிச அமைப்புகள் செயல்படுகிறது. இதனால் விசிக தேசிய அளவில் ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைக்க பெரும் முயற்சி எடுத்தது என்றார். இவருடன் கட்சியின் மாநில நிர்வாகிகள் பாவரசு, வன்னியரசு, மாவட்டசெயலாளர் அறவாழி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.