“என்னை மக்களவையில் பேசவிட்டு பாருங்கள். நிலநடுக்கத்தையே ஏற்படுத்துவேன்” என்று சில மாதங்களுக்கு முன் ராகுல்காந்தி சவால் விடுத்திருந்தார். தனது கேள்விகளுக்கு மோடியால் பதில் சொல்லவே முடியாது என்றும் கூறியிருந்தார். மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து ராகுல் பேசியபோது மக்களவை நிஜமாகவே அதிர்ந்ததை பார்க்க முடிந்தது.
2014 ஆம் ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 336 இடங்களில் வெற்றிபெற்றன. பாஜக மட்டுமே 282 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில்தான் போதுமான பெரும்பான்மை அரசுக்கு இருந்தாலும், கடந்த நான்காண்டு மோடி ஆட்சியில் மக்கள் சந்தித்த லாபநட்ட கணக்குகளை பட்டியலிடுவதற்கான வாய்ப்பாக, எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பி்ககையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கூட்டணிக் கட்சியாக இருந்த தெலுங்குதேசம் கட்சியே இந்த தீர்மானத்தை முதலில் கொண்டுவந்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் சபையை அதிரவிட்டார் என்பதே நிஜம். அவருடைய ஆவேசமான பேச்சு புதிய உச்சத்தை தொட்டது. நாடுமுழுவதும் புதிய ராகுலை பார்த்து ரசித்தார்கள். தனது கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசமுடியாதவர் மோடி என்று ராகுல் பேசியபோது பிரதமர் மோடியின் முகம் வாடிப்போயிருந்தது. நாட்டுக்கு காவலனாக இருப்போம் என்ற மோடி, சீனாவுடன் கூட்டாளியாகி இருக்கிறார் என்று கிண்டல் செய்தார் ராகுல்.
ரபேல் விமான கட்டுமானப் பணியை மோடிக்கு வேண்டிய முன் அனுபவமில்லாத தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதை ராகுல் கிழித்துத் தொங்கவிட்டார். கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்ற மோசடிப் பிரச்சாரத்தையும், அவரைப் பிரபலப்படுத்த சில நிறுவனங்கள் செய்த புரமோஷன் வேலைகளையும் புட்டுப்புட்டு வைத்தார்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து வெளிநாடுகளுக்கு டூர் அடிக்கும் மோடி, பெரிய நிறுவனங்களுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதையும் அம்பலப்படுத்தினார். மோடியையும் அரசாங்கத்தையும் நார்நாராக கிழித்துத் தொங்கவிட்ட ராகுல், மோடியைக் கட்டியணைத்து கைகுலுக்கி தன்னை ஒரு உண்மையான இந்தியன் என்று நிரூபித்தார்.
ராகுலின் பேச்சும் அவருடைய எதார்த்தமான நடவடிக்கையும் மக்களைக் கவர்ந்ததைக்கூட தாங்கமுடியாத பாஜக, அதை நடிப்பு என்று கேலிபேசியது. ஆனால், இந்தியாவுக்கு அடுத்த பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்பது உறுதியாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், வழக்கம்போல மோடி அதிகநேரம் பேசினாலும், அரைத்தமாவையே அரைத்தாரே தவிர, ராகுலின் குற்றச்சாட்டுகளை, திசைதிருப்புவதிலேயே குறியாக இருந்தார். வழக்கமான பொய்களையே அடுக்கினார். வளர்ச்சி என்ற வார்த்தையை விடாமல் உச்சரித்த மோடி காங்கிரஸை தாக்குவதற்கே முன்னுரிமை கொடுத்தார். ராகுல் கட்டிப்பிடித்து கைகுலுக்கியதை, தன்னை வெளியேற்ற அவர் அவசரப்படுவதாக திரித்துக் கூறி பாஜகவினரை சிரிக்க வைத்தார். மோடியின் பதில்கள் எதுவுமே பலனளிக்காமல், ராகுல் உலக அளவில் ட்ரெண்டாகிவிட்டார் என்பதே உண்மை.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களவையில் கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்பார்த்தபடியே தோல்வி அடைந்துள்ளது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றபோது பாஜக கூட்டணி பெற்றிருந்த 336 உறுப்பினர்களையும், கூட்டணிக் கட்சிகளையும் தக்கவைக்க முடியவில்லை என்ற உண்மை வெளிப்பட்டது. ரெய்ட் அச்சுறுத்தல் மூலமாக அதிமுகவின் 37 வாக்குகளை வாங்கியும்கூட 325 வாக்குளை மட்டுமே தீர்மானத்துக்கு எதிராக பெற்றிருக்கிறது பாஜக. அதேசமயம், இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தாலும், 2003 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் சோனியாவின் தலைமைப்பண்பு வெளிப்பட்டதைப் போல, இந்த ஆண்டு, ராகுலின் தலைமைப் பண்பு வெளிப்பட்டிருக்கிறது.
பிஜு ஜனதாதளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, சிவசேனா ஆகிய கட்சிகள் தனக்கு ஆதரவளிக்கும் என்று பாஜக கூறியிருந்தது. ஆனால், அவை இந்த விவாதத்திலும், வாக்கெடுப்பிலும் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டன. ஆனால், காங்கிரஸுடன் சேருவதில் தங்களுக்கு தயக்கமில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்குதேசம், திமுக, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகள் தெளிவுபடுத்தி உள்ளன. இடதுசாரிக் கட்சிகள் தீர்மானத்தை ஆதரித்தாலும், காங்கிரஸுடன் அணிசேர்வது குறித்து தேர்தல் சமயத்தில்தான் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
எது எப்படியோ, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாற்றம் நிச்சயம் என்பதற்கான முன்னோட்டமாகவே இந்த தீர்மானம் கருதப்படுகிறது.